March 09, 2018

வெட்கம், அவமானம், வேதனை..!


(சுடர் ஒளி பத்திரிகை, முன்பக்கத்தில் வெளியிட்டுள்ள ஆசிரியர் தலையங்கம் 08.03.2018)

அம்பாறை மற்றும் திகனவில் ஆரம்பிக்கப்பட்ட முஸ்லிம்  மக்களுக்கு எதிரான வன்முறை தீயாகப் பரவி, தற்போது முஸ்லிம்கள் செறிந்துவாழும் பகுதிகளில் தனது அகோரமுகத்தைக் காட்டிவருகின்றது. குறிப்பாக, முஸ்லிம்களின் சொத்துகள் சூறையாடப்படுவதுடன், இறைவனின் மாளிகையாகக் கருதப்படும் பள்ளிவாசல்களும் அடித்துநொறுக்கப்படுகின்றன.

தலைக்குமேல் வெள்ளம் வந்தபின்பு எதிர்நீச்சல்போடத் துடிக்கும் அரசோ, முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளின் பின்னணியில் இனவாத அடிப்படை சக்திகள் இருப்பதாகவும், திட்டமிட்ட அடிப்படையிலேயே இவை இடம்பெற்றுவருவதாகவும் சமாளிப்பு பாஷை பேசிவருகின்றது. கடந்த காலங்களில் சிங்கள, பௌத்த மக்கள் மத்தியில் இனவாதத்தை விதைத்த பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரும், பிரித் ஓதவேண்டிய வாயால் தகாத வார்த்தைகளை அள்ளிவீசிய மட்டக்களப்பு மங்களாராமாய  விகாராதிபதி அம்பிட்டியே சுமணரத்தின தேரரும் சிங்கள இளைஞரின் இறுதிக்கிரியை நடந்த தினமன்று களத்தில் இருந்தனர்.

அதன்பிறகுதான் இனவாதத் தீ கொழுந்துவிட்டெறிய ஆரம்பித்தது. அளுத்கமவிலும் இதே பாணியில்தான் இனவாதிகளின் வேட்டை இடம்பெற்றது. சட்டத்தையும், ஒழுங்கையும் நிலைநாட்டவேண்டிய பொலிஸார், காக்கிச்சட்டைக்குரிய கம்பீரத்தை மறந்து  காவியுடைக்கு அஞ்சி கைகட்டி வேடிக்கை பார்த்ததை என்னவென்று விவரிப்பது?

சம்பவத்தின் பின்னர் விசேட அதிரடிப்படை, இராணுவம், பொலிஸ்  என களத்தில்  பாதுகாப்பு ஏற்பாடுகள் இருந்தபோதும், ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த சந்தர்ப்பத்திலும் காடையர்களின் அட்டகாசங்கள் தொடருமானால், இதன் பின்னணி என்னவென்பது தொடர்பில் ஆழமாக ஆராயவேண்டும். 1915ஆம் ஆண்டு முஸ்லிம்களுக்கு எதிரான கிளர்ச்சியையும், 83இல் அரங்கேறிய இனக்கலவரத்தையும் விழித்திரைக்கு முன்னால் கொண்டுவருகின்றன அம்பாறை, திகன சம்பவங்கள்.

அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட பின்னர், தெல்தெனிய, திகன, பூகோட, தென்னக்கும்புற, மாவத்தகம, யஹலதென்ன, எழுகோட, மெனிக்கின்ன, அக்குறணை அம்பத்தனை உட்பட்ட பல பிரதேசங்களில் பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம்  வர்த்தக நிலையங்கள் தாக்கப்பட்டுள்ளன.

வத்தேகம பகுதியில் முஸ்லிம்  வர்த்தகரொருவரின் கடை எரிவதை நேரடியாகவே அதிகாலை ஒரு மணியளவில் பார்த்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான  ரவூப் ஹக்கீம் கவலையடைவதை விடியோ  ஒன்றில் காணமுடிந்தது. அமைச்சர்களான ரிஷாத் பதியுதீன், மனோ கணேசன் ஆகியோர் அமைச்சரவையில் காரசாரமாக விவாதித்துள்ளனர். அரசானது  அவசரகால நிலைமையை ஒருவாரத்துக்கு பிரகடனப்படுத்தியுள்ளது. ஊரடங்குச் சட்டம் தொடர்ந்து கண்டி மாவட்டத்தில் அமுலில் இருந்துவருகிறது. பாடசாலைகள் மூடப்பட்டு கல்விச் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. முஸ்லிம்  மக்கள் வீதிகளில் நடமாடவே அச்ச்சப்படும்  ஒரு பரிதாப சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

கண்டி முஸ்லிம் மக்கள் மீதான அடாவடியைக் கண்டித்து கிழக்கில் முஸ்லிம்கள் நடத்திய ஹர்த்தாலின்போது அங்கும் பலர் பொலிஸாரால்  கைதுசெய்யப்பட்டனர். அமெரிக்கா, இந்தியா  உட்பட்ட நாடுகள் இலங்கையில் தமது பிரஜைகளுக்கு பயண எச்சரிக்கை விடுத்துள்ளன. ஆனால், இந்த சம்பவங்கள் வெளியுலகத்துக்கு தெரிந்துவிடக்கூடாதென கண்டி மாவட்டத்துக்கான இணைய சேவைகளையும் சில தொலைத்தொடர்பு  நிறுவனங்கள் துண்டித்துவிட்டன. அத்துடன், சமூக ஊடகங்கள் பாவிப்பதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

தம்புள்ளையில் ஆரம்பித்து பலாங்கொடை, அளுத்கம, கிந்தோட்டை, அம்பாறை என்று பரவிய முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் இப்போது திகனவில் வந்துநின்று மீண்டும் ஆங்காங்கே தலைதூக்க ஆரம்பித்துள்ளன.
1983ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனக்கலவரமும் இதேபோல்தான் கொஞ்சம் கொஞ்சமாக ஆங்காங்கே நடந்து பின்னர் முழுவதையும் அழித்துத் தள்ளியது.அப்போது தமிழர்களும் அவர்தம் சொத்துகள் மட்டும் அழியவில்லை. அத்துடன், இலங்கையின் நற்பெயரும் சேர்ந்தே அழிந்தது. இப்போதும் எமது சகோதர இனமான முஸ்லிம்களுக்கும் அதே அனர்த்தம் நடந்துகொண்டிருக்கிறது.

முஸ்லிம்கள் மீதான இந்தத் தாக்குதல்களை இலேசான விடயமாகக் கருதிவிடமுடியாது. திகன சிங்கள இளைஞர் உயிரிழந்த சம்பவத்தில் அப்பகுதி முஸ்லிம்  இளைஞர்கள் சிலர் மீது  தவறு உண்டு. அவர்களை சட்டப்படி தண்டிக்கவேண்டும். அதில் மாற்றுக்கருத்துக்கே இடமில்லை. ஆனால், அந்தச் சட்டத்தைக் காடையர்கள் கையிலெடுத்திருப்பதும், வேலியே  பயிரை மேய்ந்த கதையாக பாதுகாப்புத் துறையினர் அதனைப் பார்த்து வாளாவிருப்பதும்தான் கொடுமையிலும் கொடுமை. முஸ்லிம்கள் மீதான தொடர் தாக்குதல்களைப் பார்க்கும்போது அவர்களின் பொருளாதாரத்தை சிதைத்து அகதிகளாக  அடிமைகளாக ஆக்க இந்தச் சிங்களக் காடையர்கள் கங்கணங்கட்டிக்கொண்டு செயற்படுவதாகவே பட்டவர்த்தனமாகத் தெரிகிறது.

தேசிய பந்தோபஸ்தை அரசு பலப்படுத்தினாலும் முஸ்லிம்களைத் தாக்கும் சிங்களக் காடையர்கள் அடங்கியதாகத் தெரியவில்லை. தொட்டதற்கெல்லாம் குரல் எழுப்பும் மகாநாயக்க தேரர்மார்கள்  கூட அடக்கி வாசிப்பதாகவே தெரிகிறது. முஸ்லிம் சமயத் தலைவர்கள் தமது மக்களை ஆசுவாசப்படுத்தினாலும் நடக்கும் ஒவ்வொரு சம்பவங்களும் அவர்களின் உணர்வுகளைத் தட்டி எழுப்புவதாகவே இருக்கின்றது. அமைச்சர் மங்கள சமரவீர சொன்னதுபோல இனவாதச் செயற்பாடுகளை மேற்கொள்பவர்களின் குடியுரிமை பறிக்கப்பட வேண்டும் என்பதுகூட ஒருவிதத்தில் நியாயமானதுதான்.

இனவாத கோரப்பசியால் தமிழ் பேசும் சமூகங்களை விழுங்க நினைக்கும் சிங்களச் சமூகம் கடந்தகால பட்டறிவுகளால் இன்னமும் திருந்தியபாடில்லை. வரலாறை அவர்கள் திரும்பிப்பார்க்க மறுப்பதால் அவர்கள் கொடுக்கப்போகும் விலையும்  அதிகமாகத்தான் இருக்கப்போகிறது. முஸ்லிம்  சமூகத்தின் பொருளாதாரத்தை சிதைப்பதற்காக எடுக்கும் செயற்பாடுகளால் நாட்டின் தேசியப்  பொருளாதாரத்துக்கே உலை வைக்கப்படுகிறது. தமிழ் பேசும் மக்களின் வாக்குகளால் வந்த நல்லாட்சிகூட சிங்களப் பேரினவாதிகள் முன்னிலையில் செய்வதறியாமல்  விக்கித்து நிர்வாணமாக நிற்கும் அவலநிலைமை. பரிதாபம்.

சிங்கள இனவாதத்தின் இந்தக் கோரமுகம் சர்வதேசத்துக்கு தெரியப்படுத்தப்படவேண்டும். தமிழர்களின் பொருளாதாரத்தை, வாழ்வாதாரத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்கியவர்கள் இப்போது முஸ்லிம்கள் மீதும்  கை  வைத்திருப்பதைப் பார்த்து அமைதியாக இருந்துவிடமுடியாது. எடுத்தவுடன் மதத்  தலங்கள்  மீது, பொருளாதார நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தும் காடையர்கள் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு நல்லிணக்கம், சகவாழ்வு என்பதன் அர்த்தம் குறித்து சொல்லிக் கொடுக்கப்படவேண்டும். முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதிகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு வரை கொண்டுசெல்லப்படவேண்டும். அப்போதே சிங்களத்தின் உண்மை முகம் உலகுக்குப் புலப்படும்.

சிங்களப் பேரினவாதத்தால் அச்சமுற்று அடுத்து என்ன நடக்குமோ என்று விழிபிதுங்கி நிற்கும் எமது சகோதர இனத்தின் கவலைகளில் பங்கேற்று அவர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்கும் மகோன்னத போராட்டத்தில் எமது "சுடர் ஒளி'   தோளோடு தோளாக நிற்கும் என்பதை பகிரங்கமாக கூறிக்கொள்ள விரும்புகிறோம். முஸ்லிம்  மக்களுக்கு எதிரான எந்தவொரு அநீதியை கண்டு வெகுண்டெழவும் அவற்றை பூசி மெழுகாது, எவருக்காகவும் அஞ்சி உண்மைகளை வெளிக்கொணராமல் இருக்கவும் நாம் தயங்கி நிற்கப்போவதில்லை. உள்ளதை உள்ளபடி உண்மையை உரக்கச்  சொல்வோம் நாம். முஸ்லிம்கள் மீது தொடரும் தாக்குதல்களால் இலங்கை மாதா  அடைந்திருப்பது  வெட்கம்! அவமானம்!! வேதனை!!!

9 கருத்துரைகள்:

நன்றிகள் கோடி " சுடர் ஒளி "

This is humanity. Huge thankyou to Sudar Oli

சொன்னதுபோல் உங்களது பணிதொடரட்டும்.

இதுதான் பத்திரிகை தா்மம்...

timrly gratitude by suder oli. no word to thanks. million thanks to suder oli . upur bridging the minorities .

கோடி புண்ணியம் "சுடர் ஓளிக்கு

உள்ளதை உள்ளபடி உலகிற்கு சொல்லியதற்கு நன்றி.

Sudar oli is the best mark of truth.so very thanks for your appearance.

Post a Comment