March 14, 2018

கண்டி கலவரத்தின் பின்னணி என்ன..? கலவரங்களை வழிநடத்தியது யார்..?? (Ground Report)

-BBC-

கடந்த பிப்ரவரி 20ஆம் தேதி நடந்த ஒரு சிறிய விபத்தில் துவங்கியது இந்த பிரச்சனை. கண்டியின் தெல்தெனிய பகுதியில் ஒரு லாரியும் ஆட்டோவும் மோதிக்கொண்டன. இதையடுத்து ஏற்பட்ட வாய்த் தகராறில் ஆட்டோவில் வந்த நான்கு இளைஞர்கள் லாரியை ஓட்டிவந்தவரை கடுமையாகத் தாக்கினர். லாரியின் ஓட்டுனர் சிங்களர். ஆட்டோவில் வந்தவர்கள் முஸ்லிம்கள். கடுமையாகக் காயமடைந்த லாரி ஓட்டுனர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இளைஞர்கள் நான்கு பேரும் உடனடியாகக் கைதுசெய்யப்பட்டனர்.

சுமார் இரு வாரங்கள் மருத்துவமனையில் இருந்த அந்த லாரி ஓட்டுனர், கடந்த மார்ச் 3ஆம் தேதியன்று உயிரிழந்தார். மார்ச் 4ஆம் தேதி மாலைக்கு மேல் சிறிது சிறிதாக பிரச்சனைகள் தெல்தெனியவில் உருவாக ஆரம்பித்தன. இஸ்லாமியரின் சொத்துகள் தாக்கப்பட்டன, எரிக்கப்பட்டன.

மார்ச் ஐந்தாம் தேதி, கைதுசெய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ள இளைஞர்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென காவல்நிலையத்தை கும்பல் ஒன்று முற்றுகையிட்டது. அன்று பிற்பகலில்தான் மிகப் பெரிய கலவரங்கள் துவங்கின.

"இறந்த ஓட்டுனரின் உடல் அடக்கம்செய்யப்பட்டுவிட்ட நிலையில், அவரது உடலை திகண பகுதிக்கு ஊர்வலமாக கொண்டுவரப்போவதாக வதந்திகள் பரவின. இங்கு பதற்றம் ஏற்பட்டது. கடைகளையெல்லாம் அடைத்துவிடும்படி எங்களிடம் சொன்னார்கள். நாங்களும் கடைகளை அடைத்துவிட்டு வீடுகளுக்குள் முடங்கிக்கொண்டோம்" என்கிறார் பல்லேகல்லவைச் சேர்ந்த மௌலவியான மோர்ஷித்.

காவல்துறையினர் பெரிதாக கண்ணில்படவில்லை என்கிறார்கள் பல்லேகல்லவைச் சேர்ந்தவர்கள். இந்த நிலையில் மதியம் ஒரு மணியளவில் திகணவின் மையப் பகுதியில் பெரிய அளவில் கூட்டம் குவியத் துவங்கியது. மெல்ல மெல்ல அந்தக் கூட்டம் பல்லேகல்லவை நோக்கி நகர்ந்தது. பிற்பகல் 2.30 மணியிலிருந்து 2.45 மணிக்குள் தாக்குதல் துவங்கியது. இஸ்லாமியரின் கடைகள், வழிபாட்டுத் தலங்கள் குறிவைத்ததுத் தாக்கப்பட்டன. சில இடங்களில் இஸ்லாமியரின் வீடுகளும் தாக்கி, எரிக்கப்பட்டன.

ஆனால், இந்தத் தாக்குதலில் உயிர்ச்சேதம் ஏற்படுத்துவது கலவரக்காரர்களின் நோக்கமாக இருக்கவில்லை. இஸ்லாமியர்களின் சொத்துக்களைச் சேதப்படுத்துவது மட்டுமே இலக்காக இருந்தது. பல்லேகல்லவில், தாக்குதல் துவங்கியதும் தன் கடைக்குள் புகுந்து ஷட்டரை இறக்கிவிட்டுக்கொண்டார் ஒரு பெண்மணி. கலவரக் கும்பல் ஷட்டரைத் திறந்து, அந்தப் பெண்மணியை வெளியே இழுத்துப் போட்டுவிட்டு கடைக்குத் தீவைத்தது.

ஆனால், பாஸிக்கு அந்த அதிர்ஷ்டம் கிடைக்கவில்லை. பல்லேகல்லவில் ஒரு செருப்புக் கடையை வைத்திருக்கிறார் ரஹீம் சும்சுதீன். செருப்புக் கடைக்குப் பின்னாலேயே அவரது வீடும் இருந்தது. கவலரம் துவங்கும்போது ரஹீம் சம்சுதீன், அவரது மனைவி, அவரது இரு மகன்கள் அந்த வீட்டில் இருந்திருக்கின்றனர். இவர்களில் பாஸி மாடியில் இருந்தார். கலவரக்காரர்கள் செருப்புக் கடைக்குத் தீ வைக்கவும் ரஹீம் சம்சுதீன், அவரது மனைவி, கீழே இருந்த மகனான பயாஸ் ஆகியோர் வெளியேறிவிட்டனர். இதில் பயாஸுக்கு கடுமையான தீக் காயம் ஏற்பட்டது. மேலே பாஸி இருந்தார் என்பதை யாரும் அறியவில்லை. கலவரங்கள் முடிந்து, மேலே போய் பார்த்தபோது பாஸி உயிரிழந்து கிடந்தார். அவர் புகையில் மூச்சுத் திணறி இறந்ததாக கருதப்படுகிறது. இந்தக் கலவரத்தில் உயிரிழந்தவர் பாஸி மட்டும்தான்.

இந்த கண்டி கலவரங்களுக்கு முன்பாகவே, ஒரு பெரிய இன மோதலுக்கான சூழல் உருவாகிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். பிப்ரவரி 26ஆம் தேதி இரவு, கிழக்கு மாகாணத்தில் உள்ள அம்பாறையின் டி.எஸ். சேனநாயக சாலையில், இஸ்லாமியருக்குச் சொந்தமான கடை ஒன்றில் பரோட்டா சாப்பிட்டுக்கொண்டிருந்த சிங்களவர் ஒருவர், அந்த பரோட்டாவினுள் வேறு ஏதோ பொருள் இருப்பதாகவும் அந்தப் பொருள், மலட்டுத் தன்மையை ஏற்படுத்தக்கூடிய மருந்து என்றும் குற்றம்சாட்டினார். இதையடுத்து கடையின் உரிமையாளர் கைதுசெய்யப்பட்டார்.

இதற்கிடையில், ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படுத்தும் பொருளை (சிங்களத்தில் - வந்தபெத்தி) பரோட்டாவில் கலந்ததாக, கடை உரிமையாளர் கூறும் வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியானது. இந்த வீடியோ, வலுக்கட்டாயப்படுத்தி எடுக்கப்பட்டது என்பது பிறகு தெளிவுபடுத்தப்பட்டது. ஆனால், இதற்கிடையிலேயே அம்பாறையில் இஸ்லாமியர்களின் கடைகள், வழிபாட்டுத்தலங்கள் தாக்கப்பட்டன. பிறகு, அம்மாதிரி மருந்து ஏதும் உணவில் கலக்கப்படவில்லை என்பது ஆய்வுகளில் உறுதிப்படுத்தப்பட்டது.

"நீண்ட காலமாகவே, இஸ்லாமியர்களின் மீது இம்மாதிரியான குற்றச்சாட்டுகளை சிங்களர்கள் முன்வைத்துவருகின்றனர். இஸ்லாமியர் நடத்தும் சாப்பாட்டுக் கடைகளில் வந்தபெத்தியை வைப்பதாகவும் முஸ்லிம்கள் நடத்தும் ஜவுளிக் கடைகளில் உள்ளாடைகளில் ஏதோ ஒரு பொருளை வைத்து மலட்டுத் தன்மையை ஏற்படுத்துவதாகவும் வதந்திகளைப் பரப்பி, எங்கள் தொழிலை முடக்கப்பார்க்கின்றனர். அதன் தொடர்ச்சிதான் இது" என்கிறார் மௌலவி முர்ஷித்.

மார்ச் ஐந்தாம் தேதி மாலையே கண்டியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. "இந்த உத்தரவெல்லாம் முஸ்லிம்களுக்குத்தான். தாக்குதல்காரர்கள் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தினார்கள்" என்கிறார் சம்சுதீன். இதற்குப் பிறகு, ஆங்காங்கே தாக்குதல்கள் தொடர்ந்த நிலையில், மார்ச் ஆறாம் தேதி, 10 நாட்களுக்கு அவசர நிலையைப் பிரகடனம் செய்தது இலங்கை அரசு.

வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்களின் பயன்பாடும் தடைசெய்யப்பட்டது.

இந்த வன்முறை சம்பவங்களில் ஒட்டுமொத்தமாக 445 வீடுகள், கடைகளும், 24 பள்ளிவாசல்களும், 65 வாகனங்களும் சேதமடைந்துள்ளதாகவும் 28 பேர் காயமடைந்துள்ளதாகவும் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் செவ்வாய்க்கிழமையன்று காவல்துறையின் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர ஊடகங்களிடம் தெரிவித்திருக்கிறார்.

குறிப்பாக மார்ச் 5 முதல் எட்டாம் தேதிவரை தாக்குதல்கள் தீவிரமாக இருந்ததாகவும் கண்டியில் மட்டும் 423 கடைகளும் வீடுகளும் சேதப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். இந்த சம்பவங்கள் தொடர்பாக 280 பேர் கைதுசெய்யப்பட்டு, 185 பேர் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்தக் கலவரங்களை நடத்தியது யார்?

இந்தத் தாக்குதல் சம்பவங்களுக்கு ஆட்களைத் திரட்டி நடத்தியது யார் என்பது குறித்து தெளிவான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. காவல்துறையும் அதனை இதுவரை தெளிவுபடுத்தவில்லை. பலலேகல்ல காவல்துறையிடம் இது தொடர்பான தகவல்களை சேகரிக்க முயன்றபோது, அவர்கள் சந்திக்க மறுத்துவிட்டனர்.

இஸ்லாமியர்களைப் பொறுத்தவரை, இந்தப் பகுதியில் செயல்பட்டுவரும் மஹாசொன் பல¬காய எனும் அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க இதற்குக் காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் இருக்கிறது. தற்போது அவர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அவரது அலுவலகத்தில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமையன்று சோதனையும் நடத்தினர்.

கண்டியில் 1915ஆம் ஆண்டுக்குப் பிறகு, இஸ்லாமியர்களுக்கு எதிராக இவ்வளவு பெரிய தாக்குதல் நடப்பது இதுவே முதல் முறையாகும்.

சுமார் 1, 36,000 மக்கள்தொகையைக் கொண்டுள்ள கண்டியில், சிங்களர்களே பெரும்பான்மையாக வசிக்கின்றன. இங்கு வசிப்பவர்களில் 74 சதவீதம் பேர் சிங்களர்கள். இஸ்லாமியர்கள் 13 சதவீதமும் தமிழர்கள் 12 சதவீதமும் இங்கு இருக்கின்றனர்.

8 கருத்துரைகள்:

Who begind that answer Ranil and Champika

கலவரத்தை வழிநடாத்தியவர் யார் எனத் தலைப்பிட்டு அந்தக் கேள்விக்கு இந்த கட்டுரை முழுவதையும் வாசித்தால் பதில் இல்லை. கட்டுரை எழுதியவருக்கு தலைப்பில் தௌிவு இருக்கவில்லையா? அல்லது அந்த உண்மையை அறிந்து வைத்திருக்காமலேயே கட்டுரையை எழுதினாரா?

இந்த கலவரத்தை அம்பாறையுடன் தொடர்பு படுத்தி பார்க்கவேண்டும் , இதிலே ஒரு அரசியல் எச்சரிக்கை ஒன்று முஸ்லிமுக்கு ,விடப்பட்டிருக்கிறதை , முஸ்லீம் அதை இன்னும் உணரவில்லை , அந்த உணர்வு ஏற் படும் வரை அடி விழும் ,, எம்மை அரசோ ராணுவமோ பாதுகாக்கப்போவதில்லை ,ஒரு அரசியல் மாற்றம் முஸ்லிமுக்கு வரும் வரை அடிவிழுவது தவிர்க்கமுடியாது , மத , வழிபாடு மட்டுமல்ல , அரசியல் பின்னணியும் காலத்தின் தேவை நாம் செல்லும் வாகனம் வழியிலே மக்கர் பண்ணுவதாயின், வண்டி மாறுவதில்லையா /?......சில விடயங்களை பேச முடியாதுள்ளது ......சிந்தியுங்கள் ......சாட்சிக்காரனிடம் பேசுவதை விட , சண்டை காரனிடம் .பேசினால் பயன் கிட்டும்கலவரத்தை திட்டமிட்டு வழிநடாத்தியது இந்த நள்ளாட்சி அரசு என்பது தெட்டத் தெழிவாக தெறிகிரது.

Yes, Disappointment, Not related to the subject of the Article.

Essay is not suitable for the heading

It is not Ranil or Champika but it is incumbent president Maithri.If any one wants to know please read e-News lanka English.It is not just give the news but give all the details with perfect correction.

Post a Comment