Header Ads



ஈராக்கில் ஐ.எஸ். தொடர்புடைய 300 பேருக்கு மரண தண்டனை விதிப்பு


ஈராக் நாட்டில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பினர் ஆதிக்கம் செலுத்தி தாக்குதல்களில் ஈடுபட்டு வந்தனர்.  நாட்டின் 3ல் ஒரு பங்கு பகுதியை அவர்கள் தங்களது கட்டுக்குள் வைத்திருந்த சூழ்நிலையும் இருந்தது.  இந்த நிலையில், கடந்த வருடம் டிசம்பரில் ஐ.எஸ். அமைப்பினரை வெற்றி கண்டு விட்டோம் என ஈராக் அரசு அறிவித்தது.

இந்நிலையில், ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடைய வெளிநாட்டவர் உள்ளிட்ட மொத்தம் 300 பேருக்கு அந்நாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

இதுபற்றி நீதி அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், கடந்த ஜனவரியில் இருந்து 97 வெளிநாட்டவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.  185 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

அவர்களில் பெருமளவிலான பெண்கள் துருக்கி மற்றும் முன்னாள் சோவியத் யூனியன் குடியரசு நாடுகளை சேர்ந்தவர்கள்.  கடந்த ஜனவரியில், ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடையவர் என கண்டறியப்பட்ட ஜெர்மன் பெண்ணுக்கு ஈராக் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.  நேற்று பிரான்ஸ் பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், மொசூல் நகர் அருகே டெல் கீப் பகுதியிலுள்ள நீதிமன்றத்தில் 212 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.  150 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.  341 பேருக்கு பிற சிறை தண்டனைகளும் விதிக்கப்பட்டன.

ஈராக்கில் ஐ.எஸ். வழக்கு விசாரணைகளில் பாதிக்கப்பட்டோரின் உண்மையான நீதி மறுக்கப்படுவதுடன், ஒன்றுமறியாத ஈராக் மக்களை மரணத்திற்கு அனுப்பும் ஆபத்தும் உள்ளது என நியூயார்க் நகர மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் மூத்த உறுப்பினர் பெல்கிஸ் வில்லி கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.