Header Ads



ஆசிபாவுக்கு நீதிவேண்டி பா.ஜ.க. இணையத்தை முடக்கிய ஹெக்கர்கள்

காஷ்மீர் மாநிலம் கதுவாவில் 8 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியது. 

சிறுமி கொலையில் குற்றவாளிகளுக்கு ஆதரவான போராட்டத்தில் பா.ஜ.க மந்திரிகள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றது, குற்றவாளிகளுக்கு எதிராக போலீஸ் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த போது பா.ஜ.க ஆதரவு வழக்கறிஞர்கள் போராட்டம் மேற்கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சிறுமிக்கு நீதி வேண்டும் என இந்தியா முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநில பா.ஜ.க.வின் இணையதளம் ஹேக் செய்யப்பட்டது. ஹேக்கிங் செய்யப்பட்ட இணையதளம் விரைவாக சரிசெய்யப்பட்டது. 

‘டீம் கேரளா சைபர் வாரியர்ஸ்’ என தங்களை அழைத்துக்கொள்ளும் ஹேக்கிங் குழு இணையதளத்தை ஹேக்கிங் செய்து உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

‘பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சிறுமிக்கு நீதிவேண்டும்’ என்ற வாசகம் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. பாலியல் துஷ்பிரயோகங்களில் ஈடுபட்ட கும்பலை மாநில பா.ஜ.க. ஆதரிக்கிறது எனவும் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. 

இந்திய தேசியக்கொடியின் வண்ணங்களை பயன்படுத்தி தகவலை வெளியிட்டு உள்ள ஹேக்கர்கள், மனித நேயத்திற்கு அப்பால் எதுவும் இருக்க கூடாது, பாகுபாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது. பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் என தகவல் பதிவு செய்து உள்ளனர். 

பா.ஜ.க.வின் காஷ்மீர் மாநிலம் பொதுச் செயலாளர் அசோக் கவுல் பேசுகையில், இணையதளம் ஹேக் செய்யப்பட்டது, இப்போது சரிசெய்யப்பட்டுவிட்டது என கூறி உள்ளார். “நாங்கள் போலீசில் புகார் கொடுத்து உள்ளோம். வடக்கு கேரளாவை சேர்ந்தவர் ஹேக்கிங் செய்யப்பட்டதற்கு பொறுப்பாளி என தெரிகிறது,” என குறிப்பிட்டு உள்ளார் அசோக் கவுல். 

சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக இந்து ஏக்தா மஞ்ச் என்ற இந்து அமைப்பு போராட்டம் நடத்தியது. இந்த போராட்டத்தில் பங்கேற்ற இரு பா.ஜ.க மந்திரிகளும் ராஜினாமா செய்துவிட்டார்கள். இந்து ஏக்தா மஞ்ச் அமைப்பு விவகாரத்தில் தன்னை பாரதீய ஜனதா விலக்கிக்கொண்டு உள்ளது. அந்த அமைப்புடன் தொடர்புடைய கட்சி செயலாளரையும் பா.ஜ.க. நீக்கி உள்ளது.

No comments

Powered by Blogger.