Header Ads



இனவாதிகளால் பரப்பப்படும் "முஸ்லிம் பீதி"

-ரவூப் ஸய்ன்-

1915 இல் இடம்பெற்ற கம்பளைக் கலவரத்துக்கான அடித்தளத்தை இட்டவர் சிங்கள மஹாபோதி சபையை ஸ்தாபித்த அநகாரிக தர்மபால. கலவரத்திற்கு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அதற்கான பிரச்சாரங்களை அவர் வெற்றிகரமாக முன்னெடுத்தார்.  இதற்கெனவே அவரது மது ஒழிப்பு இயக்கம் பயன்படுத்தப்பட்டது. தர்மபாலவின் பிரச்சாரம் இரண்டு பகுதிகளில் முனைப்புப் பெற்றிருந்தது. ஒன்று, ஐரோப்பியர்கள் மற்றும் இந்தியத் தமிழர்களுக்கு எதிரானது. இரண்டாவது, இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரானது.

“சிங்கள இனம் ஓர் இணையற்ற இனம். அவர்களது உடலில் அடிமை இரத்தம் ஓடவில்லை. அவ்வினத்தை அழிவுக்காரர்களாலோ பிற மதத்தவர் களான தமிழர்களாலோ அடிமையாக்க முடியவில்லை. கடந்த மூன்று நூற்றாண்டுகளாக இந்நாட்டை அழித்து பௌத்த ஆலயங்களை நாசம் செய்து நூலகங்களைத் தீக்கிரையாக்கி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த எம்மினத் தைப் பூண்டோடு ஒழிக்க முயல்பவர் கள் ஐரோப்பியர்கள். மாமிசத்தைப்      புசிக்க வேண்டுமென சபிக்கப்பட்ட கிறிஸ்தவர்கள் தாழ்ந்தவர்கள். சிங்கள வர்கள்தான் சிங்கள நாட்டை ஆள வேண்டும்” (பார்க்க. தர்மபால லிபி) எனக் குரலெழுப்பிய தர்மபால மறு புறம் முஸ்லிம்களையும் முனைப்பாக இலக்கு வைத்தார்.

“அந்நியரான முஹம்மதியர் ஷைலொக்கிய வழிமுறைகளால் யூதர்களைப் போன்று செல்வந்தர்களாக மாறினர். 2358 வருடங்களாக அந்நிய முற்றுகையிலிருந்து நாட்டைப் பாதுகாப்பதற்காக இரத்தத்தை ஆறு போல் ஓட்டி தமது மூதாதையர்களை இழந்த மண்ணின் மைந்தர்களான சிங்களவர்கள் பிரித்தானியர்களின் கண்களில் நாடோடிகளாகவே தென்படுகின்றனர். தென்னிந்திய முஹம்மதியர்கள் இலங்கைக்கு வந்து வியாபாரத்தில் எந்த அனுபவமும் அற்ற கிராமவாசிகளைச் சுரண்டுகின்றார்கள். இதன் விளைவு முஹம்மதியர் முன்னேறுகின்றார்கள். மண்ணின் மைந்தர்கள் பின்னடைகிறார்கள்.” (பார்க்க. தர்மபால லிபி)

இத்தகைய பிரச்சாரங்களால் வெறியூட்டப்பட்டிருந்த சிங்கள இளைஞர்கள் 1915 கலவரத்தில் முஸ்லிம்களுக்கெதிரான தமது பகையுணர்வைக் கொட்டித் தீர்த்தனர். கலவரத்துக்கான உடனடிக் காரணம் வேறு இருப்பினும் அதற்கான சித்தாந்த அடித்தளத்தை இத்தகைய இனத் தேசியவாதிகளின் பிரச்சாரங்களே ஏற்படுத்தியிருந்தன. அக்காலத்தில் சுதேச வர்த்தகத்திலும் சர்வதேச வணி கத்திலும் முஸ்லிம்கள் பெற்றிருந்த செல்வாக்கைத் தகர்ப்பதற்கு இத்தகைய இனக் கலவரங்கள் தூண்டிவிடப்பட்டன.

தற்போதைய குறிப்பாக 2012 இற்குப் பின்னர் ஏற்பட்ட இனப் பதட்டத்திற்கு ஒற்றைக் காரணத்தைத் தேட முடியாது. கடந்த ஆறு ஆண்டுகளாக முஸ்லிம்கள் குறித்து சிங்கள மக்கள் மத்தியில் பல் வேறு வகையான அச்சங்களும் ஐயங்களும் விதைக்கப்பட்டு வருகின்றன. அவை வெறும் கற்பிதங்கள் என்பதோடு திட்டமிட்டுப் பரப்பப்படுகின்றன என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
இத்தகைய அச்சங்களை சிங்கள  சிவில் சமூகத்திற்கு அவை வெறும் கற் பிதங்கள் என்பதனை விளக்குவதற்கு முஸ்லிம்கள் முன்வரவில்லை. இது துர திஷ்டமானது. முஸ்லிம் தலைமைகளின் பலவீனமே இதற்கான காரணமாகும். மறுபுறம் முஸ்லிம்கள் குறித்து இனவாதிகள் பரப்பும் போலிக் குற்றச்சாட் டுக்களையும் அச்சங்களையும் சிங்கள மக்கள் நம்புவதற்கு ஏற்ற சூழல் மாறி வரும் முஸ்லிம் சமூகத்தில் உள்ளதா என்பதும் ஊன்றிக் கவனிக்க வேண்டிய விடயமாகின்றது.

முதலில் நாம் முஸ்லிம்களுக்கெதிராக சிங்களவர்களின் உணர்வலைகளைத் தட்டியெழுப்ப முயலும் இனவாதிகள் தொடர்ச்சியாக முன்வைத்து வரும் போலிக் குற்றச்சாட்டுக்கள் எவை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அவற்றை ஒரு பரிமாற்று வசதிக்காக பின்வருமாறு அடையாளப்படுத்தலாம்.

நாட்டில் முஸ்லிம் சனத்தொகை அதிகரித்து வருகின்றது. இதனால் 2100 ஆம் ஆண்டில் இலங்கை முஸ்லிம் பெரும்பான்மை நாடாக மாறிவிடும்.

சிறுபான்மையாக உள்ள முஸ்லிம் களுக்கு பெருந்தொகையான பள்ளி வாயல்கள் நிர்மானிக்கப்படுகின் றன. அவை மிக ஆடம்பரமாகவும் பெரும் செலவிலும் உருவாக்கப் படுகின்றன.

முஸ்லிம்கள் இனவாதம் சார்ந்த அரசியலை முன்னெடுக்கின்றனர்.

ஒப்பீட்டு ரீதியில் இலங்கை முஸ் லிம்கள் நாட்டுப்பற்று அற்றவர் களாகவும் சுயநலமிகளாகவும் வாழ் கின்றனர்.

பௌத்த கலாசார சின்னங்களையும் தொல்பொருள் சான்றுகளையும் அழித்து வருகின்றனர்.

சிங்களவர்களின் இனப்பெருக் கத்தைக் கட்டுப்படுத்துவதற்குச் சூழ்ச்சி செய்கின்றனர்.

ஹலால் சான்றிதழ் மூலம் சிங்கள பௌத்தர்களின் பணத்தைச் சுரண் டுகின்றனர்.
பாரம்பரிய இஸ்லாத்திலிருந்து விலகி தீவிர வாத வஹ்ஹாபிய இஸ்லாத்திற்கு மாறுகின்றனர். இது ஓர் அடிப்படைவாதமாகும்.

திட்டமிட்ட வகையில் சிங்களவர் களை இஸ்லாம் மதத்திற்கு மாற்று கின்றனர்.

பள்ளிவாயல்கள் மற்றும் அறபு மத்ரஸாக்களில் தீவிரவாதத்தைப் போதிக்கின்றனர்.

நாட்டின் வர்த்தகத்தில் முஸ்லிம் களே ஆதிக்கம் செலுத்துகின்றனர்.

முகமூடி போன்ற ஆடைகளை அணிந்து பௌத்த கலாச்சாரத்திற்கு அச்சுறுத்தல் விடுகின்றனர்.

இவ்வாறான குற்றச்சாட்டுக்களை 1990 களிலிருந்து தொடர்ச்சியாக முன் வைத்து வருகின்றனர். இவற்றை முன் னெடுக்கும் இனவாத இயக்கங்களின் பெயர்களும் முகங்களும் மாறிவந்துள்ள போதும் பிரச்சாரத்தின் உள்ளடக்கம் ஒன்றாகவே இருக்கின்றது. முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் முன் னாள் அமைச்சர் எம்.எச்.எம்.  அஷ்ரப் அவர்களுடன் தொலைக்காட்சி விவாதத் தில் ஈடுபட்ட கங்கொடவில சோம தேரர் தான் முதல் குற்றச்சாட்டைக் காட்டமாக முன்வைத்தவர். அவர் 2050 ஆம் ஆண்டிற்குள் இலங்கை பெரும் பான்மை முஸ்லிம் நாடாக மாறிவிடும் என்று விஷப் பிரச்சாரம் செய்து வந்தார். இதனை அறிவு பூர்வமாகவும் புள்ளி விபர ரீதியிலும் பின்னர் நோக்குவோம்.

கங்கொடவில எனும் தனிப்பட்ட மதகுரு ஒருவரோடு பரவலாக்கப்பட்ட விஷப் பிரச்சாரம் பின்னர் பல்வேறு          சிங்கள, பௌத்த அமைப்புக்களால் முன் னெடுக்கப்பட்டது. 1990 களில் 40 சிங்கள பௌத்த இயக்கங்கள் ஒன்றுசேர்ந்து உரு வாக்கிய சிங்கள ஆணைக்குழு இதே வகைப் பிரச்சாரத்தை முன்னெடுத்தது. 1997 இல் உருவாக்கப்பட்ட ஆணைக் குழு முன்பாக பேராதெனிய, கொழும்பு, களனி, ஜயவரதனபுர போன்ற பல் கலைக்கழகங்களைச் சேர்ந்த சிங்களக் கல்விமான்களும் பௌத்த பிக்குகளும் கூட முஸ்லிம்களுக்கெதிராகச் சாட்சிய மளித்தனர்.

‘சிங்கள பூமி புத்ரய’ கட்சி இதன் அரசியல் பரிமாணமாக செயற்படத் தொடங்கியது. அதன் தலைவர் ஹரிச்சந்திர விஜயதுங்க “இலங்கையின் பெரும்பாலான வர்த்தகம் முஸ்லிம்களிடமே உள்ளது. இலங்கையில் இஸ்லாமிய அரசாங்கமொன்றை நிறுவுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மன்னாரிலிருந்து இடம்பெயர்ந்த அகதிகள் திஹாரியில் காணிகளை வாங்கியுள்ளனர். புத்தளத்தில் முஸ்லிம்களின் குடியேற்றம் அதிகரித்து வருகின்றது. அக்குறனை நகரினூடாக சிங்களவர்களின் பூதவுடல்களைக் கொண்டு செல்வது கூட அனுமதிக்கப்படுவதில்லை. கிரிந்திவலை, நிட்டம்புவ நகரங்களில் முஸ்லிம்களின் கடைகள் அதிகரித்து வருகின்றன. 1976 இல் மீரிகமை நகரில் ஒரேயொரு முஸ்லிம்கடையே இருந்தது. தற்போது 56 கடைகள் இருக்கின்றன.” எனத் தெரிவித்திருந்தார். (திவயின 07.04.1997)

சிங்கள ஆணைக்குழுவின் முதலாவது சுற்றறிக்கை 1997 செப்டம்பர் 17  இல் வெளியிடப்பட்டது. கடந்த 30 ஆண்டுகால இனவாத வரலாற்றில் இவ் வாணைக்குழு ஒரு முக்கிய நிறுவனமாகும். சிங்கள சமூகத்திலுள்ள எல்லாத் தரப்பினரையும் இணைத்த ஒரு வலைப் பின்னலை அது ஏற்படுத்தியது. சிங்கள ஆணைக் குழுவைத் தொடர்ந்து ‘சிங்கள வீரவிதான’ இயக்கம் உருவாக்கப்பட்டது. அதன் இன்னொரு கிளை இயக்க மாக பயங்கரவாதத்திற்கு எதிரான அமைப்பு முஸ்லிம்களுக்கெதிராகக் களமிறங்கியது.

2000 களில் இனவாதத்தை மூலதன மாகக் கொண்ட அரசியல் இயக்கங்கள் ஆரம்பிக்கப்பட்டன. கிட்டிய எதிர்காலத்தில் அவை அரசியல் கட்சிகளாக மாறி ஆட்சியில் பங்காளர்களாக தம்மைத் தகவமைத்துக் கொண்டன. அதில் ஜாதிக ஹெல உறுமய முக்கியமான இயக்கமாகும். இதன் சித்தாந்த அடிப்படைவாதியாக இருப்பவர் இன்றைய அமைச் சர் சம்பிக்க ரணவக்க என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அவ்வியக்கத்தின் முக்கிய மதகுருவான ஓமல்பே சோபித தேரர் கடந்த வாரமும் முஸ்லிம்களுக்கு அதிக சலுகை வழங்கப்படுவதாகக் கூறி யிருந்தார்.

2013 இல் தலையெடுத்த ‘பொதுபல சேனா’ இன்றைய இனப்பதட்டத்தின் அடிநாதமாக உள்ளது. இதன் மடியில் வளர்ந்த சிங்கள இயக்கங்களான சிங்கள ராவய, ஹெல சிங்கள ஹிரு, ராவண பலய, சிங்கலே, மஹ சொஹொன் பலகாய போன்றன முஸ்லிம் சிறுபான்மையை இலக்குவைத்துச் செயல்படுகின்றன. வெளிப்படையாகப் பெயர்களில் இவை வேறுபட்டாலும் சித்தாந்த உள்ளடக்கத்திலும் முஸ்லிம் விரோதப் பிரச்சாரத்திலும் ஒன்றுபட்டு செயல்படுகின்றன.

இவை சிங்களவர்களுக்கு மத்தியில் மேற்கொண்டு வரும் விஷப் பிரச்சாரம் குறித்தும் முஸ்லிம்கள் குறித்த போலிக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் முஸ்லிம் தலைமைகளும், சமூக நிறுவனங்களும் சிங்கள சிவில் சமூகத்திற்கு விளக்கமளிக்க முன்வர வேண்டும். இத்தகைய இனவாதிகளுடன் இவை தொடர்பில் விவாதம் செய்ய வேண்டியதில்லை. ஆனால், பெரும்பான்மை மக்களுக்கு முஸ்லிம்கள் குறித்து நிலவும் ஐயங்களைத் தெளிவுபடுத்த வேண்டியுள்ளது.

+ மீள்பார்வை

1 comment:

  1. இங்கு விமர்சனத்துக்கு வந்திருக்கும் பெண்களின் முகமூடி ஆடை 'நிகாப்' பற்றிய தம் தரப்பு வாதங்களை, அவற்றை அணிவோரோ அல்லது அதற்கு ஆதரவளிக்கும் மார்க்க அறிஞர்களோ ஆதாரபூர்வமாக முன்வைத்தால் நாட்டின் நல்லிணக்கத்துக்கு அது பேருதவியாக இருக்கும் என நம்புகிறேன்.  யாரும் முன்வருவார்களா?

    ReplyDelete

Powered by Blogger.