Header Ads



"பல்லின கலாசார சூழலில், ஆடைகளுக்கான உரிமை உறுதி செய்யப்பட வேண்டும்"

-நாகூர் நஹீம்-

இலங்கை பல சமூகங்களில் வாழுகின்ற பல இனங்களைக் கொண்ட ஒரு நாடாகும். இப்பல்லினங்கள் அவர்களது அடையாளத்தைப் பாதுகாப்பதற்காக அவர்களுக்கு உரித்தான வழக்காறுகள், நடைமுறைகள், மொழிகள், மதங்கள், நம்பிக்கைகள், அபிலாசைகள் பாரம்பரியங்களைக் கொண்டிருக்கின்றன. இதன் காரணமாக எமது திருநாட்டில் பல்வேறு வகையான கலாசாரங்களை இச்சமூகங்கள் கொண்டிருக்கின்றன. ஆடை என்பது பல் சமூக கலாசார விழுமியங்களில் முக்கியமானதாகும். பல கலாசார சமூகக் கட்டமைப்பானது பல்லினங்களுக்கடையிலான சகவாழ்வை கட்டியெழுப்புகின்ற ஒரு அடிப்படையைக் கொண்டிருக்க வேண்டியதுடன் அவற்றுக்கான முறைமைகள் மற்றும் பாங்குகளைக் கொண்டதாகவும் இருக்க வேண்டும்.

அத்தகைய பல் கலாசார சமூகக் கட்டமைப்பு தொடர்பான புரிந்துணர்வைக் கட்டியெழுப்பி அவைகளை மதிக்கும் போதே இனங்களுக்கிடையிலான அமைதியான சகவாழ்வுக்கான சூழல் நாட்டில் கட்டியெழுப்பப்பட முடியும்.

நல்லாட்சி (Good governance) என்பது அரசாங்கக் கொள்கைகளைத் தீர்மானித்து அவைகளை நடைமுறைப்படுத்துவதற்கான ஒரு செயன்முயைறாகும். நல்லாட்சியில் ஒவ்வொருவரினதும் கலாசார ரீதியான அடையாளத்தை மதிப்பதும் அவசியமான காரணியாக அமைகின்றது. அவ்வாறு மதிக்கப்படும் போதே பல்லினங்களுக்கிடையில் பரஸ்பர நம்பிக்கை கட்டியெழுப்பப்பட முடியும். பிரசைகள் என்ற வகையில் ஒவ்வொருவருக்கும் இடையிலான புரிந்துணர்வு விரிவாகும். நிருவாக நோக்கங்களுக்கான பல்லினங்களைச் சேர்ந்த மக்களின் பங்குபற்றுதல் விருத்திடையும். ஒருவர் மற்றரை மதிக்கக் கற்றுக்கொள்ளுவார். வெளிப்படைத்தன்மை விருத்தியடையும். ஒவ்வொருவரும் நாட்டின் சட்டத்துக்கு கட்டுப்பட்டு நடக்கின்ற மனிதராக மாறுவார்.

திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் தற்போது உருவாகியுள்ள நிலைமையும் இந்த அடிப்படையிலேயே நோக்கப்பட வேண்டும். இப்பாடசாலை இந்துக் கலாசார விழுமியங்ளைப் பேனுகின்ற மாணவர்கள் கற்கின்ற ஒரு பாடசாலையாகும். அதேநேரம் இந்தப் பாடசலைக்கு முஸ்லிம் ஆசிரியைகள் நியமிக்கப்பட்டுப் பணியாற்றுகின்றனர். இது நாட்டில் நல்லாட்சியுடன் தொடர்புபட்ட நிருவாக செயற்பாடாகும். இந்தப் பாடசலையில் இந்துக் கலாசாரங்கள் உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்ற அதேநேரத்தில் முஸ்லிம் ஆசிரியைகளும் அவர்களுக்கு உரித்தான ஆடை அணிவதன் மூலம் அவர்களது கலாசார ரீதியான அடையாளத்தைப் பேனுவதற்கான நிலைமை ஏற்படுத்தப்பட வேண்டும். இங்கு சகவாழ்வு என்பது அவரவர் கலாசார அடையாளங்ளை மதிப்பதன் மூலமே ஏற்படுத்தப்பட முடியும். இந்தப் பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியைகள் அவர்களுக்கு உரித்தான ஆடைளை அணிவது மாணவர்கள் பல்லினங்கள் தொடர்பான கலாசாரங்களையும் அடையாளத்தையும் அறிந்து கொள்வதற்கும் அதன் மூலம் பரஸ்பர புரிந்துணர்வை கட்டியெழுப்புவதற்கான சூழலை விருத்தி செய்வதற்குமான ஒன்றாகவே பயன்படுத்தப்பட வேண்டும். மாறாக, இது பல்லினங்களுக்கிடையிலான சகவாழ்வை குழப்பி முரண்பாட்டை உருவாக்குகின்ற ஒன்றாக அமையாது. அவ்வாறு நோக்கப்படவும் முடியாது. இத்தகைய போக்கு இனங்களுக்கு உரித்தான பாடசாலைகள் அவசியமா என்ற கேள்வியை உருவாக்கி விட முடியும். 

இந்த விடயம் அரசாங்க நிருவாகத்துடன் தொடர்புபட்ட விடயமாகவுள்ளதால், தேவையற்ற இன விரிசலை உண்டுபண்ணுகின்ற ஆர்ப்பாட்டங்களைத் தவிர்த்து நிருவாக ரீதியான தீர்வு ஒன்றினைப் பெறுவதற்கு நாம் அதிகாரிகளுக்கும் அசாங்கத்திற்கும் அழுத்தம் வழங்க வேண்டும். உரிய தீர்வினைப் பெறுவதற்கு இன ஒற்றுமையைப் பற்றிச் சிந்திக்கின்ற அரசியல்வாதிகள் முன்வரவேண்டும்.  

இவ்வாசிரியைகளுக்கு வழங்கப்பட்டுள்ள தற்காலிக இடமாற்றமானது அங்கு ஏற்பட்டுள்ள சூழ்நிலையைத் தணிப்பதற்கான ஒன்றாகவே அமைய வேண்டும். அங்குள்ள அதிபருக்கும் ஆசிரிய சமூகத்திற்கும் பெற்றோர்களுக்கும் பல்லின கலாசார சமூகத்தில் நல்லாட்சியின் அவசியம் உணர்த்தப்பட்டு அவர்களது பிழையான சிந்தனைகள் களையப்படுவதற்கான விழிப்புணர்வும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவேண்டும். குறித்த ஆசிரியைகளின் தற்காலிக இடமாற்றம் அப்பாடசலையில் உரிய சூழலை ஏற்படுத்துவதன் மூலம் இரத்துச் செய்யப்படவேண்டும். அதற்கான சூழலை உருவாக்குவது நிருவாகிகளின் கடமையாகின்றது. 

No comments

Powered by Blogger.