Header Ads



ஜெனரல் அமல் கருணாசேகர, சிக்கியது எப்படி..?

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகரவுக்கு இருந்த தொடர்புகளை, தொலைபேசி தொடர்புகளின் மூலமே குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.

கோத்தாபய ராஜபக்சவின் வழிகாட்டலில், சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவினால் நடத்தப்பட்ட இந்த கடத்தலுக்கான வலுவான ஆதாரங்களை சேகரித்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

“நீதிமன்றத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவு முன்வைத்துள்ள சான்றுகள் இந்தத் தொடர்வை வெளிப்படுத்தியுள்ளன.

2008 மே 22ஆம் நாள் இரவு கீத் நொயார் கடத்தப்பட்ட தகவலை, அப்போது பாதுகாப்புச் செயலராக இருந்த கோத்தாபய ராஜபக்சவுக்கு, ‘தி  நேசன்’ இதழின் ஆசிரியராக இருந்த லலித் அழககோன், தொலைபேசி மூலம் தெரியப்படுத்துகிறார்.

இதையடுத்து, அன்று இரவு 11.36 மணியளவில்,  காவல்துறை மா அதிபராக இருந்த ஜெயந்த விக்கிரமரத்னவை தொலைபேசியில் அழைத்துப் பேசினார் கோத்தாபய ராஜபக்ச.

அதன் பின்னர் அவர், இரவு 11.39 மணியளவில், முன்னாள் புலனாய்வுப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரணவுடன் தொலைபேசியில் தொடர்பு கொள்கிறார்.

அதற்குப் பின்னர், மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண 11.41 மணியளவில், இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளராக இருந்த பிரிகேடியர் அமல் கருணாசேகரவுக்கு வழங்கப்பட்டிருந்த தொலைபேசிக்கு அழைப்பை எடுத்துள்ளார்.

அவர், கொழும்பில் உள்ள இராணுவப் புலனாய்வுப் பிரிவின் திரிபொலி முகாழுக்கு அழைப்பை எடுத்தார்.

அப்போது பிரிகேடியர் அமல் கருணாசேகரவின் தொலைபேசி இலக்கம், ஜாவத்தை பிரதேசத்தில் அவர் இருந்ததை காட்டுகிறது.

அதேவேளை, திரிபொலி முகாமின் தொலைபேசி இலக்கம் மல்வானையில் இருந்ததை காட்டுகிறது.

பிரிகேடியர் அமல் கருணாசேகரவின் தொலைபேசி இலக்கத்தில் இருந்து இரவு 11.48 மணியளவில், திரிபொலி முகாமின் கட்டளை அதிகாரியாக இருந்த மேஜர் புலத்வத்தையின் தொலைபேசிக்கு எடுக்கப்பட்ட மற்றொரு அழைப்பும் பதிவாகியுள்ளது.

அப்போது அவரும் மல்வான பிரதேசத்தில் இருந்தார் என்பதை தொலைபேசி பதிவுகள் உறுதி செய்துள்ளன. நொயார் கடத்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த இடமே அதுவாகும்.

இந்த அழைப்பின் பின்னரே நொயார் விடுவிக்கப்பட்டார். இந்த ஆதாரங்களை மறுக்க முடியாது.



மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர கைது செய்யப்பட்டுள்ளது இந்த விசாரணைகளில் முக்கிய திருப்பம்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அவர் அளிக்கப் போகும் வாக்குமூலத்தில் தான் இந்த விசாரணைகளின் எதிர்காலம் தங்கியுள்ளது. இந்த ஆதாரங்களை அவரால் மறுக்க முடியாது.

மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகரவிடம் விரைவில் வாக்குமூலம் பெறுவதற்கு நீதிமன்ற உத்தரவை கோருவோம். மருத்துவ அறிக்கைகளிலேயே இது தங்கியுள்ளது.

அமல் கருணாசேகர கைது செய்யப்பட்டதை அடுத்து, இந்த விவகாரத்துடன் தொடர்புடைய மற்றொருவரான மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரணவை குற்றப் புலனாய்வுப் பிரிவு நெருங்கியுள்ளது.

இவரிடம் ஏற்கனவே ஒரு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. அமல் கருணாசேகரவின் வாக்குமூலம் இவரை சம்பந்தப்படுத்தினால், அவரும் விரைவில் கைது செய்யப்படக் கூடும்.” என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

1 comment:

  1. One instruction from my3, all will be released..............

    ReplyDelete

Powered by Blogger.