Header Ads



ஐயோ, ரணில் ஐயா பாவம் - நாமல் ராஜபக்ச

நீண்ட நாட்கள் செல்லும் முன்னர் நாடாளுமன்ற தேர்தலை நடத்தக் கோரி வீதியில் இறங்கப் போவதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பெலியத்த பிரதேச சபையின் புதிய உறுப்பினர்கள் தமது பணிகளை பொறுப்பேற்றுக் கொண்ட நிகழ்வில் இன்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

அரசாங்கத்தின் இந்த காதல் பயணம் வெற்றி பெறாது. விவாகரத்து வழக்கு தற்போது தாக்கல் செய்யப்பட்டு விட்டது. வழக்கில் தீர்ப்பு வழங்கப்படா விட்டாலும் மனதளவில் விவாகரத்து பெற்று விட்டனர்.

தேர்தலை ஒத்திவைக்க பயன்படுத்தப்பட்ட மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பயன்படுத்தி தயவு செய்து தேர்தலை நடத்துங்கள். நாடாளுமன்ற தேர்தலை நடத்துங்கள்.

மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் மக்களின் அரசாங்கம் ஒன்றை அமைக்க தேர்தலை நாங்கள் பயன்படுத்துவோம்.

ஐக்கிய தேசியக் கட்சியினர் குழுக்களை நியமித்து மறுசீரமைப்பு பற்றி பேசி வருகிறது. எனினும் ரணில் விக்ரமசிங்கவே தலைவராம். ஐயோ ரணில் ஐயா பாவம்.

ரணிலை விலக்கி விட்டு, புதிய பிரதமரை நியமிக்க வேண்டும், கட்சிக்கு புதிய தலைவரை தெரிவு செய்ய வேண்டும் என்று கூறியவர்களுக்கு புதிய கதிரையை மாற்ற முடிந்துள்ளது.

இந்த குழுக்கள் கதிரையை மாற்றுகின்றன.அமைச்சு பதவிகளை கைவிட்டுச் செல்லப் போவதில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் கூறுகின்றனர். செல்ல வேண்டாம் என ஜனாதிபதி கூறினாராம்.

அவர்கள் அரசாங்கத்தில் இருந்து வெளியேறி, எதிர்க்கட்சியில் அமர வேண்டும். இந்த அரசாங்கத்தின் தூரநோக்கற்ற ஆட்சிக்கு எதிராக அவர்கள் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

அப்படியானால் அவர்கள் எதிர்க்கட்சியில் வந்து அமர வேண்டும். ஆனால், தன்னை விட்டுப் போக வேண்டாம் என ஜனாதிபதி கூறுகிறார்.ஜனாதிபதி முற்றாக தனது கட்சியின் கொள்கைகளை காட்டிக் கொடுத்துள்ளார்.

தற்போது நாட்டில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகிய இருவரின் பிரச்சினைகள் பற்றியே பேசப்படுகின்றன. மக்களின் பிரச்சினைகள் பற்றி பேசப்படுவதில்லை.

இவர்கள் தற்போது தமது இரண்டாவது காதல் பயணம் பற்றி பேசி வருகின்றனர் எனவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்

No comments

Powered by Blogger.