Header Ads



தன் மகளுக்கு 'ஆசிபா' என பெயர் சூட்டிய பத்திரிகையாளர்


காஷ்மீரில் கதுவா பகுதியில் கூட்டு பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட 8 வயது சிறுமி ஆசிஃபாவின் பெயரை தனது  குழந்தைக்கு கேரள பத்திரிகையாளர் ஒருவர் சூட்டியுள்ளார்.

காஷ்மீரில் கதுவா பகுதியில் கடந்த ஜனவரி மாதம் 8 வயது முஸ்லிம் சிறுமி ஆசிஃபா கூட்டு பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இது தொடர்பாக 3 போலீஸார் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் வேதனையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் ‘மாத்ரூபூமி’ நாளேட்டில் உதவிஆசிரியராகப் பணியாற்றும் ரஞ்சித் ராம் என்பவர் தனது 2 மாத மகளுக்கு ஆசிஃபா ராஜ் என்று பெயர் சூட்டியுள்ளார். 

இது குறித்து ரஞ்சித் ராம் கூறுகையில், 

''என்னுடைய 2-வது மகளுக்கு என்ன பெயர் வைப்பது என்று இணையதளத்தில் தேடிக்கொண்டிருந்தேன். அப்போது, காஷ்மீரில் 8 வயது சிறுமி ஆசிஃபா காட்டுமிராண்டித்தனமாக பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட செய்தியை அறிந்து வேதனை அடைந்தேன். என்னுடைய முதல் குழந்தைக்கு 7 வயதாகிறது. என் குழந்தைக்கு இந்த நிலை ஏற்பட்டிருந்தால் என்ன செய்வது என ஒரு நிமிடம் சிந்தித்தேன்.

2 பெண் குழந்தைகள் வைத்திருக்கும் எனக்கு இந்த சம்பவம் நிம்மதி இழக்கச் செய்தது. இதனால், கடந்த பிப்ரவரி 4-ம் தேதி பிறந்த எனது 2-வது குழந்தைக்கு ஆசிஃபாவின் நினைவாக, ஆசிஃபா ராஜ் என்று பெயர் வைக்க முடிவு செய்தேன். மதத்தையும், சாதியையும் நான் இந்தப் பெயரில் பார்க்கவில்லை,

மனிதநேயத்தை மட்டுமே பார்த்து இந்தப் பெயரை என் குழந்தைக்கு சூட்டினேன். என் மனைவி சந்தியாவிடம் இது குறித்து தெரிவித்தேன். அவரும் சம்மதித்தார். அதன்பின், என் விருப்பத்தையும் ஃபேஸ்புக்கில் பதிவிட்டேன்'' எனத் தெரிவித்துள்ளார்.

ரஞ்சித் ராஜ் தனது ஃபேஸ்புக்கில் ஆசிஃபாவின் பெயரை தனது குழந்தைக்கு வைத்திருக்கிறேன் என்று பதிவிட்ட பின், அந்தக் கருத்துக்கு ஆதரவாக 26 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர், 15 ஆயிரம் பேர் அதைப் பகிர்ந்துள்ளனர். 

அவரை சமூக ஊடகங்களில் பாராட்டிப் புகழ்ந்து வருகின்றனர்.

No comments

Powered by Blogger.