Header Ads



ஐரோப்பிய ஒன்றியத்திடம், ஹக்கீம் முறைப்பாடு


முஸ்லிம்களுக்கெதிரான இனரீதியான வன்செயல்கள் மோசமடைவதற்கு வெறுப்பூட்டக்கூடிய பேச்சுக்களை தடைசெய்வதற்கு சட்டபூர்வமான வழிவகைகள் மேற்கொள்ளப்படாமையும், புலனாய்வுத்துறையின் அசமந்தப்போக்கும், தாக்குதல்களைத் தடுத்து நிறுத்துவதற்கு உடனடியாக உரிய நடவடிக்கைள் எடுக்கப்படாமையும் முக்கிய காரணிகள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம், தம்மைச் சந்தித்த ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளிடம் சுட்டிக்காட்டினார்.

தற்பொழுது இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் 11 பிரதிநிதிகளைக் கொண்ட உயர்மட்டத் தூதுக்குழு திரு. ஜன் சஹ்ரடில் மேப் தலைமையில் வியாழாக்கிழமை (05) முற்பகல் அமைச்சர் ஹக்கீமின் பாராளுமன்ற அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடியபோதே அமைச்சர் இதனைக்கூறினார்.

பிரஸ்தாப கலந்துரையாடலின் போது அவர்களிடம் அமைச்சர் ஹக்கீம் மேலும் தெரிவித்ததாவது,

மூன்று தசாப்தகாலம் நீடித்த கோர யுத்தம் முடிவடைந்து நாட்டில் அமைதி நிலவ ஆரம்பித்த சூழ்நிலையில் சிறுபான்மைச் சமூகங்களில் முஸ்லிம்கள் மீதான இனவாத செயல்கள் அரசியல் பொருளாதார உள்நோக்கங்களை வைத்து தீயசக்திகள் முன்னெடுத்து வருகின்றன.

உங்கள் நாடுகளில் இவ்வாறான செயல்கள் நடக்க நேரும் போது உளவுத்துறை அதனை விரைவாக கண்டறிந்து விடுவார்கள். ஆனால், விழிப்புடனிருந்து துப்புத்துலக்கக்கூடிய உளவுத்துறையின் செயல்பாடு இங்கு மந்தகதியிலேயே இருக்கின்றது. அத்துடன், வெறுப்பூட்டக்கூடிய பேச்சை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. 

மனிதஉரிமை மீறல் விடயங்கள் பற்றியும், யுத்தக்கைதிகளின் புனர்வாழ்வு மற்றும் விடுதலைபற்றியும் பரவலாகப் பேசப்படுகின்றது. அது பற்றி தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவதப்படுத்தும் அரசியல்வாதிகள் வலியுறுத்தி வருவதோடு, பொது அமைப்புக்களும் குரல்கொடுத்து வருகின்றன. 

முஸ்லிம்களுக்கெதிரான அண்மைய இனவாத வன்செயல்களையடுத்து நாட்டுக்கு வரும் வெளிநாட்டு உல்லாசப்பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இங்கு முதலீடுகளை மேற்கொள்வதற்கும் முதலீட்டாளர்கள் தயக்கமடைந்துள்ளனர்.

தேசிய அரசாங்கம் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் அNதுவேளையில் நாட்டில் பார்ய பிரச்சினையாக உருவாகியுள்ள இனங்காணப்படாத சிறுநீரக நோயை கட்டுப்படுத்தவதற்கு பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் தோறும் அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

எனது பொறுப்பிலுள்ள நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சைப் பொறுத்தவரை சுத்தமான குடிநீர் விநியோகத்தை நாட்டின் பல பகுதிகளுக்கும் விஸ்தரித்து வருகின்றது. நிலத்தடி நீர் மாசடைந்துள்ள பிரதேசங்களிலும், சுத்தமான குடிநீருக்கு தட்டுப்பாடு நிலவும் பிரதேசங்களிலும் கடல் நீரை சுத்திகரித்து பாவனையாளர்களுக்கு வழங்குவதற்கு நவீன தொழிநுட்ப பொறிமுறைகளை கையாண்டு நாம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.

நல்லாட்சி அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கும் நோக்கத்தில் பாராளுமன்றத்தில் பிரதமருக்கெதிராக கூட்டு எதிரணியினர் கொண்டு வந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை வெற்றிகரமாக முறியடித்துள்ளோம் என்றார்.

அமைச்சர் கூறியவற்றை கவனமாகச் செவிமடுத்த தூதுக்குழுவினர் இவ்வாறான விடயங்கள் மீது போதிய கவனம் செலுத்தப்படும் என தெரிவித்தனர்.

இக்கலந்துரையாடலில் பிரதியமைச்சர்களான எச்.எம்.எம்.ஹரீஸ், பைசால் காசிம், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ்.தௌபீக், ஏ.எல்.எம்.நசீர், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பிரதித் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எச்.எம்.சல்மான் ஆகியோரும் பங்குபற்றினர். 

ஏ.ஹில்மி முஹம்மத்
ஊடகப் பணிப்பாளர்

3 comments:

  1. But now time to act but boasting the victory ...... if at least not start to work properly to put culprits in jail... you will get another challenge ... cut the heads of snakes if not they will bite your surely

    ReplyDelete
  2. முஸ்லிம்களுக்கு இந்த நாட்டில் ஏட்பட்ட இந்த இனவன்முறைகள், நெருக்கடிகள் எல்லாம் திட்டமிட்டு 14 வருடங்களாக ( ஹெல உறுமய ஆரம்பிக்க பட்ட காலத்தில் இருந்து.. அநாகரிக தர்மபால சிந்தனை .. இன்னும் சில பலசேனாக்கள்.. ) தீவிரமாக முன்னெடுக்கப்படுகிறது. இது பெரும்பான்மை மக்களிடம் மிகவும் கபடத்தனமாக, முஸ்லிம்கள் பற்றிய பிழையான தகவல்களை சிங்கள மக்களிடம் அதிலும் இளைய சமூகத்திடம் பரப்பி வருகிறார்கள்.. இப்படியான சூழலையும் அதன் பாதிப்பையும் உணர்ந்து கொள்ள முடியாத, அதட்கான மிகவும் உறுதியான நடவடிக்கைளை முன்னெடுக்க வக்கில்லாதவர்களாகவும், தகுதி அற்றவர்களாகவுமே முஸ்லீம் அரசியல் தலைமைகள் ( ஹக்கீம், றிசாத், பெளஸி, ஹிஸ்புல்லாஹ், .......) இருக்கிறார்கள். இதட்கான முழுப்பொறுப்பும் இவர்களையே சாரும். இவர்கள் முஸ்லீம் சமூகத்தை விற்று சுயநல அரசியல் செய்கிறார்கள். முஸ்லிம்கள் முதலில் இதை திருத்திக்கொள்ளாத வரை இன்னும் முஸ்லிம்கள் இது மாதிரியான பிரச்சனைகளை முகம் கொடுத்துக்கொண்டே இருப்பார்கள். முஸ்லிம்கள் மேலும் கவனத்தில் கொள்ள வேண்டிய சில விடயங்கள்.

    ** சட்டம் ஒழுங்கு இந்த நாட்டில் இனம், தராதரம், மொழி பாராது அதன் கடமையை செய்ய வேண்டும்.
    ** இந்த நாட்டில் சிங்கள நீதியும், போலீசும், பாதுகாப்பு படையுமே இருக்கிறது. இது பரிபூரணமாக மாற்றி அமைக்கப்பட்டு அது இலங்கை மக்களுக்கான அமைப்பாக மாற்றி அமைக்கப்பட வேண்டும்.
    ** ராஜபக்ச, ரணில், மைத்திரி முஸ்லிம்களை மிகவும் கேவலமாக நடத்தியதோடு அவர்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த தவறியுள்ளார்கள். பேரினவாதிகளை கண்டும் காணாமலும் இருந்துள்ளார்கள். இதை உணர்ந்தவர்களாக முஸ்லிம்கள் தங்களது அரசியலை முன்னெடுக்க வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.