March 25, 2018

"இன்னொரு கலவரம் வரும்வரை, எந்த முன்னேற்பாடுமில்லாத நிலையிலேயே நாம் இருக்கின்றோம்"

இனக் கலவர பின்புலமும், முஸ்லிம்களுக்கு முன்னாலுள்ள பொறுப்பும்

-ரவூப் செயின்-

1983 ஜுலைக் கலவரத்தின் காயங்கள் இன்னும் ஆறவில்லை. போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம் என அப்போதைய ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்தன பாராளுமன்றில் செய்த பிரகடனம் இனக்கலவரத்திற்கு மறைமுகத் தூண்டுதலளித்தது. அன்றிலிருந்து தமிழ், - சிங்கள இனப் பகை முரண்பாடு வலுத்து ஓர் இனப் போராகவே வெடித்தது. 30 ஆண்டுகாலப் போரின் பின்னர் நாடு முழு அமைதியடையும் என்ற எதிர்பார்ப்பு மீளவும் சுக்கு நூறாக்கப்பட்டுள்ளது. 2012 இல் தம்புள்ளை கைரிய்யா பள்ளிவாயலில் தொடங்கிய முஸ்லிம் விரோதத் தாக்குதல்கள் தற்போது முழு வேகம் கொண்டுள்ளதை சமீபத்திய காட்சிகள் நிறுவிக் கொண்டே இருக்கின்றன.  

அளுத்கம, தர்காநகர், பேருவலை,            ஜிந்தோட்டை, அம்பாறை, திகன, தெல்தெனிய என ஒன்றன் பின் ஒன்றாக முஸ்லிம்களின் வணிக நிலையங்களையும் பள்ளிவாயல்களையும் இலக்குவைத்து இனவாதிகள் தாக்குதல் நடாத்தி வருகின்றனர். இதன் மூலம் முஸ்லிம் சமூகத்தின் பொருளாதார சொத்துக்கள் பெருமளவு அழிக்கப்பட்டுள்ளன.  

சமீபத்தில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை நோக்கும்போது இனவாதிகளின் பிரதான இலக்கு முஸ்லிம்களின் பொருளாதாரமே என்பது தெளிவாகும்.  உண்மையில், இனவாதமும் குருட்டு இனத் தேசியமும் பிற்போக்கானவை. அவை ஒரு நாட்டில் சிறுபான்மையாக வாழும் சமூகங்களை அழிப்பதை இலக்காகக் கொண்டிருப்பினும் இறுதியில் அழிவது அந்த நாடும் அதன் பொருளாதாரமுமே என்பதைப் பிற்போக்குச் சக்திகள் புரிந்து கொள்வதில்லை. திகன கலவரத்தினால் நாட்டுக்கேற்பட்ட பொருளாதார இழப்பை இந்த இடத்தில் நினைவு கூர வேண்டும்.  

இன அழிப்பு ஏகாதிபத்திய சக்திகளால் வரலாற்றின் எல்லாக் காலகட்டங்களிலும் பல்வேறு வடிவங்களில் அரங்கேற்றப்பட்டு வந்துள்ளன. அதற்குத் தூண்டுதல் அளித்த காரணிகளும் பல்வேறுபட்டவையாக இருந்துள்ளன. இப்போது இலங்கைச் சூழலில் இனத் துவேஷம் மற்றும் இனவாத சிந்தனைகள் முஸ்லிம் சிறுபான்மைக்கெதிராக எகிறி எழுவதற்கான காரணம் என்ன என்பதை நிதானமாகவும் ஆழமாகவும் பரிசீலிக்க வேண்டியுள்ளது. அதன் மூலமே மோதல்களைத் தவிர்த்து பகை மறப்பை சாத்தியப்படுத்தலாம். 
சமீபத்தியத் தாக்குதல்களுக்கு ஊடகவியலாளர்களும் அரசியல்வாதிகளும் பாதுகாப்புத் தரப்பினரும் வெவ்வேறுபட்ட காரணங்களை முன்னிறுத்தியதை நாம் அறிவோம். நீதியமைச்சர் தலதா அத்துகோரள, முகநூல் பயங்கரவாதமே இத்தனை கொடுமைகளுக்கும் காரணம் என்று குறிப்பிட்டிருக்கின்றார். புதிதாக நியமனம் பெற்ற சட்ட ஒழுங்கு அமைச்சர் மத்தும பண்டார இது ஒரு அரசியல் சூழ்ச்சி என்கிறார். அமைச்சர் சம்பிக்க ரணவக்க இன்று உலகளாவிய ரீதியில் முஸ்லிம்கள் குறித்து முஸ்லிமல்லாதவர்கள் அச்சம் கொண்டுள்ளனர். அதன் பிரதிபலிப்பாக இது இருக்கலாம் என்கிறார். கொத்து ரொட்டிக்குள் கருத்தடை மாத்திரை ஒளித்து வைக்கப்பட்டதே உடனடிக் காரணம் எனவும் தொடக்கத்தில் சிங்கள ஊடகங்கள் தெரிவித்தன.  

யதார்த்தத்தில் இவை எதுவுமே உண்மையான ஆணிவேர்க் காரணம் அல்ல என்பதை நாம் மனங்கொள்ள வேண்டும். ஏனெனில், அவற்றுள் சில, உடனடிக் காரணங்கள், சில மேலோட்டமானவை, இன்னும் சில அடிப்படைகள் அற்றவை. இலங்கை நிருவாக அபிவிருத்தி நிறுவனத்தில் கடந்த வாரம் இடம்பெற்ற சிங்கள முஸ்லிம் கலந்துரையாடல் நிகழ்ச்சியொன்றில் பங்கு கொண்ட தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய வெளியிட்ட கருத்துக்களை முஸ்லிம்கள் நிதானமாகவும் எச்சரிக்கையுடனும் பார்க்க வேண்டும். அவர் அங்கு பின்வருமாறு கூறியிருந்தார்.  

சமீபத்தில்  அம்பாறை, திகன பகுதிகளில் இடம்பெற்ற இனக்கலவரங்கள் குறித்து சிங்களவர்கள் அதிருப்தியடைந்துள்ளார்கள் என்று நீங்கள் நினைக்க வேண்டாம். முஸ்லிம்களுக்கெதிராக நடைபெற்றவை குறித்து சிங்கள சமூகத்தின் பெரும்பான்மையானவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளார்கள். இதுவே உண்மையாகும் என தேசப்பிரிய கருத்து வெளியிட்டுள்ளார்.  

தேசப்பிரிய சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர், நடுநிலையானவர், சிங்கள சிவில் சமூகத்தின் முக்கிய பிரதிநிதியொருவர் முஸ்லிம்களைத் திருப்திப்படுத்துவதற்கு அவர் இப்படிக் கூறவில்லை என்பது தெளிவு. ஏனெனில், அவரோடு இன்னும் பல முக்கிய அதிகாரிளும் அங்கு இருந்தனர். அவ்வாறாயின் அவரது இக்கூற்றின் அர்த்தம் என்ன? 

 இங்கு ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் கருத்தையும் நினைவுபடுத்திக் கொள்வோம். இவற்றிலிருந்து நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டிய உண்மை ஒன்று உள்ளது. 2012 ஆம் ஆண்டில் பேருவலையில் நடைபெற்ற ஓர் கருத்தரங்கில் அப்போதைய தம்புள்ளை விவகாரம் குறித்து ஆராயப்பட்டது. அதில் கருத்து வெளியிட்ட சில வளவாளர்கள், 

முஸ்லிம்களுக்கெதிரான இனத் துவேஷக் கருத்துக்களைக் கொண்ட சிங்களவர்கள் மிகவும் குறைவானவர்கள். பெரும்பான்மையானவர்கள் நடுநிலையானவர்கள். இனவாதிகளுக்குப் பின்னால் சில அரசியல்வாதிகள் உள்ளனர். அரசியல்வாதிகளைக் கவனமாகக் கையாண்டால் இனமோதல்களைத் தவிர்க்கலாம் என்று கருத்து வெளியிட்டனர். நான் இதற்கு மாற்றமான ஒரு கருத்தை முன்வைத்தேன். இன்று முஸ்லிம் விரோதக் கருத்துள்ளவர்கள் அறுதிச் சிறுபான்மைதான். ஆனால், பொதுபல சேனாவின் பிரசார வேகம் இதே அளவு நீடிக்குமானால் பெரும்பான்மையான சிங்கள பெளத்தர்கள் முஸ்லிம்கள் குறித்து எதிர்மாறான மனோநிலைக்கு வந்துவிடுவார்கள். அது சிங்கள சிவில் சமூகத்தை முஸ்லிம்களுக்கெதிராகத் திருப்ப முயலும் இனவாதிகளுக்குக் கிடைத்த வெற்றியாக இருக்கும் என்றேன்.


இன்று மகிந்த தேசப்பிரியவும் விக்டர் ஐவனும் இதைத்தான் உணர்த்தி இருக்கிறார்கள். இங்கு சிங்கள சிவில் சமூகத்தை முஸ்லிம்களுக்கெதிராகக் கிளர்ந்தெழச் செய்வதே பேராபத்தாகும். திகன கலவரம் உணர்த்தும் மிக அடிப்படையான உண்மைகளுள் ஒன்று பெரும்பான்மையான சிங்களவர்கள் மத்தியில் முஸ்லிம்கள் பற்றிய அச்சமும் ஐயமும் தவறான சில மனப்பதிவுகளும் உருவாகி விட்டன என்பதுதான். இதனால்தான் அப்பிராந்தியத்தில் எல்லாப் பிரதேசங்களையும் உள்ளடக்கும் வகையிலான ஒரு வலைப்பின்னலோடு இனவாதிகளால் செயற்பட முடிந்தது. அதேபோன்று நடுநிலையானவர்களை விட இனவாதிகள் பலமாக உள்ளனர் என்ற செய்தியையும் இக்கலவரங்கள் எமக்குத் தெளிவாக உணர்த்தியுள்ளன.  
இனக்கலவரத்திற்கு உடனடியாக முன்வைக்கப்படும் காரணங்களுக்கப்பால் இவற்றின் ஆணிவேர்களைத் தேடிக் கண்டறிய வேண்டும். செப்டம்பர் 11 தாக்குதலின் பின்னர் உலகளவில் முஸ்லிம்கள் மற்றும் இஸ்லாம் குறித்து சர்வதேச இஸ்லாம் விரோத சக்திகளால் ஒரு புனைவு ஊடகங்களில் பரப்பப்பட்டது. அதனையே இஸ்லாமியப் பீதி என்கிறோம்.

அதாவது, இஸ்லாம் என்பது வன்முறையைத் தூண்டும் சமயம். அது பயங்கரவாதத்தை ஆதரிக்கின்றது போன்ற நச்சுக் கருத்துக்களை ஊடகங்கள் பரப்பி வந்தன. குறிப்பிட்ட நாட்டில் வாழும் சிறுபான்மை முஸ்லிம் சமூகங்களுக்கெதிரான இராணுவக் கெடுபிடிகளை முடுக்கி விடுவதே இதன் பிரதான நோக்கமாகும்.
  
முஸ்லிம் சமூகம் நிதானித்து நீண்ட காலத்தில் செயல்பட வேண்டிய மூலோபாயங்களை கவனத்தில் எடுப்பதாகத் தெரியவில்லை. ஓர் அனர்த்தம் தம்மை நோக்கிக் கட்டவிழ்க்கப்படும் பட்சத்தில் மாத்திரம் உணர்ச்சிவசப்படுவதும் உடனடி எதிர்வினைகளில் இறங்குவதும் என முஸ்லிம் சமூகம் முடங்குகின்றது. முஸ்லிம் தலைமைகளிடம் எந்த மூலோபாயக் குறிக்கோள்களும் இல்லை.

அதனால் இன்னொரு கலவரம் வரும்வரை எந்த முன்னேற்பாடுமில்லாத நிலையிலேயே நாம் இருக்கின்றோம். இந்த வகையில் சிங்கள சிவில் சமூகத்தில் முஸ்லிம்கள் குறித்து நிலவும் அச்சங்கள் என்ன? அதற்கு முஸ்லிம் சமூகத்தில் சாதகமாக உள்ள காரணிகள் என்ன? என்பதையும் நாம் விரிவாகப் பரிசீலிக்க வேண்டியது காலத்தின் கட்டாயத் தேவையாகும்.     

3 கருத்துரைகள்:

நன்றி ரவூப் செயின் . முஸ்லிம்களால் கவனம் செலுத்தப்பட வேண்டிய விடயங்களில் முக்கிய விடயம் ஓன்று கூறப்பட்டுள்ளது. இந்த விடயம் மிகவும் அவசரமாக தீர விவாதிக்கப்பட்டு தீர்க்கப்பட வேண்டும். அதே நேரம் இந்த நாட்டில் உள்ள அதனை பிரஜைக்கும் சமமான உரிமை உண்டு. நீதி சட்டம் என்று உள்ளது. இவை சரியாக இனவேறுபாடு இன்றி நடைமுறைப் படுத்தப்படுகிறதா? என்றால் அது இல்லை. எனவே இதட்காக போராடுவது மிகவும் முக்கிய விடயமாகும். இந்த விடயம் முஸ்லிம்களுக்கு மட்டும் இல்லை. இதை இந்த நாட்டின் பொது விடயமாக கருதி பொது போராட்டமாக முன்னெடுக்க வேண்டும். இதை நமது அரசியல் தலைவர்கள் என்று கூறிக்கொள்பவர்கள் கவனத்தில் எடுப்பார்களா? முஸ்லீம் மக்கள் சிந்திப்பார்களா?

நன்றி ரவூப் செயின் . முஸ்லிம்களால் கவனம் செலுத்தப்பட வேண்டிய விடயங்களில் முக்கிய விடயம் ஓன்று கூறப்பட்டுள்ளது. இந்த விடயம் மிகவும் அவசரமாக தீர விவாதிக்கப்பட்டு தீர்க்கப்பட வேண்டும். அதே நேரம் இந்த நாட்டில் உள்ள அதனை பிரஜைக்கும் சமமான உரிமை உண்டு. நீதி சட்டம் என்று உள்ளது. இவை சரியாக இனவேறுபாடு இன்றி நடைமுறைப் படுத்தப்படுகிறதா? என்றால் அது இல்லை. எனவே இதட்காக போராடுவது மிகவும் முக்கிய விடயமாகும். இந்த விடயம் முஸ்லிம்களுக்கு மட்டும் இல்லை. இதை இந்த நாட்டின் பொது விடயமாக கருதி பொது போராட்டமாக முன்னெடுக்க வேண்டும். இதை நமது அரசியல் தலைவர்கள் என்று கூறிக்கொள்பவர்கள் கவனத்தில் எடுப்பார்களா? முஸ்லீம் மக்கள் சிந்திப்பார்களா?

இன வாதிகள் என்பவர்கள் என்றுமே திருந்த மாட்டார்கள் இங்கு இவர்களை இயக்க அரசியல் தலைமைகளும் வெளிநாட்டு சக்திகளும் என்று பெரிய கூட்டமே இருக்கு முஸ்லிம்கள் எப்போதுமே மந்தை ஆடுகள் போல்தான் ..இலையை காட்டினால் அதன் பின்னாடியே ஓடிவிட்டு திரும்ப பழைய நிலைக்கு வந்து விடுவார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும் ..நமக்கு ஒருத்தருக்கு ஒருத்தர் மார்க்கம் பேசி திரியவே நேரம் சரி பிரச்சினைகளுக்கு எதாவது ஒரு உருப்படியான தீர்வை எவனாவது நமது சமூகத்தில் உரக்க சொல்லும் அரசியல் வாதியோ உலமாவோ இருக்காங்களா ...??? இன்னும் அடிபட வேண்டும் என்றாலும் உரைக்காது ..நமது இளைஞர்கள் எத்தனை பேர் தற்காப்பு கலையை கற்கிறார்கள் ..எந்த நேரமும் சோபன லைப் தான் மொபைல் போன விட்டா வேற கதி இல்ல சமூகத்துக்கு இளைய சமூகம் ஒரு பெரும் கல்தூண் ...இரண்டு சிறிய சஹாபாக்கள் மூலம் கொடியவன் அபூஜஹில் கொள்ள பட்டது வரலாறு மட்டுமல்ல படிப்பினை ..இன்று நம்மட அநேகம் பேருக்கு சீனி வியாதி, பிரஷர் , சின்ன வயதில் போதை பழக்கம் .???பள்ளி வாசல் நமது சிறந்த ஆலோசனை மன்றம் இங்கு சமூக பிரச்சினைகளுக்கு முன் ஊரு பிரச்சினை நிருவாக பிரச்சினை ...அடிதடி தான் நடக்குது ..அப்போ எப்படி தற்பாதுகாப்பு பற்றி முன் நடவடிக்கை எடுப்பது .???இன்று அவர்கள்(இனவாதிகள்) நாம செய்ய வேண்டியதை எல்லாம் செய்து சிறந்த முன் ஏற்பாட்டுடன் களம் இறங்குகிறார்கள் ..வீணாக சண்டைக்கு போக சொல்லவோ யாரையும் சூடேற்றவோ இல்ல இத சொல்லித்தான் ஆக வேண்டும் ஊர் ஊரா போய் பார்த்தா கேட்டா தெரியும் நம்ம நானா மார்கள் எல்லாவற்றையும் இப்போ மறந்திருப்பாங்க ஏன் என்றால் பத்தியது அவர்கள் கடைகள் இல்லையே ..சொத்துகள் இல்லை அவர்கள் பிள்ளைகள் மௌத்தாகவில்லை ..சமூகத்துக்காக ஓடும் பிள்ளையை கூட வீட்டில் எத்தனையோ பெற்றோர் தடுத்து வீட்டில் ஒளித்து வைத்திருப்பர் ...நம்மில் சிலர் அசால்ட்டா சொல்றாங்க ..இதெல்லாம் செய்ற பாவத்தினால் வந்த விதிதான் என்று ..அவனக்கும் இன்னும் உரைக்க வில்ல நாமளும் இந்த தண்டனையை பெரும் நிலை வரலாம் என்று நாமும் ஏதாவது ஒரு தீர்வை பற்றி யோசிக்கணும் என்று ..நம்ம மௌலவி மார்கள் அடிபடுவதை பார்த்து கொஞ்சம் கூட ரோசம் வருதா நமக்கு..இன்னும் நமக்கு காலம் இருக்குமானால் உடனே ஒரு நல்ல தீர்வ சமூகத்துக்கு தாங்க உடனே உங்களுடன் வந்து இணைகிறோம் ..அல்லாஹ் நாம மனங்கள் அனைத்தையும் ஒன்று படுத்துவானாக ...நமது சமூகத்தை பாதுகாப்பானாக ..ஈமானிய்த்தான வழியில் நம் அனைவரையும் மரணிக்க செய்வானாக ..

Post a Comment