Header Ads



ஜனாதிபதி முறையை ஒழிக்க, மகிந்த அணி நிபந்தனையுடன் ஆதரவு

நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபர் பதவியை ஒழிக்கும் சட்டத் திருத்தத்துக்கு ஆதரவு அளிப்பதற்கு, மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான கூட்டு எதிரணி நிபந்தனை விதித்துள்ளது.

நிறைவேற்று அதிகார அதிபர் முறையை ஒழிக்கும் 20 ஆவது திருத்தச் சட்ட வரைவை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப் போவதாக ஜேவிபி அறிவித்திருந்தது.

நாளை நடக்கவிருந்த நாடாளுமன்ற அமர்வில் இந்த திருத்தச் சட்ட வரைவை சமர்ப்பிக்க ஜேவிபி திட்டமிட்டிருந்தது.

எனினும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தை மே 8ஆம் நாள் வரை ஒத்தி வைத்திருப்பதால், அடுத்த கூட்டத்தொடரில் இந்த சட்டவரைவு சமர்ப்பிக்கப்படும்.

இந்த நிலையில் கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன, நிறைவேற்று அதிகார அதிபர் ஆட்சிமுறையை ஒழிக்கும் திருத்தச் சட்ட வரைவை தமது தரப்பு ஆதரிக்கத் தயார் என்று கூறியுள்ளார்.

ஆனால், அரசியலமைப்பு திருத்தத்துக்கு அங்கீகாரம் அளிக்கப்படும் அதே நாளில், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் நிபந்தனை விதித்துள்ளார்.

சிறிலங்காவின் தற்போதைய சட்டங்களின் படி அதிபர் பதவிக்கு மகிந்த ராஜபக்ச மீண்டும் போட்டியிட முடியாத நிலை உள்ளதால், கூட்டு எதிரணி அந்தப் பதவியை ஒழிக்கும் சட்டவரைவுக்கு நிபந்தனையுடன் ஆதரவு அளிக்க முன்வந்துள்ளது.

No comments

Powered by Blogger.