Header Ads



"விஷ்வாசபங்கய" பாராளுமன்றத்தில் நடந்த சுவாரஷ்யங்கள்

(ஆதில் அலி சப்ரி)

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை கடந்த இருவாரங்களாக நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. புதன் கிழமை பிரதமர் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை பாராளுமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படவிருந்த நிலையில் பாராளுமன்ற சுற்றுவட்டம் தொடக்கம் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. 

பாராளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் காலை 9.30க்கு கூடியது. பாராளுமன்ற தின வேலைகள், கேள்வி நேரம் ஆகியன முடிவடைந்ததுடன், முக்கியமான நிகழ்ச்சி நிரலுக்கு சபாநாயகர் சபையை நகர்த்தினார். 12 மணி 40 நிமிட நேர விவாதத்தின் பின்னர் இரவு 9.30 மணிக்கு வாக்கெடுப்பு என நேரம் குறிக்கப்பட்டிருந்தது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை முதன்மையாக் கொண்ட கூட்டு எதிரணியின் 51 உறுப்பினர்களும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 4 உறுப்பினர்களும் 14 அம்சங்களை முன்வைத்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை கொண்டுவந்திருந்தனர். பிரேரணையை கையளித்த முன்னாள் ஜனாதிபதி பிரேரணையில் கையொப்பமிட்டிருக்காததும், பிரேரணையில் கையொப்பமிடாத மக்கள் விடுதலை முன்னணி பிரேரணைக்கு ஆரம்பத்திலிருந்தே ஆதரவு தெரிவித்து வந்ததும் சுட்டிக்காட்டக்கூடியது.

தமிழ் மற்றும் முஸ்லிம் சிறுபான்மையினக் கட்சிகளின் ஆதரவு எவ்வாறானதாக இருந்தாலும், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தளம்பல் கூட்டு எதிரணிக்கு ஓர் உத்வேகத்தைக் கொடுத்திருந்தது. தாம் நம்பிக்கையில்லாப் பிரேரணையில் வெற்றியடைவது உதய சூரியனைப் போன்று உறுதியானதென்று மார்தட்டிக்கொண்டிருந்தனர்.
5ஆம் திகதி சூரியன் உதிக்கும் போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க தோற்கடிக்கப்பட்டிருப்பார் என்ற உறுதியான நம்பிக்கையுடன் கூட்டு எதிரணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன விவாதத்தை ஆரம்பித்துவைத்து உரையாற்றினார். பிரதமர் மீதான குற்றச்சாட்டுக்களை விளக்கினார். ஐக்கிய தேசிய கட்சி பின்னாசன பாராளுமன்ற உறுப்பினர்கள் அடிக்கடி கூச்சலிட்டனர். பொதுஜன பெரமுனவின் நோக்கம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உட்பட அரசாங்கத்தை தோற்கடிப்பதைவிட, 2015ஆம் ஆண்டு மக்கள் அபிலாசைகளை தோற்கடிப்பதாகும்.

இது அடுத்ததாக ஜனாதிபதிக்கும் கொண்டுவரப்படலாம் என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க மூன்று ஜூதாஸ்களின் கதையை படம்பிடித்துக் காட்டினார். இதனடிப்படையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் முப்பெரும் துரோகிகளாக சித்தரிக்கப்பட்டனர். மஹிந்த இந்த பிரேரணையை வெற்றிகொள்வதில் அவ்வளவு விருப்பம் காட்டவில்லை, மைத்திரி பெப்ரவரி 10 தோல்வியை மறைக்க- ரணில் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு பின்னணியில் இருந்து செயற்படல் மற்றும் ரணில் விக்ரமசிங்க திருடர்களுக்கு எதிராக வாக்குப் பெற்று- திருடர்களை காப்பாற்ற முயற்சிப்பது என்ற முப்பெரும் துரோகங்களில் ஈடுபட்டுள்ளதாக பிமல் ரத்னாயக்க தெரிவித்தார்.

முஸ்லிம் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் றவூப் ஹக்கீமின் சிங்கள மொழியிலான உரை அனைவரதும் வரவேற்பை பெற்றது. கூட்டு எதிரணியை சாடி, நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்த்து உரையாற்றிய அவர், அவரது அரசியல் வாழ்க்கையில் பல நம்பிக்கையில்லாப் பிரேரணைகளைக் கண்டுள்ளதாகவும், இதுபோன்று- ஆரம்பத்திலேயே காற்றுப்போன பிரேரணையொன்றைக் காணவில்லையென்றும் தெரிவித்தார். அவர் வழமைக்கு மாறாக அடிக்கடி ’ஆத்தல்’ என்ற வார்த்தையை அதிகம் பாவித்ததும் சுவாரஷ்யமாக இருந்தது.
காலையில் வித்தியாசமான சிரிப்புடன் பாராளுமன்றத்துக்கு வந்த பிரதமர் ரணிலை பின்னர் காணக்கிடைக்கவில்லை. இறுதியாக வாக்கெடுப்பு நேரம் நெருங்கியே அவைக்கு வந்தார்.

சபை பரபரப்பாகவே காணப்பட்டது. பரபரப்புக்கு மத்தியிலும் பிரதான எதிர்க்கட்சித் தலைவரான இரா. சம்பந்தனுடன் சபைக்குள் செல்பி எடுத்து மகிழ்ந்தார் ஐக்கிய தேசியக்கட்சியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாயந்த திஸாநாயக்க. சம்பந்தனுடன் செல்பிக்கு சிரித்தபடி போஸ் கொடுத்தார்.

கூட்டு எதிரணி பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச உரையாற்றும்போது சபை சூடுபிடித்தது. விமலைப் பேசவிடாது குறுக்கீடுகளைச் செய்தனர். சபாநாயகரே! உங்களுக்கு சபையை கட்டுப்படுத்த முடியாதா? என்று விமல் கடும் தொனியில் கேட்டார். அதிகமான ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் உரிமைப் பிரச்சினையை மேலெழுப்பினர். இரு தரப்பிலும் புதனன்று பாராளுமன்ற அமர்வில் அதிகமான உரிமைப் பிரச்சினைகள் மேலெழுந்தன. எவ்வித தேவையும் இன்றி உரிமைப் பிரச்சினைகளை முன்வைக்கும் உறுப்பினர்களை சபாநாயகர்
கரு ஜயசூரிய எச்சரித்தார். சபை சோர்ந்து போயிருந்த போது, எழுந்துநின்ற சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க- எனக்கு அதிகமாக பேசுவதற்கு ஒன்றும் இல்லை. நாம் 122 வாக்குகளால் வெற்றிபெறுவோம். இப்போது நேரம் 12.30.காலநேரத்தை வீணடிக்காது, பகலுணவு சாப்பிட்டுவிட்டு வீட்டுக்குச் செல்வோம் என்று கூறி அமர்ந்தார்.

கூட்டு எதிரணி பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில பௌத்த வாசகமொன்றைக் கூறி உரையை ஆரம்பிக்கும்போதே, ஆளும்கட்சியினரின் சிரிப்பும் கூச்சலும் பதிலாக கிடைத்தது.
விமல் வீரவன்சவின் உரையைப் போன்றே, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி உறுப்பினர் சுசில் பிரேமஜயந்தவின் உரையும் சூடுபிடித்தது. அவரை ஐக்கிய தேசிய கட்சியின் துஷார இந்துனில் குறுக்கிட்டார். கோபமடைந்த சுசில், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியென்பது அதன் செயலாளரல்ல. நானும், நிமலும், திலானும், ஜோன் செனவிரத்னவும் போன்ற பழையவர்களே. நாம் தனி அரசாங்கம் அமைத்துக் காட்டுவோம் என்றார்.

ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹாசீம் உரையாற்ற ஆரம்பித்ததும், கூட்டு எதிரணி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆசனத்திலிருந்து எழுந்து சபைக்கு வெளியே விரைந்தனர்.

அதிக நேரம் தலையைக் குனித்துக்கொண்டு உரையைத் தயாரித்துக்கொண்டிருந்த அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவந்த கூட்டமே சபையில் இல்லை என்றபடி உரையை ஆரம்பித்தார்.

வெளியே சென்றிருந்த கூட்டு எதிரணி பாராளுமன்ற உறுப்பினர்கள் அவரது கூற்றைக் கேட்டு உள்ளே விரைந்தனர். உள்ளே வந்தவர்களைப் பார்த்து, நான் கூறியதுமே வந்தார்கள். ’ஒக்கொம வாடிவெயவ்...

வாடிவெயவ்’ என்று உரத்த தொனியில் அமரச்செய்து உரையாற்றினார். ஐக்கிய தேசிய கட்சியை ஒன்றுதிரட்டிய கூட்டு எதிரணியின் முயற்சிக்கு நன்றியும் தெரிவித்தார்.

இரவு நேரமாகும் போது பாராளுமன்ற கலரி கதிரைகள் நிரம்பியிருந்தன. 19ஆம் திருத்தச் சட்டம் கொண்டுவந்தபோதுகூட இல்லாத அளவு ஊடகவியலாளர்களும் வந்திருந்தனர். ஊடகவியலாளர் செய்தி அறையில் ஒருவர் கதிரையில் இருந்து சிறிது எழும்பும் போது கதிரை காணாமல் போகும்
நிலையேற்பட்டிருந்தது.  அதனை ஊடகவியலாளர்கள் சங்கீதக் கதிரை எனக் கூறி மகிழ்ந்தனர்.

12 மணி நேர விவாதத்தின் இறுதியாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன உரையாற்றினார். கூட்டு எதிரணியில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் ஊழல்களைப் பட்டியலிட்டார். அனைவரும் எதிர்பார்த்திருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த வாக்கெடுப்புக்கு சில நிமிடங்களுக்கு முன்னரே அவைக்கு வந்தார்.

9.30 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பமானது. உறுப்பினர்களின் பெயர் அறிவிக்கப்படும் போது, பிரேரணைக்கு ஆதரவு எனின் பக்ஷை, எதிர் எனின் விபக்ஷை, சமூகமளித்திருக்கவில்லை எனின் எப்சன்ட் மற்றும் வாக்கெடுப்பில் இருந்து தள்ளியிருத்தல் போன்ற நான்கு விடயங்களிலேயே வாக்கெடுப்பு நடைபெற்றது. அதிகமானோருக்கு அப்சன்ட்- சமூகமளிக்கவில்லை என்கின்றபோது பாடசாலைக் காலம் நினைவுக்கு வந்திருக்கும். வாக்களிப்பின் போது தமிழ் உறுப்பினர்கள் இல்லை என்றனர். சிங்கள அமைச்சர்கள் விபக்ஷை என்றனர். பிரதி அமைச்சர் சுஜீவ சேனசிங்கவும் இல்லை என்று கூறியது அனைவரையும் சிரிக்கவைத்தது.

வாக்களிப்பு இறுதியில் பிரதமர் ரணில் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக 76 வாக்குகளும், எதிராக 122 வாக்குகளும் கிடைத்திருந்தது. 26 பேர் வாக்களிப்பில் கலந்துகொண்டிருக்கவில்லை.

கலந்துகொள்ளாதவர்களில் அதிகமானோர் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியைச் சார்ந்தோர். பிரேரணைக்கு கையொப்பமிட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான் மற்றும் நிஷாந்த முத்துஹெட்டிகம ஆகியோரும் வாக்களிப்பில் கலந்துகொண்டிருக்கவில்லை. 

அன்று காலை வரை பிரதமருக்கு எதிராக வாக்களிப்பர் என்று எதிர்பார்த்திருந்த பிரதி அமைச்சர் பாலித ரங்கே பண்டார உள்ளிட்ட 27 ஐக்கிய
தேசிய கட்சி உறுப்பினர்களும் பிரதமருக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர். வாக்களிப்பு நிறைவுபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டதும் பாராளுமன்ற வளாகத்தில் வான்வெடி மற்றும் பட்டாசுகள் கொளுத்தி ஐக்கிய தேசிய கட்சியினர் வெற்றியைக் கொண்டாடினர்.

No comments

Powered by Blogger.