Header Ads



முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்முறையின் காயங்கள் ஆற­வில்லை..! (ரமழான் நோன்பும் வருகிறது)

மார்ச் 2018 இல் கண்டி, திகன மற்றும் தெல்­தெ­னிய பகு­தி­களில் இடம்­பெற்ற முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­செ­யல்­களின் காயங்கள் இன்னும் ஆற­வில்லை அல்­லது ஆற்­றப்­ப­ட­வில்லை என்­றுதான் கூற­வேண்­டி­யி­ருக்­கி­றது. 

'பாதிக்­கப்­பட்ட பள்­ளி­வா­சல்கள், வீடுகள் மற்றும் கடைகள் சிங்­கள – தமிழ் புத்­தாண்­டுக்கு  முன்பு புனர்­நிர்­மா­ணிக்­கப்­படும் என அர­சாங்கம் உறு­தி­ய­ளித்­தி­ருந்­தாலும் இது­வரை எந்­தவொரு பள்­ளி­வா­சலோ, வீடோ, கடையோ புன­ர­மைக்­கப்­ப­ட­வில்லை' என்ற குற்­றச்­சாட்டை கண்டி மாவட்ட அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் கண்டி  மாவட்­டக்­கிளை முன்­வைத்­துள்­ளது.

ரம­ழானை நோக்கி முஸ்­லிம்கள்

மே மாதம் நடுப்­ப­கு­தியில் முஸ்­லிம்கள் ரமழான் மாதத்தை எதிர்­நோக்­கி­யுள்­ளதால் பாதிக்­கப்­பட்­டுள்ள பள்­ளி­வா­சல்­களும், வீடு­களும் கடை­களும் நோன்­புக்கு  முன்பு புன­ர­மைக்­கப்­ப­ட­வேண்டும் என புனர்­வாழ்வு, சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு மற்றும் இந்­து­மத அலு­வல்கள் அமைச்சர் டி.எம்.சுவா­மி­நா­த­னிடம் உலமா சபை கோரிக்கை முன்­வைத்­துள்­ளது.

மார்ச்சில் இன­வாதக் கும்­பலால் திட்­ட­மிட்டு மேற்­கொள்­ளப்­பட்ட வன்­செ­யல்­க­ளினால் கண்டி, திகன மற்றும் தெல்­தெ­னிய பகு­தி­களில் 289 வீடுகள், 17 பள்­ளி­வா­சல்கள் மற்றும் 217 கடைகள் சேத­மாக்­கப்­பட்­டுள்­ளன. 3 பள்­ளி­வா­சல்கள் முற்­றாக எரிக்­கப்­பட்­டுள்­ளன. இந்த வன்­செ­யல்கள் கார­ண­மாக ஆயி­ரக்­க­ணக்­கான முஸ்­லிம்கள் வீடு­க­ளையும் தங்கள் பொரு­ளா­தா­ரத்­தையும் இழந்­தனர்.

வன்­செ­யல்­களால் பாதிக்­கப்­பட்­டுள்ள முஸ்­லிம்கள் தற்­போது எதிர்­நோக்­கி­யுள்ள அசௌ­க­ரி­யங்கள் தொடர்­பாக உலமா சபை கண்டி மாவட்­டக்­கிளை அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீ­மிடம் கலந்­து­ரை­யா­டி­யுள்­ளது. உலமா சபையின் கண்டி மாவட்­டக்­கிளை காரி­யா­ல­யத்தில் அமைச்சர் ஹலீ­முக்கும், உலமா சபை பிர­தி­நி­தி­க­ளுக்­கு­மி­டை­யி­லான கலந்­து­ரை­யாடல் இடம்­பெற்­றது.

மழையால் மக்கள் பாதிப்பு

தற்­போது கண்டிப் பகு­தியில் தொட­ராக மழை­பெய்து வரு­வதால் பாதிக்­கப்­பட்ட மக்கள் பல சிர­மங்­களை எதிர்­நோக்­கி­யுள்­ளனர். வீடுகள்  சேதங்­க­ளுக்­குள்­ளாக்­கப்­பட்­டதால் பலர் உற­வினர் வீடு­களில் தங்­கி­யி­ருக்­கின்­றனர். மேலும் சிலர் இரு மாத­கா­லத்­துக்கே வாடகை வீடு­களைப் பெற்­றுள்­ளனர். தற்­போது வன்­செயல் இடம்­பெற்று இரு­மா­த­காலம் அண்­மிக்கப் போகி­றது.

பாதிக்­கப்­பட்ட பள்­ளி­வா­சல்கள், வீடுகள், கடை­களை ஏப்ரல் 29 ஆம் திக­திக்கு முன்பு புன­ர­மைத்துத் தரு­வ­தாக இரா­ணுவத் தள­பதி உறு­தி­ய­ளித்­தி­ருந்­தாலும் அதுவும் நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை.

கைது­களும் சட்ட நட­வ­டிக்கைகளும்

கண்டி மாவட்­ட­மெங்கும் இடம்­பெற்ற இன ரீதி­யி­லான வன்­மு­றை­க­ளின்­போது முஸ்லிம் வர்த்­தக நிலை­யங்கள், பள்­ளி­வா­சல்கள் மீது தாக்­குதல் நடாத்தி தீ வைத்­தமை தொடர்பில் கைதான 32 பேரை எதிர்­வரும் மே 2 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு தெல்­தெ­னிய நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டுள்­ளது.

இது இவ்­வா­றி­ருக்க, இரு பிர­தேச சபை உறுப்­பி­னர்­க­ளைத்­தேடி விசா­ர­ணைகள் தொடர்­வ­தாக சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்­தும பண்­டார குறிப்­பிட்­டி­ருக்­கிறார்.

ஏற்­க­னவே இரு பிர­தேச சபை உறுப்­பி­னர்கள் கைது செய்­யப்­பட்­டுள்­ள­துடன், வன்­மு­றை­களின் பின்­ன­ணியில் செயற்­பட்ட இன­வாத சக்­தி­களும் சட்­டத்தின் பிடிக்குள் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ள­தாகக் கூறிய அமைச்சர், இரு பிர­தேச சபை உறுப்­பி­னர்கள் தலை­ம­றை­வா­கி­யுள்ள நிலையில் அவர்­களைக் கைது­செய்ய நட­வ­டிக்கை எடுத்­துள்­ள­தா­கவும் குறிப்­பிட்­டுள்ளார்.

கண்டி மாவட்­ட­மெங்கும் இடம்­பெற்ற இன ரீதி­யி­லான வன்­மு­றை­களை திட்டம் தீட்டி அரங்­கேற்­றி­யமை தொடர்பில் கைது செய்­யப்­பட்ட மஹ­சொஹொன் பல­கா­யவின் தலைவர் அமித் வீர­சிங்க, சிங்­கள தேசிய சக்­தியின் பிர­தானி சுரேந்ர சுர­வீர, பிக்கு ஒருவர் உள்­ளிட்ட 10 பேர் விளக்­க­ம­றி­யலில் உள்ள அதே நேரம் குண்­ட­சாலை பிர­தேச சபை உறுப்­பினர் அர­லிய வசந்த உள்­ளிட்ட இரு அர­சியல்வாதி­களும் பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­வி­னரால் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

இந்­நி­லையில் இந்த சம்­பவம் தொடர்பில் பிர­தா­ன­மாக கைது செய்­யப்­பட்ட சந்­தேக நபர்கள் 32 பேர் வரை தற்­போது விளக்­க­ம­றி­யலில் உள்­ளனர். இவர்­களில் இரா­ணு­வத்­தினர் சிலரும் உள்­ள­டங்­கு­கின்­றனர்.

கண்­டியை ஆண்ட மன்­னர்கள் முஸ்­லிம்­க­ளுக்கு மிகுந்த மதிப்­ப­ளித்­தனர். பல ஊர்­களை முஸ்­லிம்­க­ளுக்கு அன்­ப­ளிப்பு செய்­துள்­ளனர். இப்­படி தேசிய மர­பு­ரிமை நக­ராகக் கரு­தப்­படும் கண்­டியின் வர­லாற்றில் முஸ்­லிம்­களின் பங்­க­ளிப்பை சிங்­கள மன்னர்கள் மெச்­சி­யி­ருக்­கின்­றனர். அவர்­க­ளுக்கு அன்று அடைக்­கலம் கொடுத்­தி­ருக்­கின்­றனர். ஆனால் இன்று நிலைமை தலை­கீ­ழாக மாறி­யி­ருக்­கின்­றது. சில அர­சியல் தலை­மை­க­ளினால் முஸ்­லிம்கள் மிதிக்கப்படுகின்றன. அவர்களின் ஆசிர்வாதத்துடன் முஸ்லிம்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டு அழிக்கப்படுகின்றன. இனவாதிகள் முஸ்லிம்களின் இருப்பை கேள்விக்குறியாக்கியிருக்கின்றனர். இது ஒரு மோசமான நிலைமையாகும்.

இதனை தடுத்து நிறுத்த சட்டம் இறுக்கமாக்கப்பட வேண்டும். அத்தோடு காயங்கள் ஆற்றப்பட வேண்டும். நடவடிக்கைகளை முன்னெடுப்பதை அரசாங்கம் தொடர்ந்தும் தாமதிக்கக் கூடாது. மக்களின் இயல்பு வாழ்க்கையை மீளக் கட்டியொழுப்ப அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பாகும்.

-Vidivelli

No comments

Powered by Blogger.