Header Ads



"இனவாதத் தீயும், இலங்கையின் எதிர்காலமும்"

(பேராசிரியர் M.S.M.ANAS - பேராதனை பல்கலைக்கழகம்)

சர்­வ­தேச வர்த்­தகம் தொடர்பில் இலங்­கையின் நிலை­வ­ரங்­க­ளையும் சட்ட ஒழுங்­கு­மு­றை­க­ளையும் ஆராய்­வ­தற்­காக கடந்த வாரம் இலங்கை வந்­தி­ருந்த ஐரோப்­பியப் பாரா­ளு­மன்ற குழு­வினர் (INTA) ‘கண்டி கல­வ­ரத்­தின்­போது வழங்­கப்­பட்ட பாது­காப்பு திருப்­தி­யற்­றது. இதைத் தடுத்து நிறுத்த உட­ன­டி­யாக நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டி­ருக்க வேண்டும்’ என்று கூறி­யுள்­ளது. அனைத்து சமூ­கங்­க­ளுக்குமிடை­யிலும் நல்­லு­ற­வு­களை உறு­திப்­ப­டுத்­தக்­கூ­டிய நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட வேண்டும். கண்டி கல­வ­ரத்தில் சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் சட்­டத்தின் முன் கொண்டு வரப்­பட்டுத் தண்­டனை வழங்­கப்­பட வேண்டும். அதேபோல் குற்­ற­வா­ளி­க­ளுக்குத் தண்­டனை வழங்­காத கலா­சாரம் நிறுத்­தப்­பட வேண்டும் என்றும் ஐரோப்­பிய ஒன்­றிய அங்­கத்­த­வர்கள் இலங்கை அரசை எச்­ச­ரித்­துள்­ளனர்.

சட்ட ஆட்­சிக்கும் பன்மைச் சமூக உற­வு­க­ளுக்கும் மதிப்­ப­ளிக்கும் அவ­சி­யத்தை இலங்கை அர­சுக்கு சர்­வ­தேச சமூகம் பல சந்­தர்ப்­பங்­களில் சுட்­டிக்­காட்டி உள்­ளது. கண்­டியில் குழப்­பங்கள் நடந்த இடங்­க­ளுக்குச் சென்று பார்­வை­யிட்ட பின்னர் தான் ஐரோப்­பிய ஒன்­றி­யக்­குழு தனது கருத்­துக்­களை முன்­வைத்­துள்­ளது.

சர்­வ­தேச சமூகம் அதன் செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்­கலாம். அல்­லது அதில் தாம­தங்கள் நிக­ழலாம். நாட்டில் சிறு­பான்­மைக்கு எதி­ரான குறிப்­பாக, முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றைகள் நிறுத்­தப்­பட வேண்டும். அதை எப்­படி சாதிக்­கலாம்? அதற்­கான சமா­தான வழி­மு­றைகள் என்ன? என்­பதை முஸ்­லிம்­களும் சம்­பந்­தப்­பட்ட எல்லாத் தரப்­பி­னரும் புரிந்து செயற்­படும் தேவை இன்று எழுந்­துள்­ளது.

1915 இல் இருந்து முப்­ப­துக்கும் அதி­க­மான சிறிய, பெரிய முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான கல­வ­ரங்­களை இந்த நாடு சந்­தித்­துள்­ளது. பொரு­ளா­தார கார­ணி­களும் இன, மத மோதல் உணர்­வு­களும் சிங்­கள– முஸ்லிம் மோதல்­க­ளுக்கும் கல­வ­ரங்­க­ளுக்கும் கார­ண­மாக இருந்­துள்­ளன. 1915 ஆம் ஆண்டு கல­கத்தில் இக்­கா­ர­ணி­களைத் தெளி­வாகக் காண முடி­யு­மா­யினும் வேறு­பட்ட பரி­மா­ணங்­களும் இக்­க­ல­கத்தில் இடம்­பெற்­றி­ருந்­தன.
அது ஆங்­கி­லேயர் ஆட்­சிக்­கா­லத்தில் நடந்த கலகம். தேசிய உணர்வு முக்­கி­ய­மாகச் சிங்­களத் தேசிய உணர்வு தீவி­ர­மாக மேலெ­ழுந்த காலப்­ப­குதி அது. தமிழ் மற்றும் முஸ்­லிம்­களின் வர­லா­றுகள் திரி­பு­ப­டுத்திச் சொல்­லப்­பட்­ட­தோடு அவர்கள் வந்­தேறு குடி­க­ளா­கவும் நாட்டைச் சூறை­யா­டு­ப­வர்­க­ளா­கவும் சித்­தி­ரிக்­கப்­பட்­டனர். (இது பற்றிப் பின்னர் விரி­வாகப் பார்ப்போம்) அதா­வது, நாட்டின் தேசிய எழுச்­சியில் சிறு­பான்மை மக்­களை உள்­வாங்­காத அல்­லது தேசத்தின் எதி­ரி­க­ளாகக் காட்டும் பரப்­பு­ரை­களும் கருத்­தி­யல்­களும் முன்­வைக்­கப்­பட்­டன.

சிங்­கள மக்­களின் ஒரு­மைப்­பாட்­டையும் மேற்­கத்­தைய எதிர்ப்­பையும் நாடு தழு­விய ரீதியில் முன்­னெ­டுத்துச் சென்ற பௌத்த சமயப் புத்­து­யிர்ப்பு வாதி­யான அந­கா­ரிக தர்­ம­பால (1864–1933) கட்­டி­யெ­ழுப்­பிய தேசி­ய­வாதக் கருத்­தியல் ஐக்­கிய இலங்­கைக்குச் சாத­க­மா­ன­தாக இருக்­க­வில்லை. தேசிய ஒரு­மைப்­பாட்­டிலும் தேசிய எழுச்­சி­யிலும் முஸ்­லிம்கள் உள்­ளிட்ட சிறு­பான்­மை­யினர் உள்­ளீர்க்­கப்­ப­ட­வில்லை.

தேசிய எழுச்­சியில் பௌத்த மத புத்­தெ­ழுச்­சியை அந­கா­ரிக தர்­ம­பால ஒன்று கலந்தார். மத உணர்வு கலந்த தேசி­யத்­தையும் மேற்­கத்­தைய எதிர்ப்­பையும் அடி­மட்ட மக்கள் வரை அவர் கொண்டு சென்றார். இலங்­கையில் மட்­டு­மன்றி உலக பௌத்த எழுச்­சியும் சமயப் புத்­து­யிர்ப்பும் அவ­ரது பிர­தான இலட்­சி­யங்­க­ளாகும். உல­க­ளா­விய பௌத்த மதப் பரப்­பு­ரையின் முத­லா­வது தலைவர் என்றும் அந­கா­ரிக போற்­றப்­ப­டு­கிறார். பிற்­கா­லத்தில் அவர் புனித தேவ­மித்த தர்­ம­பால என்ற பெய­ருடன் பௌத்த துற­வி­யானார்.

தேசத்தின் விடு­த­லைக்­கான அந­கா­ரி­கவின் சிந்­த­னை­க­ளையோ சமயப் புத்­து­யிர்ப்பு நட­வ­டிக்­கை­க­ளையோ நாம் குறை­கூ­ற­வில்லை. நிகழ்ந்து கொண்­டி­ருந்த ‘தேச அரசு’ (Nation State) என்ற நவீன அர­சியல் கட்­ட­மைப்பை அவர் கவ­னத்தில் கொள்­ள­வில்லை. பல்­லின சமூ­கங்­க­ளையும் பல மொழி­க­ளையும் கொண்ட இலங்­கையின் அர­சியல் எதிர்­கா­லத்தை அவ­ரது சிந்­த­னைகள் பிர­தி­ப­லிக்­க­வில்லை. இலங்­கையின் அர­சியல் பய­ணமும் இனங்­க­ளுக்கிடை­யி­லான ஐக்­கி­யமும் சீர்­கு­லைக்­கப்­பட்­டது பற்­றியே நாம் சிந்­திக்­கிறோம்.
இனங்­க­ளுக்கிடை­யி­லான பாரிய இடை­வெ­ளி­யையும் வெறுப்­பையும் இது தோற்­று­வித்­தது. விரைவில் தீவிர இன­வாத இயக்­கங்­களின் தாரக மந்­தி­ர­மாக இவை வடிவம் பெற்­றன.

அந­கா­ரிக தர்­ம­பா­லவின் எழுத்­துக்­களை வாசிக்­கும்­போது 18 ஆம் நூற்­றாண்டில் ‘சிலனீஸ்’ (இலங்­கையர்) என்றால் ‘சிங்­ஹலீஸ்’ (சிங்­க­ளவர்)  என்றே எடுத்துக் கொள்­ளப்­பட்­ட­தாக மைக்கல் ரொபர்ட்ஸ் கூறு­கிறார். பின்னர் ‘எக்ஸத் பிக்கு பெர­முன’ இயக்­கத்­தினர் சிறு முத­லா­ளிய சக்­தி­க­ளுடன் இணைந்து ‘சிங்­களம் மட்டும்’ கோரிக்­கையைப் பரப்­பினர். 1956 ஆம் ஆண்டில் பண்­டா­ர­நா­யக்க தனது கட்­சிக்கும் அர­சி­ய­லுக்கும் சிங்­களம் மட்டும் கொள்­கை­களை தவிர்க்­க­மு­டி­யாத அடிப்­படைக் கோட்­பா­டாக்­கினார்.

பண்­டா­ர­நா­யக்­கவின் வெற்றி பெரிய புரட்­சி­யாகச் சித்­தி­ரிக்­கப்­பட்­டது. நாட்டின் முன்­னேற்­றத்­திற்­கான கூறுகள் அந்த வெற்­றியில் இருந்­தி­ருக்க முடியும். ஆனால் டி.எஸ்.சேன­நா­யக்க தலை­மையில் பல­வீ­ன­மா­ன­தா­கவோ நொறுங்­கக்­கூ­டிய நிலை­யிலோ இனங்­க­ளுக்­கி­டை­யி­லான ஒரு ஐக்­கியம்  கட்டி எழுப்­பப்­பட்­டது. சிறு­பான்மை இனங்­க­ளையும் உள்­ள­டக்­கிய அர­சியல் ரீதி­யான 'ஐக்­கிய இலங்கை' அல்­லது ‘ஐக்­கிய இலங்­கையர்’ என்ற ‘நவீன தேச அர­சு’க்­கான அடிப்­ப­டை­களை இன­வாதம் சித­ற­டித்­தது. இலங்­கையர் ஐக்­கிய தேசிய உணர்வு பற்றிப் பேசியோர் தேசத் துரோ­கி­க­ளாக்­கப்­பட்­டனர்.

சிறு­பான்­மை­யினர் பார்­வையில் மட்­டு­மின்றி நவீன ஜன­நா­யக, நவீன தேச அரசு என்ற பார்­வை­யிலும் நாடு பெரும் தோல்­வி­களைச் சந்­தித்­தது. 1915 சிங்­கள, முஸ்லிம் கல­வ­ரமும் குறைந்­தது. 1920 களி­லி­ருந்து தமிழர் தரப்பில் முன்­வைக்­கப்­பட்ட மொழி உரிமை, சுயாட்சிக் கோரிக்­கை­களும் நாட்டை நெறிப்­ப­டுத்தும் அர­சியல் தலை­மை­களில் எந்தத் தாக்­கத்­தையும் செலுத்­த­வில்லை.

மத சார்­பற்ற அர­சுக்­கு­ரிய அம்­சங்கள் இலங்­கையின் அர­சியல் சாச­னத்தில் இடம்­பெற்­றி­ருந்­த­போதும் பௌத்­தமே நாட்டின் பிர­தான சம­ய­மாக்­கப்­பட்­டது.
1972 ஆம் ஆண்டில் புத்த சமயம் அரசு சம­ய­மாக்­கப்­பட வேண்டும் என்ற கோரிக்கை வலிமை பெற்­றது. மகா­சங்­கத்­தி­னரும் பௌத்த மத உயர்­பீ­டத்­தி­னரும் இதற்கு தலைமை தாங்­கினர். 1956 இல் சிங்­களம் மட்டும் கொள்கை பூதா­க­ர­மாக்­கப்­பட்­டது. மொழி அடிப்­ப­டையில் நாடு இரு கூறாக்­கப்­பட்­டது. 1972 இல் பௌத்தம் மட்டும் கோஷம் அர­சியல் அரங்கை அதிர வைத்­தது.

பௌத்த மதத்­திற்கு நிக­ராக வேற்று மதங்­க­ளுக்கு இட­ம­ளிக்­கக்­கூ­டாது. பௌத்த இராஜ்­ஜியம் உரு­வாக்­கப்­பட வேண்டும். இலங்­கையின் அரச மொழி­யாக சிங்­க­ள­ மொ­ழியை மட்­டுமே அசியல் சாசன ரீதி­யாக அங்­கீ­க­ரிக்க வேண்டும் என்று மகா­சங்­கத்­தினர் பிர­க­டனம் செய்­தனர்.

ஒரு மொழியும் ஒரு சம­யமும் மட்­டுமே அரச அங்­கீ­கா­ரத்­தையும் நாட்டின் முதன்மை அந்­தஸ்­தையும் பெறக்­கூ­டிய நிலை ஆபத்­தா­னது என்றும் ஐக்­கிய இலங்கை என்ற அடிப்­ப­டையை அது சீர்­கு­லைப்­ப­தோடு இலங்­கையின் எதிர்­காலம் கேள்­விக்­கு­றி­யாகும் என்றும் சிங்­கள இட­து­சாரித் தலை­வர்­களும் ஐக்­கிய இலங்­கையை நேசித்த தலை­வர்­களும் கூறிய எச்­ச­ரிக்கை வார்த்­தைகள் இன­வாதத் தீயில் கருகிச் சாம்­ப­லா­கின. நாடு யுத்­தத்தை நோக்கித் தள்­ளப்­படும் என்­பது 1956 களி­லேயே நிர்­ண­யிக்­கப்­பட்­டு­விட்­டது.

இறு­தியில் 'இலங்கைக் குடி­ய­ரசு பௌத்த மதத்­துக்கு முதன்மை ஸ்தானம் வழங்­குதல் வேண்டும்….. அதே­நே­ரத்தில் பௌத்த மதத்தைப் பாது­காத்­தலும் பேணி வளர்த்­தலும் அரசின் கட­மை­யா­தலும் வேண்டும்.' என்ற பிர­க­ட­னத்தை எமது யாப்பும் வெளி­யிட்டு பல்­லின சமூ­கத்தைப் பிர­தி­ப­லிக்கும் தனது பொறுப்­பி­லி­ருந்து நீங்­கிக்­கொண்­டது. இன்­று­வரை இன­வாதம் நாட்டின் எல்லா முன்­னேற்­றங்­க­ளையும் தடுக்கும் சக்­தி­யா­கவும் மறை­வா­கவும் வெளிப்­ப­டை­யா­கவும் செயற்­ப­டு­கி­றது. 1956 ஆம் ஆண்டு புரட்­சி­யா­னது இலங்­கையை எல்லா இன மக்­க­ளி­னதும் நாடாக்கும் முயற்­சியில் தோல்வி அடையச் செய்­துள்­ளது. பௌத்தம் மட்டும் என்­ப­தி­லி­ருந்து இது விருட்­ச­மாகி உள்­ளது. 1956 இன் இலட்­சி­யங்கள், வீர­வி­தா­ன­வி­டமும் சோம­ஹி­மி­யி­டமும்  கைய­ளிக்­கப்­பட்­டன. மைக்கல் ரொபர்ட்ஸ் கூறு­வது போல் சிங்­கள மக்கள் மத்­தியில் செல்­வாக்குச் செலுத்­திய ஜாதிக சிந்­த­னை­யிலும் மஹிந்த சிந்­த­னை­யிலும் அந­கா­ரி­க­வி­லி­ருந்து போசணை பெற்­று­வரும் இக் கருத்­தி­யலே செல்­வாக்குச் செலுத்­து­கி­றது. இன­வாத நெருக்­கடி நாட்டை பெரும் பின்­ன­டை­வு­க­ளுக்கு இட்டுச் செல்லும் முக்­கிய கார­ண­மா­கின்­றது.
இலங்­கையில் தேர­வாதம் அல்­லது தேர­வாத பௌத்தம் இன்று இன மோதல்கள் தொடர்பில் பெரும் சவால்­களை எதிர்­நோக்கி உள்­ளது. 2009 இல் உள்­நாட்­டுப்­போரில் தமிழ் ஆயுதத் தரப்­பினர் முறி­ய­டிக்­கப்­பட்­டதைத் தொடர்ந்து இன­வாத– மத­வாத நெருக்­கு­வா­ரங்­களும் தீவிர சம­ய­வாத வன்­மு­றைக்­கு­ழுக்­களின் உரு­வாக்­கமும் நட­வ­டிக்­கை­களும் அதி­க­ரித்­தன. சிஹல உறு­மய, ஜாதிக ஹெல உறு­மய, பொது­ப­ல­சேனா, ராவணா பலய, சிங்­கள ராவய, ஜாதிக சிந்­தனய இயக்கம், சிங்கலே அமைப்பு அவற்றின் உப குழுக்கள் எனப் பல சமயத் தீவி­ர­வாத இயக்­கங்­களை இனங்­காட்ட முடியும். கண்டி கல­வ­ரத்தை நிகழ்த்­து­வதில் முக்­கிய பங்­கேற்­றி­ருந்த ‘மஹாசோன்’ குழு­வி­னரும் இந்த வரி­சையைச் சேர்ந்த அணி­யி­னர்தான்.

புதிய இன­வாத, இன அர­சியல் கோட்­பா­டு­களை இப்­பு­திய இயக்­கங்கள் பெற்­றி­ருந்­த­போதும் அந­கா­ரிக தர்­ம­பா­லவில் இருந்து தொடரும் தீவிர இன – மத வாத சிந்­தனைத் தூண்­டல்­களே இன்றும் இவற்றின் அடிப்­ப­டை­க­ளாக உள்­ளன. ஏனைய சம­யங்­க­ளுக்கும் இனங்­க­ளுக்கும் எதி­ரான தீவிர வெறுப்புப் பிர­சாரம் வெளிப்­ப­டை­யா­கவே இன்று பேசப்­ப­டு­கி­றது. வன்­முறைத் தூண்டல் சம்­ப­வங்­களும் போலிப் பிர­சங்க பரப்­பு­தலும் மோதல்­களும் அடுத்­த­டுத்து நடை­பெ­று­கின்­றன.

குறிப்­பாக 2009 இன் பின்னர் தீவிர இன, மத­வா­தி­களின் பல்­வேறு தாக்­கு­தல்­க­ளுக்கு முஸ்­லிம்கள் நேரடியாக இலக்­காகி உள்­ளனர். முஸ்­லிம்­களும் அவர்­களின் சம­யமும் அவர்­களின் கலா­சா­ரமும் பொரு­ளா­தா­ரமும் சிங்­கள பௌத்த மதத்தின் இருப்­பிற்கும் வளர்ச்­சிக்கும் சிங்­கள மக்­களின் முன்­னேற்­றத்­திற்கும் இடை­யூ­றா­கவும் தடை­க­ளா­கவும் இருப்­ப­தாக பாரிய அளவில் எதிர்ப்பு– வெறுப்பு– பரப்­பு­ரைகள் செய்­யப்­பட்டு வரு­கின்­றன. முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றை­களை நியா­யப்­ப­டுத்தும் முயற்­சி­களும் நடை­பெ­று­கின்­றன.

ஹலால் பிரச்­சி­னை­யையும் வில்­பத்து விவ­கா­ரத்­தையும் இன்னும் பல விட­யங்­க­ளையும் தமது கருத்­து­க­ளுக்கு ஆத­ர­வாக இன­வா­திகள் பயன்­ப­டுத்­து­கின்­றனர். பொது­ப­ல­சே­னாவும் ராவணா பலய இயக்­கமும் ஹலால் பிரச்­சி­னையை மையப்­ப­டுத்தி முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான ஒரு கலா­சா­ரப்­போரை சிங்­களப் பெரும்­பான்மை மக்­க­ளிடம் கட்­ட­விழ்த்­து ­வி­ட்­டதை நாம் அறிவோம். இன­வாதக் குழுக்கள் எதிர்­பார்த்­த­தை­விட அதிக பலா­ப­லன்கள் கிடைத்­தன. நாடு முழுக்க வெறுப்புப் பிர­சா­ரங்கள் கொண்டு செல்­லப்­பட்­டன. முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வர்த்­தகத் தடை மறை­மு­க­மாக செயற்­ப­டுத்­தப்­பட்­டது. தம்­புள்ளை பள்ளி விவகாரம் எரியும் பிரச்சினையாக்கப்பட்டது.
குருநாகல், தம்புள்ளை, கண்டி, பேருவளை, மாவனெல்லை பிரதேசங்கள் இனங்காணப்பட்டு தாக்குதலுக்கும் மோதல்களுக்குமான சூழல்கள் இப்பிரதேசங்களில் உருவாக்கப்பட்டன. பேருவளை – அளுத்கம, பாணந்துறை – நோலிமிட் அழிவுகளுடன் அதில் வெற்றியும் காணப்பட்டது. எனினும் அப்போதைய அரசாங்கம் மௌனம் சாதித்தது. குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாட அரசு அனுமதித்தது. ‘குற்றவாளிகள் தண்டனைக்குட்படுத்தாது தப்பிச்செல்ல அனுமதிக்கும் கலாசாரம் நிறுத்தப்பட வேண்டும். அது ஆபத்தானது’ என்று ஐரோப்பிய ஒன்றிய உயர்மட்டக்குழு கண்டி கலவரச் சூழலில் இக்கருத்தை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

மார்ச் கண்டி கலவரம் நான்கு நாட்களுக்குள் கட்டுப்படுத்தப்பட்டதற்கு இரு காரணங்களைச் சுட்டிக்காட்டலாம். கலவரத்தின் பிரதான சூத்திரதாரிகளில் சிலரும் மற்றும் பல தீவிர கலவரச் செயற்பாட்டாளர்களும் பயங்கரவாதச் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதும் அரசாங்கம் கலவரத்தின் பின்னணியில் ஒரு சக்தியாக இயங்கவில்லை என்பதுமாகும். (எனினும் நாம் பேசவேண்டிய பல விடயங்கள் உள்ளன)

இன்றைய கலவரங்கள் புதிய பரிமாணங்களை எடுத்துள்ளன. 2009 க்கு பின்னரான கலவரங்களில் இப்பரிமாணங்கள் தெளிவான காட்சிப் பொருட்களாகி இருப்பதை நாம் மேலும் நுட்பமாக ஆராயவேண்டும்.

No comments

Powered by Blogger.