Header Ads



முஸ்லிம் சமூகத்தை தாக்குவதற்கு, ஆட்சியாளர்கள் தயாராகின்றனர் - ஹரீஸ் எச்சரிக்கை

சிறுபான்மைச் சமூகங்களின் நலன்களுக்காக அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் அவசரமாக ஓரணியில் ஒன்று திரண்டு சிறுபான்மைச் சமூகத்திற்கு எதிராக வர இருக்கின்ற மாகாண சபை தேர்தல் முறைமையை மாற்றி அமைத்து மீண்டும் பழைய விகிதாசார தேர்தல் முறைமைக்கு கொண்டு வருவதற்கான முயற்சியினை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதி அமைச்சர் ஹரீஸ் தெரிவித்தார். 

விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸின் முயற்சியினால் சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி கிரிக்கெட் பாடசாலையாக விளையாட்டுத்துறை அமைச்சினால் தெரிவு செய்யப்பட்டு அதற்கான கடின பந்து விளையாட்டு உபகரணங்களும் சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்களும் வழங்கி வைக்கும் நிகழ்வு கல்லூரி அதிபர் ஏ.சி.ஏ.எம். இஸ்மாயில் தலைமையில் சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.  பிரதி அமைச்சர் ஹரீஸ் தொடர்ந்தும் உரையாற்றுகையில், 

சிறுபான்மை சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்கள் இந்த நாட்டில் சமூக ரீதியான சவால்களுக்கு முகம்கொடுத்துக் கொண்டிருக்கின்றோம். அம்பாறை மற்றும் கண்டி பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட வன்செயலின் ஊடான இன வன்முறைத் தாக்குதல் சம்பவங்களுக்கு முகம் கொடுத்து இளைப்பாறுவதற்கிடையில் மீண்டும் முஸ்லிம் சமூகத்தையும் சிறுபான்மை சமூகத்தையும் நோக்கி அறிவு ரீதியாக தாக்குவதற்கு இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் தயாராகி வருகின்றனர்.  

மாகாணசபை தேர்தல் முறையிலான சட்டம் அடுத்த 21ஆம் திகதி பாராளுமன்றத்திற்கு கொண்டுவரப்படவுள்ளதாக உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சரினால் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பாராளுமன்ற உறுப்பினர்கள் அளிக்கவேண்டும் என்று அறைகூவல் விடுக்கப்பட்டிருக்கிறது. 

குறித்த சட்டத்தை கொண்டுவந்தபோதே முஸ்லிம், தமிழ், மலையக தமிழ்  பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் எதிர்த்தோம். ஆனால் எல்லை நிர்ணய ஆணைக் குழு மிக நியாயமாக நடந்துகொண்டு சிறுபாண்மை சமூகங்களுக்கு பாதிப்பு ஏற்படாதவகையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று ஆட்சியாளர்கள் வாக்குறுதி அளித்திருந்தார்கள். இதன்போது பாதுகாப்பிற்காக குறித்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறப்பட வேண்டுமென்ற நிபந்தனையினை நாம் விதித்திருந்தோம். 

இந்நிலையில் சுதந்திர எல்லை நிர்ணய ஆணைக்குழு அதன் இறுதி அறிக்கையை தயார்படுத்தி இருக்கின்றது. அந்த அறிக்கை சிறுபான்மை சமூகங்களுக்கு பாதகமானதாக காணப்படுகின்றது. தமிழ், முஸ்லிம் மலையக மக்களுக்கு திருப்தியற்ற வகையில் தொகுதிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றது. உதாரணமாக முஸ்லிம் சமூகத்தை எடுத்துக் கொண்டால் இந்த நாட்டில் 10 வீதமான மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்ற நிலையில் 5 தொகுதிகள் உருவாக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் அறைவாசிதான் பிரதிநிதித்துவத்திற்கு உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. எமது சமூகத்திற்குரிய அரைவாசி பிரதிநிதித்துவம் மறுக்கப்பட்டிருக்கின்றது. 

இந்நாட்டில் 25 மாவட்டங்கள் உள்ளன. அவற்றுல் 18 மாவட்டங்களில் முஸ்லிம்களுக்கு மாகாணசபை பிரதிநிதித்துவத்தை பெற முடியாமல் தொகுதிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இது சமூகத்திற்கு எதிரான மிகப் பெரிய பாதகமான இறுதி அறிக்கையாக காணப்படுகிறது. 

இவ்வாறான ஒரு சூழ்நிலையில் இறுதியாக நடைபெற்ற ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான குழுக் கூட்டத்தில் இவ்விடயம் தொடர்பாக பிரதமரை எதிர்த்து பேசியபோது எங்களுக்குச் சொல்லப்பட்டது, புதிய உள்ளுராட்சி மன்ற தேர்தல் சட்டத்திற்கமைவாக நடைபெற்ற அண்மைய தேர்தலானது உள்ளுராட்சி மன்றங்களில் ஸ்திரமற்ற ஆட்சியை உருவாக்கியுள்ளது. இதனால் தொகுதிவாரி தேர்தல் முறை இந்நாட்டிற்கு உண்மையில் பொருத்தமற்றது என்பதை உணர்தியுள்ளது. எனவே இந்த நாட்டில் ஸ்திரமான ஆட்சி முறை தேவை என்றால் பழைய விகிதாசார தேர்தல் முறைக்கு செல்லுவதே சிறந்தது என்ற அடிப்படையில் மாகாண சபை தேர்தல் முறைமையும் மீண்டும் பழைய முறைமைக்கு கொண்டு செல்வதற்கு நாங்கள் நடவடிக்கை எடுக்க இருக்கின்றோம் என்ற பொருத்தம் தரப்பட்டது. 

ஆனால் இப்பொழுது திடீரென்று மாகாண சபை தேர்தல் முறைமையை மாற்றுவதற்கான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. இது சிறுபான்மை சமூகத்தின் மீது அரசு குண்டைத் தூக்கி போட்டதுபோல் உள்ளது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் சிறுபான்மை சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதற்கும் அஞ்சாமல் சமூகத்திற்காக செயற்படவேண்டும்.

நாங்கள் எதற்கும் அஞ்சாதவர்கள் சமூக விடயங்களை எவ்விடத்திலும் விட்டுக்கொடுத்தது கிடையாது. அன்று பாராளுமன்ற சபா மண்டபத்தில் சமூகத்திற்காக பிரதமருக்கு விரலை நீட்டி சமூகத்தின் பாதுகாப்பை கேட்டவர்கள். எனவே இந்த விடயத்திலும் நாங்கள் தெளிவாக செயற்பட வேண்டியிருக்கிறது.

சிறுபான்மை சமூகத்திற்கு நியாயமான நீதியான தேர்தல் முறையினை ஏற்படுத்த வேண்டும். அதற்காக தமிழ், மலையக மற்றும் முஸ்லிம் சமூகத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும். பிரதமர் அவர்களுக்கு நம்பிக்கை இல்லாப் பிரேரனை என்ற ஒரு விடயம் இந்த நாட்டில் அரங்கேர இருக்கின்றமை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மிகப் பெரும் பேரம் பேசும் சக்தியாக அமையவுள்ளது. இது ஏ.கே 47 அல்லது ரி 56 ஆயுதங்களை விட சக்திவாய்ந்த பெரும் ஆயுதமாக இவ்விடயத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களின் வகிபாகம் மாறியிருக்கின்றது. 

அவ்வாறான ஒரு பெரும் பேரம் பேசும் சக்தியை வைத்துக் கொண்டிருக்கின்ற முஸ்லிம், தமிழ் மற்றும் மலையக தமிழ் சமூகங்களின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் சிறுபான்மைச் சமூகங்களின் நலன்களுக்காக அவசரமாக ஓரணியில் ஒன்று திரண்டு சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக வர இருக்கின்ற மாகாண சபை தேர்தல் முறைமையை மாற்றி அமைத்து மீண்டும் பழைய விகிதாசார தேர்தல் முறைமைக்கு கொண்டு வருவதற்கான முயற்சியினை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த தேர்தல் முறை மாற்றம் என்பது சமூகத்தின் நீண்ட வரலாற்றைக் கொண்ட ஒரு நடவடிக்கை. எனவே சமூகத்திற்கான இப்பெரும் ஆபத்தினை நாங்கள் மௌனமாக பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்ற விடயத்தை இந்த கல்வி சமூகம் இருக்கின்ற சபையில் கூறிக்கொள்ள விரும்புவதாக பிரதி அமைச்சர் ஹரீஸ் தெரிவித்தார்.

(அகமட் எஸ். முகைடீன்)

3 comments:

  1. Dear Mr.Haris,

    இலங்கை தமிழர்களும் இந்திய தமிழர்களும் இதில் பாதிக்கப்பட போவதில்லை மாறாக முஸ்லிம்களே வெகுவாக பாதிக்கப்படப்போகிறார்கள். எனவே இதை திசை திருப்ப என்ன வேண்டாம். தொகுதிகளிலே மக்கள் பரம்பலுக்கு ஏற்ற வகையிலே தான் பாராளுமற்றதிலும் சரி மாகாண சபிகளிலும் சரி பிரதிநிதித்துவம் பெறப்பட வேண்டும் என்பதே இந்த மறுசீர் மாகாண எல்லை வரைபின் கோட்பாடு. அரசில் அங்கம் வகித்தோ அல்லது ஜால்ரா வாசித்தோ அல்லது காகா புடிச்சோ இனி பாராளுமன்றம் செல்லமுடியாது. இது ஜனநாயகத்துக்கு கிடைத்த மாபெரும் வெற்றி. உதாரணமாக வன்னி தேர்தல் மாவட்டத்தில் 2010 பாராளுமன்றத் தேர்தலில் ஆறு உறுப்பினர்களில் மூன்று உறுப்பினர்கள் முஸ்லிம்களைக தேர்ந்தெடுக்கப்பட்டது அதுவும் அந்த தேர்தல் மாவட்டத்தின் சனத்தொகையில் 5% மும் இல்லாமல். இனி இவை யாவும் கனவிலும் நிறை வேறாது. இங்கே நன்மை பெற போவது தமிழர்களே எனவே நாங்கள் எதிர்க்க வேண்டிய அவசியம் இல்லை. பாராளுமன்றத்திலும் தமிழர்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும் , இதற்க்காக தேசிய பட்டியல் உறுப்பினர்களின் எணிக்கையும் குறைக்கப்படல் வேண்டும். தனி ஒரு சமூகத்தின் நலன் பாராமல் சகல மக்களின் நலன் சார்பாக பார்த்தால் இது நனறாகவே புரியும் எனவே எல்லா முஸ்லீம் உறுப்பினர்களும் தங்கள் ஆதரவை இதட்கு நல்க வேண்டும் என்பதே எனது கோரிக்கை.

    ReplyDelete
  2. அடி விழும் போது மட்டும் ஓடி வந்து “நாம் சிறுபான்மையினர், எல்லாரும் சேர வேண்டும்” என்பார்கள். பின்னர் காசு-பதவிகள் கிடைத்தால் ..பேப்..பே.. தான்.

    எதிரிகளை 100% நம்பலாம், சேரலாம். துரோகிகளை நம்ப முடியாது. அதனால் தான், புலிகளை தோற்கடிக்க உதவியவர்களேயே சிங்களவர்கள் இப்போ நம்புகிறார்கள் இல்லை.

    ReplyDelete
  3. ஹரீஷ் அவர்களே, நீங்கள் இந்த அறிக்கை விடுவதிலும், வீரர் என்று காட்டுவதிலும், Facebook, Jaffna Muslim,...etc. போன்றவற்றில் காட்டும் முனைப்பும்.... அதட்கு எதிர்மாறாக பாராளுமன்ற வாக்கெடுப்பில் சரி, இந்த ஆணைக்குழுக்களிலும் சரி எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் ஒரு ஆவணம் ரீதியாக சரி ஒரு காத்திரமான விடயங்களை செய்தது இல்லை. கடந்த உள்ளூராட்சி சபை தேர்தல் சட்டமூலம்... அது முஸ்லிம்களுக்கு பாதகமானது.... ஆனால் நீங்களும் உங்கள் தலைமையும் ஏனைய எம்பி மாறும் கைதூக்கினீர்கள் தானே. கல்முனை மாநகர சபையில் வட்டாரப்பிரிப்பில், இரட்டை வட்டாரம் என்று கூறி தமிழர்களுக்கு முஸ்லீம் வட்டாரத்தையும் தாரை வார்த்து கொடுத்தீர்களே.

    போனதுதான் போகுது... அது என்ன சிறுபான்மை எம்பிக்கள் ஒற்றுமையாக இருந்து செயட்பட வேண்டும் என ஒரு கூட்டத்தில் பேசி, அதை இந்த ஊடகங்களுக்கும் கொடுத்தாள் முஸ்லிம்களின் உரிமைக்கு போராடுகிறீர்கள் என்று அர்த்தமா....!!! மாகாணசபை எல்லைகள் இப்படித்தான் அமைய வேண்டும் என்று உங்கள் சார்பில் அல்லது உங்கள் கட்சி சார்பில் ஒரு ஆவணம் உண்டா? அதை அந்த ஆணை குழுவிடம் சமர்ப்பித்தீர்களா?? சிறு பான்மை எம்பிக்கள் என்று யாரையெல்லாம் குறிப்பிடுகிறீர்கள்?? ஏன் உங்களுக்கு பெரும்பாண்மை எம்பிக்களிடம் இது எங்களுக்கு பாதகமான விடயம் இந்த சட்டமூலத்துக்கு எதிராக வாக்களிக்கும் படி உங்களால் கேட்க முடியாது? பெரும்பான்மை எம்பிக்கள் எல்லாம் இதட்கு ஆதரவாகவா வாக்களிக்க போகிறார்கள்?

    அது என்ன சபாமண்டபத்தில் பிரதமருக்கு எதிராக விரலை நீட்டி சமூகத்தின் பாதுகாப்பை கேட்டவர்கள் என்று ஒரு பெருமை? . ஒரு உயரிய சபையில் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்ற பண்பு உண்டு. அதே நேரம் நீங்கள் சாப மண்டபத்தில் காட்டிய கூத்து, கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிராக பாதுகாப்பு தரப்பினரின் ஆசீர் வாதத்துடன் பேரின வாதிகளால் மேட்கொள்ளப்பட்ட வன்முறை சம்பத்தப்பட்ட விவாதம். அதில் தங்களுக்கு நடந்த அநியாயத்தை பற்றி பேசுவதட்கு ஒதுக்கப்பட்ட விவாதம். அந்த விவாதத்தையே குழப்பும் நிலைக்கு அது சென்றது. ஏனையவர்களும் இந்த விவாதத்தின் அருமை தெரிந்தவர்களும் உங்களது கூத்தை பார்த்து சிரித்துக்கொண்டார்கள். அதில் சபைக்கு தலைமை தாங்கியவர் உங்களுக்குரிய விவாதம் தயவு செய்து குழப்பாதீர்கள் என்றும் கூறுகிறார். பிரதமருக்கு விரல் நீட்டினாள் பாதுகாப்பு கிடைத்து விடுமா? அதே பிரதமர் ஆட்சியில் நீங்களும் பங்கு தாரர் தானே? ரணில் என்பவர் சாதாரண ஆள் கிடையாது. ஒரு பழம்பெரும் கட்சியின் தலைவர்,நாட்டின் பிரதமர், நீண்ட அரசியல் அனுபவம் உள்ளவர், அவரை சுற்றி அமைச்சர்களும் அவரின் மீது அபிமானம் கொண்ட லட்சக்கணக்கான மக்களும் உண்டு. எனவே அவர் நமது எதிரி என்றாலும் நாம் பண்பாக நடந்து கொள்ள வேண்டும். உங்களின் இந்த நடத்தையால் ஒரு சிறு துளியும் உங்களுக்கோ சமூகத்துக்கோ அல்லது கண்டி பிரச்சினைக்கோ ஒரு சிறு துளி லாபமும் கிடையாது. அதே நேரம் மாபெரும் நஷ்டம்.

    ஹரீஸ், மேசையில் ஊண்டி அடிப்பதாலோ, இப்படி விரல் நீட்டி கதைப்பதாலோ, ஏகே 47 ரி56 என்று கூறுவதாலோ நீங்கள் வீரர் ஆகவோ அல்லது முஸ்லிம்களின் எதிர்கால அரசியல் தலைவராகவோ மாற முடியாது மாறாக கொஞ்சன் அரசியலை படியுங்கோ, மூளையையும் பாவியுங்கோ.

    ஹரீஸ் அது என்ன பேரம் பேசும் சக்தி...இதுவரையும் பேரம் பேசி கிழித்து விட்டீர்கள் இனியும் பேரம் பேசி எதை சாதிக்கப்போகிறீர்கள் நீங்களும் உங்கள் தலைவரும். இதுக்கு பெயர் பேரம் பேசுவது இல்லை. அரசியல் விபச்சாரம்.

    ஹரீஸ் பிரதமருக்கு நம்பிக்கை இல்லா பிரேரணை வருவது ஒரு சமாச்சாரம். மகானை சபை சட்டத்திருத்தம் வருவது இன்னொரு சமாச்சாரம். இவை இரண்டையும் ஓன்று படுத்தி பேசுவதே உங்களது மட்டமான, அறிவற்ற, ஒரு அரசியல் நோக்கற்றவர்களின் சிந்தனையாகும். இது தான் ஏனையவர்களும் மாற்று சமூகத்தவர்களும், நாங்களும் உங்களையும் உங்கள் தலைமையையும் ஒரு அரசியல் விபச்சாரர்களாக பார்க்கிறோம்.
    ஹக்கீம் அன் கோ தயவு செய்து அரசியலில் இருந்து ஒதிங்கிக் கொள்ளுங்கள் அல்லது மக்களே இவர்களை ஒதுக்கி விடுங்கள். அதுதான் முஸ்லிம்களுக்கு நன்மை பயக்கும்.

    ReplyDelete

Powered by Blogger.