Header Ads



முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையாளர்களை, தீவிரவாதிகளாக வர்ணிக்கும் ஹலீம்

கண்டி தீவிரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பில் பாதுகாப்புத் துறையினருக்கு எதிராக பல்வேறு முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுத்து சட்டநடவடிக்கை எடுக்க அரசாங்கத்தைக் கோரியுள்ளதாகவும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் தெரிவித்தார்.

கண்டி மாவட்ட செயலக காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற இழப்பீடு வழங்குவது தொடர்பான கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் குறிப்பிட்டார்.

சில பிரதேசத்தில் எஸ்.ரி.எப். படையினர் முஸ்லிம்களை பலவந்தமாக வெளியேற்றியதாகவும், இதன் பின்னர் தீவிரவாதிகளினால் தாக்குதல்கள், தீ வைப்புச் சம்பவங்கள் இடம்பெற்றதாகவும் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. அதேபோன்று, மற்றும் சில பகுதிகளில் தீவிரவாதிகளுக்கு பொலிஸார் ஒரு மணி நேர அவகாசம் வழங்கியுள்ளனர். அந்த நேரத்தில் தாக்குதல்களை முன்னெடுக்குமாறு கூறியுள்ளதாகவும் முறைப்பாடுகள் உள்ளன.

இந்த விடயங்கள் தொடர்பில் தற்பொழுது சி.ஐ.டி. யினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இந்த விசாரணையின் பின்னர் குற்றவாளிகளுக்கு புதிய சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கப்படும். இதன்படி, 4 வருடங்களுக்கு குற்றவாளிகள் பிணையின்றி சிறைப்படுத்தப்படுவார்கள் எனவும்  அமைச்சர் மேலும் கூறினார்.

இக்கலந்துரையாடலில், அப்பிராந்தியத்தின் பிரதேச செயலாளர்கள், உலமாக்கள், பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.  

No comments

Powered by Blogger.