April 11, 2018

காலி மாநகர சபையில், நடந்தது என்ன..?

காலி மாநகர சபை மேயரின் சிங்கள மொழியிலான உரை புரியாமல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பெண் உறுப்பினரான ரிஹானா, தமிழ் மொழிபெயர்ப்பு கோரியதால் நேற்று -10- காலி மாநகர சபையின் கன்னிஅமர்வில் பெரும் அமளிதுமளி ஏற்பட்டது.

இந்த சர்ச்சையினால் முதலாவது அமர்வு சுமார் ஒரு மணி நேரம் வரை ஒத்திவைக்கப்பட்டதாக அறிய வருகிறது.

காலி மாநகர சபையின் கன்னி அமர்வு நேற்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 10.30 அளவில் மாநகர மேயர் பிரியந்த சஹபந்து(பொது ஜன பெரமுன) தலைமையில் மாநகர சபை கட்டிடத் தொகுதியில் நடைபெற்றது. முதலாவது அமர்வில் மேயர் சஹபந்து உரையாற்றினார். அவரின் உரையை தொடர்ந்து ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய மு.கா உறுப்பினரான ரிஹானா மஹ்ரூப் மேயரின் சிங்கள உரை புரியவில்லை எனவும் அதற்கு மொழிபெயர்ப்பு வழங்குமாறும் கோரினார்.

இதனையடுத்து சபையில் சலசலப்பு ஏற்பட்டு இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துகள் முன்வைக்கப்பட்டன. சபை நிலையியற் கட்டளை பிரகாரம் இவ்வாறு கோர உரிமையிருப்பதாக ஐ.தே.க(எதிரணி) உறுப்பினர்களும் ஐ.ம.சு.மு உறுப்பினர்களும் வலியுறுத்தினார்கள். கடவத் சதர பிரதேச செயலக பிரிவு இரு மொழி அமுலாக்கல் பிரதேசம் என்பதால் அவருக்கு மொழிபெயர்ப்பு வசதி அளிக்க வேண்டும் என அவர்கள் சுட்டிக்காட்டினார்கள்.

இதற்கு எதிராக ஆளும் தரப்பில் சிலர் கருத்து வெளியிட்டதாக அறிய வருகிறது.

இதனையடுத்து சபை நடவடிக்கைகள் 10 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டன. மொழிபெயர்ப்பாளர் ஒருவர் அழைத்து வரப்பட்ட பின்னர் சுமார் ஒரு மணி நேரத்தின் பின் மாநகர சபை மீண்டும் கூடியது. மாலை வரை சபை நடவடிக்கைகள் இடம்பெற்றதாக அறியவருகிறது.

இதேவேளை, சபை நடவடிக்கைகளை குழப்புவதற்காகவே இவ்வாறு மொழிப் பிரச்சினை எழுப்பப்பட்டதாக ஆளும் தரப்பிலுள்ள ஐ.தே.க உறுப்பினர்கள் சிலர் குற்றஞ்சாட்டினர்.

காலி மாநகர சபையை ஐ.தே.க வென்ற போதும் சபை மேயர் தெரிவின் போது ஐ.தே.க உறுப்பினர்கள் (முஸ்லிம்) 7 பேர் பொதுஜன பெரமுனவுடன் இணைந்து வாக்களித்ததால் பொதுஜன பெரமுன சபையை கைப்பற்றியது தெரிந்ததே. பிரதி மேயர் பதவி ஐ.தே.க உறுப்பினர் பௌஸ் நியாஸிற்கு வழங்கப்பட்டது. இது தொடர்பில் கருத்து தெரிவித்த ரிஹானா மஹ்ரூப், தமது உரிமையையே கோரியதாகவும் சபையை குழப்பும் நோக்கம் கிடையாது எனவும் தெரிவித்தார். 

ஷம்ஸ் பாஹிம் 

7 கருத்துரைகள்:

பாராட்டுக்கள்!  தெற்கில் உள்ளோரின் தமிழ் மொழி உரிமையையும் அதனை அங்கு வளர்க்கும் ஆர்வத்தையும் வடக்கில் இருப்போரும் ஆதரிக்க வேண்டும்.

பாராட்டுக்கள். இந்த நாட்டில் இருக்கும் உரிமைகளும் சட்டங்களும் சரியாக பின்பற்றுபடுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுவது மாபெரும் போராட்டமாகும். சகோதரி ரிஹானாவின் மன உறுதியையும், எதிர் தரப்புக்கு விட்டுக்கொடுக்காமல் உரிமையையும், சட்டத்தையும் நிலை நாட்டியதட்காக மிகப்பெரும் சலூட். முஸ்லீம் காங்கிரசின் தலைமைத்துவம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடமும் ஆகும். தமிழர்களும் தந்தை செல்வாவும் 1956 மொழிப்போராட்டம் செய்தவைக்கு ஒப்பானதாகவே இதை கருதுகிறோம். இந்த செய்தி முழு நாட்டுக்கும், மக்களுக்கும் கொண்டு செல்லப்பட வேண்டிய விடயமாகும். இது மக்களின் விழிப்புணர்வையும் சிந்தனையையும் தூண்டுவதாகவே பார்க்கிறோம். அதே நேரம் ரிஹானாவின் வேண்டுகோளை மதித்து, ஏற்றுக்கொண்டு நடவடிக்கை எடுத்தவர்களும் பாராட்டப்படுவதோடு. நன்றியும் தெரிவிக்கப்படவேண்டும்.

Excellent Rihana when almost all parties concerned and everywhere minorities neglected and their rights to live with dignity not allowed or or we have struggle for it Its reality . So we minorities always fight for our rights.This not agaist co existence

Living in Galle and can't understand Sinhala is a shame. Wait and see Sinhalese will speak to us Tamil very soon.

இன்ஷா அல்லாஹ் பெண்களின் தலைமைத்துவம் எங்கள் சமுதாயத்தை நல்ல நிலமைக்கு கொண்டு செல்லும்.
வாழ்த்துக்கள்......

வாழ்த்துக்கள் ரிஹானா. இலங்கையில் முஸ்லிம்களும் மலையகத் தமிழரும் இருக்கிற வரைக்கும் தமிழ் அழியாது. தமிழ் வாழும்.

சகோதரி அவர்களுக்கு என்னுடைய பாராட்டுக்கள். உங்களை போன்ற முன்மாதிரியான பெண்களை தமிழ் சமூகம் என்றுமே பின்பற்ற வேண்டும்.

Post a Comment