Header Ads



மைத்திரிக்கு எதிர்ப்புத், தெரிவித்து ஆர்ப்பாட்டம்


யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொண்ட சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது.

யாழ்ப்பாணம், புனித பத்திரிசியார் கல்லூரியில் நடந்த நிகழ்வில் தொழில்நுட்பக் கூடத்தை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை  சேனாதிராசா, கர்தினால் மல்கம் ரஞ்சித் மற்றும் பல்வேறு முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வுக்கு வரும் சிறிலங்கா அதிபருக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், இறுதிப் போரின் போது சிறிலங்கா படையினரிடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்ட அருட்தந்தை பிரான்சிஸ் யோசப் அடிகளார் உள்ளிட்டோரின் நிலையை வெளிப்படுத்தவும் கோரி, பத்திரிசியார் கல்லூரிக்கு அருகே போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்தவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களைக் கடந்து சென்ற சிறிலங்கா அதிபர், அவர்களுடன் பேசவில்லை.

பின்னர், சிறிலங்கா அதிபரைச் சந்திக்கவென, அருட்தந்தை சக்திவேல் தலைமையில் மூன்று  பிரதிநிதிகளை சிறிலங்கா காவல்துறையினர் அழைத்துச் சென்றனர்.

எனினும், அவர்களையும் சிறிலங்கா அதிபர் சந்திக்காமல் சென்றுள்ளார். இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கடும் சினமடைந்து. சிறிலங்கா அதிபரை வசைமாரி பொழிந்தனர்.



No comments

Powered by Blogger.