Header Ads



உள்ளூராட்சி சட்டத்தில், மீண்டும் திருத்தம் உறுப்பினர்களை குறைக்க குழு

அதிகரித்துள்ள உள்ளூராட்சி சபை உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும். இதற்காக நிபுணர்கள் குழுவொன்று விரைவில் நியமிக்கப்படவிருப்பதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடல்களை நடத்தி, எல்லை நிர்ணயத்தில் உரிய திருத்தங்களை மேற்கொள்ளும் வகையில் உள்ளூராட்சி சபைச் சட்டத்தில் திருத்தம் தயாரிக்கப்படவுள்ளது. இதன்போது சில வட்டாரங்களை ஒன்றாக இணைப்பதற்கும், விகிதாசாரத்தின் அடிப்படையில் தெரிவுசெய்யப்படும் உறுப்பினர்களைக் குறைப்பதற்கும் யோசனைகள் உள்ளடக்கப்படவிருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

அதேநேரம், மாகாண சபைகளுக்கான தேர்தலை இவ்வருட இறுதிக்குள் நடத்துவதற்கான சகல சட்டரீதியான தடைகளையும் நிவர்த்திசெய்வதற்கு முழுமையான ஒத்துழைப்பை அமைச்சு வழங்கும் என்றும் கூறினார்.

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் பைசர் முஸ்தபா இதனைத் தெரிவித்தார். 

நடைபெற்றுமுடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் உறுப்பினர்களின் எண்ணிக்கை 8000விட அதிகமானது. இந்த எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஜனாதிபதி உள்ளார். பெண்களின் விகிதாசாரம் 25 வீதமாக அதிகரிக்கப்பட்டமை மற்றும் வட்டாரமுறையையும் உள்ளடக்கிய கலப்புமுறை என்பவற்றால் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பெண்களின் விகிதாரசம் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற இலக்கை நோக்கிச் சென்றமையால் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இம்முறை 1919 பெண்கள் தெரிவாகியுள்ளனர். அது மாத்திரமன்றி பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிறிய கட்சிகளையும் திருப்திப்படுத்தும் வகையில் திருத்தங்களை மேற்கொண்டமையும் உறுப்பினர் எண்ணிக்கை அதிகரிப்பதற்குக் காரணமாக அமைந்தது என்றார்.

உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் நடைமுறைச் சிக்கல்கள் பல எழுந்துள்ளன. இவற்றை நிவர்த்தி செய்யும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்யவுள்ளோம். சட்டத்திருத்தத்தை வரைவதற்காக நிபுணர்கள் குழுவொன்று விரைவில் நியமிக்கப்படும். மேற்கொள்ளவேண்டிய திருத்தங்கள் தொடர்பில் துறைசார் நிபுணர்கள், பொது மக்கள், அரசசார்பற்ற நிறுவனங்கள், தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் உள்ளிட்ட பல தரப்பினருடனும் கலந்துரையாடல்களை நடத்த எதிர்பார்த்துள்ளோம்.

எவ்வாறு இருந்தாலும் மோசடி நிறைந்த விருப்புவாக்கு முறைக்குச் செல்லப் போவதில்லை. பழைய முறைக்குச் செல்வதில்லையென்ற நிலைப்பாட்டில் சுதந்திரக் கட்சி உள்ளது. அதுமாத்திரமன்றி மோசடியான தேர்தல் முறையை மாற்றுவதற்கே ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு மக்கள் ஆணை வழங்கப்பட்டுள்ளது. அந்தப் பொறுப்பை அவர்கள் நிறைவேற்ற வேண்டும். எனினும், சிலர் தமது இனம், மத, குல அடிப்படையில் வாக்குகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் பழைய முறைக்குச் செல்லவேண்டும் என வலியுறுத்துகின்றனர் என்றார்.

இதேவேளை, மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கு காணப்படும் சட்டரீதியான தடைகளை நிவர்த்திசெய்யும் பொறுப்பு பாராளுமன்றத்தின் முன்னிலையிலேயே இருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

மாகாணசபைகளுக்கான தேர்தலை விரைவில் நடத்துவதற்கு முழு பாராளுமன்றமும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் கோரிக்கைவிடுத்துள்ளார். இதற்கமைய பாராளுமன்றம் உரிய தீர்வொன்றை எடுக்குமாயின் தேர்தல்களை நடத்துவதற்கான முழு ஒத்துழைப்பையும் வழங்க முடியும். அமைச்சர் என்ற ரீதியில் மாகாண சபைகளுக்கான எல்லை நிர்ணய அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளேன். எல்லைநிர்ணயத்தில் குறைபாடுகள் இருப்பதாக அரசியல் கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன. இந்தக் குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும். இல்லாவிட்டால் புதிய எல்லைநிர்ணயம் மேற்கொள்ளப்பட வேண்டும். எந்த நடவடிக்கையாக இருந்தாலும் அவற்றை மேற்கொண்டு இவ்வருடத்துக்குள் மாகாண சபைத் தேர்தல்களை நடத்த தாம் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

தேர்தலை நடத்துவதற்கு சுதந்திரக் கட்சி பயப்படவில்லை. மாகாணசபைகள் அமைச்சுப் பொறுப்பை வகிப்பது சுதந்திரக் கட்சி உறுப்பினர் என்பதால் தேர்தல் பிற்போடப்படுவதாக குற்றச்சாட்டுக்களை சுமத்துகின்றனர் என்றார்.

மகேஸ்வரன் பிரசாத்

No comments

Powered by Blogger.