Header Ads



"புலம்பெயர் முஸ்லிம்களது குரலுக்கு, அரசு செவிமடுக்க வேண்டும்"


(நவமணி பத்திரிகை வெளியிட்டுள்ள, ஆசிரியர் தலைங்கம்)

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல்கள் இப்போது சர்வதேச விவகாரமாக மாறியுள்ளது. 

இச்சம்பவம் இடம்பெற்றது முதல் இதுவரை 12 வெளிநாடுகளில் புலம்பெயர் இலங்கை முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டங்களையும் கவனஈர்ப்புப் போராட்டங்களையும் நடத்தி இனியும் இவ்வாறான தாக்குதல்கள் நடைபெறாதிருப்பதனை உறுதிப்படுத்துவதோடு சூத்திரதாரிகளுக்கு தண்டனை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்திருப்பதனை சர்வதேச ஊடகங்களில் காணக்கூடியதாக உள்ளது. 

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணைக்குழுவின் அமர்வுகள் நடைபெறும் தினங்களில், புலம்பெயர் இலங்கை முஸ்லிம் அமைப்புக்கள் பல இலங்கை முஸ்லிம்களுக்கு உருவாகியுள்ள பாதுகாப்பற்ற நிலை குறித்து எடுத்து விளக்கியுள்ளனர். 

கடந்த 19ஆம் திகதி ஜெனிவாவில் இலங்கை முஸ்லிம்களால் பிரமாண்டமான ஊர்வலம் ஒன்று நடத்தப்பட்டது. பிரிட்டன், ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி, சுவீடன் உட்பட்ட ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்த இலங்கை முஸ்லிம்களே இந்த ஊர்வலத்தை நடத்தினர். 

இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றியவர்கள் இலங்கையின் தேசிய கொடியை ஏந்திக்கொண்டே பங்குபற்றியதனை அவதானிக்கக்கூடியதாக இருந்தது. 

இவர்கள் இதன்மூலம் நாட்டுக்கு ஒரு செய்தியை வழங்க முற்பட்டிருக்கிறார்கள். நாம் நாட்டுக்கு எதிரானவர்களல்ல. நாம் கேட்பது எமது தாய் நாட்டில் சட்டத்தினையும், நீதியையும் நிலைநாட்ட வேண்டுமென்றே என்பதாகும். 

கண்டி மற்றும் அம்பாறையில் நடைபெற்ற கலவரத்தின்போது இந்த நாட்டின் சட்டம் தூங்கியது பற்றியே அவர்கள் குறிப்பிடுகிறார்கள். சட்டத்தையும், நீதியையும் நிலைநாட்டத் தவறிய பொலிஸார் பற்றியே அவர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள். 

இந்த நாட்டில் தமிழ் மக்கள் மீது இழைக்கப்பட்ட அநீதி காரணமாக இன்று உலகின் பிரதான நகரெங்கும் அவர்கள் இலங்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். இலங்கை அரசுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கி வருகிறார்கள். 

கண்டிச் சம்பவங்களின் பின் சர்வதேசத்தில் இலங்கைக்கு எதிராக இயங்குவதற்கு மற்றொரு சக்தியை இலங்கை பலவந்தமாக இறக்குவதற்கு காரணமாக இருந்துள்ளது. இந்தக் கதவை மூடி விடும் திறப்பு இலங்கை அரசிடமே இருக்கின்றது. 

கண்டி சம்பவங்கள் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்தி எதிர்காலத்தில் சிறுபான்மை மக்களுக்கு இவ்வாறான தாக்குதல்கள் நடைபெறாதிருப்பதனை உறுதிப்படுத்துவதன் மூலம் மட்டுமே அதனைச் செய்யலாம். 

முஸ்லிம்களை இந்த நாட்டிற்கு எதிரானவர்களாக மாற்றுவதற்கு இடமளிக்க வேண்டாம் என்பதே எமது கோரிக்கை. அதனைத் தடுக்கும் பொறுப்பு அரசுக்கும், பெரும்பான்மைச் சமூகத்துக்குமே இருக்கின்றது. 

புலம்பெயர் வாழ் முஸ்லிம்கள் இந்த விடயங்களில் பொறுமையுடனும், நிதானத்துடனும் நடப்பது அவசியம் என்பதனையும் வலியுறுத்திக் கூற விரும்புகிறோம்...!

No comments

Powered by Blogger.