Header Ads



முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்துக்காகவா, எம்மை அழிக்க முற்படுகிறார்கள்..? மனம் திறக்கிறார் பௌசி

-எம்.ஏ.எம்.நிலாம்-

முஸ்லிம் சமூகத்தில் மூத்த அரசியல்வாதியாக இன்று அடையாளம் காணப்படக்கூடியவர் அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி. கொழும்பு மாநகர சபையூடாக அன்று அரசியல் பிரவேசம் செய்த அவர் இன்று 80 வயதை தாண்டிய நிலையிலும் தனது அரசியல் பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார். இன, மத, மொழி பேதம் பாராது சேவையாற்றுவதன் மூலம் மூவின மக்களதும் மனங்களை வென்றெடுத்துள்ளார். மாநகர சபையிலிருந்து மாகாணசபையூடாகவும் கொழும்பு மக்களுக்கு அரும்பணியாற்றியவர். சந்திரிகா பண்டாரநாயக்கவின் ஆட்சி யின் மூலம் பாராளுமன்றத்துக்கு வந்தவர். அன்று முதல் இன்று வரை கொழும்பு மாவட்ட மக்கள் பிரதிநிதியாக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தி வருகின்றார்.

இன்று உருவாகியிருக்கும் இனமுறுகல், வன்முறைகள் தொடர்பில் மூத்த முஸ்லிம் அரசியில்வாதி என்ற அடிப்படையில் அவருடன் தொடர்பு கொண்டு கேட்டபோது முக்கிய சில விடயங்கள் குறித்து மனந்திறந்து பேசினார்.

அவர் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு.
கேள்வி - நாட்டில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக வன்முறைக் கலாசாரம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. இவ்வளவு நடந்த நிலையில் சிரேஷ்ட அமைச்சரும், மூத்த அரசியல் தலைவருமான நீங்கள் மௌனம் சாதித்து வருகிறீர்களே. ஏன் இந்த நிலை?
எதைப் பேசச் சொல்கிறீர்கள் நாங்கள் முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்துக்காகவா எம்மை அழிக்க முற்படுகிறார்கள்.
நாட்டுக்காக நாம் எதைச் செய்யவில்லை சுதந்திரத்தை வென்றெடுக்க நாம் பாடுபடவில்லையா? அபிவிருத்தி முன்னேற்றத்தில் பங்களிப்புச் செய்யவில்லையா? பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப ஒத்துழைக்கவில்லையா? இத்தனையும் செய்தும் கூட இனவாதிகள் ஏன் எம்மை எதிரியாக துரோகிகளாகப் பார்க்கின்றார்கள். நாங்கள் இந்த மண்ணில் பிறந்தவர்கள் இது எங்களதும் தாய்நாடாகும். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தேசத்துரோகிகளாக முஸ்லிம்கள் செயற்பட்டது கிடையாது. 30 ஆண்டுகால யுத்தத்தின்போது தேச விசுவாசத்துடன் செயற்பட்டதற்கு எமது சமூகம் வடக்கிலிருந்து விரட்டப்பட்டு உள்நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சொந்த இருப்பிடங்களையும் சொத்துக்களையும் இழந்து உடுத்த உடுப்புடன் வெளியேற்றப்பட்டவர்கள் இதனை இந்த இனவாதச் சக்திகள் சிந்தித்துப் பார்க்கவில்லை.
கேள்வி - திகன சம்பவத்தையடுத்து இடம்பெற்ற வன்முறையின் போது பொலிஸார் உரிய முறையில் செயற்படவில்லை என்ற குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது?
இந்த நாட்டில் தேசிய ஐக்கியத்துக்காகவும் நல்லிணக்கம், சகவாழ்வுக்காகவும் ஒன்றுபட்டுச் செயற்பட்டுக் கொண்டிருக்கும் முஸ்லிம்கள் மீது ஏன் இந்தளவு வெறுப்புக்கொள்ள முற்படுகிறார்கள். சிங்கள மக்கள் மீதோ, பௌத்தத்தின் மீதோ முஸ்லிம்கள் ஒருபோதும் வெறுப்புணர்வுடன் செயற்பட்டது கிடையாது. நாம் என்றும் ஒன்றுபட்டு இணைந்து வாழவே முற்பட்டுள்ளோம். முஸ்லிம்களுக்கு இந்த நாட்டில் ஆயிரம் வருடகால வரலாறு உண்டு என்பதை எவரும் மறுத்துரைக்க முடியாது. இந்த வரலாற்றுப் பாதையில் எப்போதும் நாம் தேசப்பற்றுடனேயே வாழ்ந்து வருகின்றோம்.
சகல இனத்தவர்களுடனும் ஒரே குடும்பம் போன்றுதான் வாழ்ந்து வருகின்றோம். நாட்டைப் பாதுகாப்பதற்காக முஸ்லிம்கள் பலர் தியாகம் செய்துள்ளனர். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாம் நாட்டைக் காட்டிக்கொடுக்க முற்பட்டது கிடையாது. இஸ்லாம் அதனை ஒருபோதும் அனுமதிக்கவுமில்லை. முஸ்லிம் என்ற மத அடையாளத்தோடு இலங்கையர்களாக வாழவே முஸ்லிம்கள் விரும்புகின்றார்கள். நாட்டின் இறைமையை பாதுகாப்பதற்காக உறுதிபூண்டிருக்கும் முஸ்லிம்களுக்கு ஏனிந்த அட்டூழியங்களைச் செய்கின்றீர்கள். தனிநபர் முரண்பாடுகளை இன ரீதியாக ஏன் பார்க்க முற்பட வேண்டும்.
தவறுகள் ஏற்படும்போது அவற்றைத் தீர்க்க பல வழிகளுண்டு அதனைச் செய்யாமல் ஏன் இனவாதத்தைத் தூண்டி நாட்டை பேரழிவுக்குள் இட்டுச் செல்ல முயற்சிக்க வேண்டும்? எனக் கேட்கின்றேன். திகன சம்பவத்தின் போதும் அடுத்து நடந்த தாக்குதல் சம்பவங்கள் பள்ளிவாசல்கள், முஸ்லிம்களின் வீடுகள், கடைகள் சொத்தழிப்புக்களின் போதும் பொலிசார் கைகட்டிப் பார்த்துக் கொண்டிருந்தமை தர்மமாகுமா? என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

கேள்வி - முஸ்லிம்களை பாதுகாப்பது தொடர்பாக அரச உயர் மட்டத்துடன் நீங்கள் கதைக்கவில்லையா?

இது விடயம் தொடர்பாக நான் ஜனாதிபதியுடனும் பிரதமருடனும் நேரடியாக சந்தித்துப் பேசியுள்ளேன். எமது பக்க நியாயத்தை அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். முஸ்லிம்களுக்கு நீதி பெற்றுத் தருவதாக உத்தரவாதம் தந்துள்ளார்கள்.
தெல்தெனிய சம்பவம் நடந்த அன்றே பொலிசார் உறுதியான நடவடிக்கை எடுத்திருந்தால் இந்தளவு பாரிய அழிவைத் தடுத்திருக்க முடியும். இதன் பின்னணியில் பெரும் சதி காணப்படுவதையும் நான் ஜனாதிபதி, பிரதமரிடம் சுட்டிக்காட்டினேன். பாதுகாப்புத் தரப்பு உரிய நடவடிக்கையை உடனடியாக முன்னெடுக்கவில்லை என்பதையும் அவர்கள் ஏற்றுக்கொண்டனர்.
இனவாதச் சக்திகளை இனிமேலும் சுதந்திரமாக நடமாடவிடுவதா என்பது குறித்து அரசு உடனடி கவனம் செலுத்த வேண்டும். மற்றொரு சம்பவம் நிகழும் வரை காலம் கடத்தக்கூடாது. அளுத்கம, தர்ஹா நகர், காலி சம்பவங்கள் தொடர்பில் உடனடி காத்திரமான நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் அம்பாறை, தெல்தெனிய. திகன சம்பவங்கள் இடம்பெற்றிருக்கமாட்டாது. சட்டத்தை உடனடியாகவும், உறுதியாகவும் முன்னெடுக்கத் தவறுவதால் ஏற்படக்கூடிய விளைவுகள் பரிதாபகரமானதாகவே உள்ளது.
கேள்வி - கண்டியில் ஊரடங்கின் போது மோசமான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளனவே?
கண்டி மாவட்டத்தில் ஊரடங்கு அமுலில் இருந்த வேளையிலும் தாக்குதல்கள். தீவைப்புகள் இடம்பெற்றுள்ளன. அதுவும் பாதுகாப்புத் தரப்பினர் முன்னிலையில் நடந்துள்ளன. பாதுகாப்புத் தரப்பின் கையாலாகாத நிலையை என்னவென்று கூறுவது. இத்தாக்குதல்களுக்கு பொலிசார் துணை போயுள்ளனரா என்பது கண்டறியப்பட வேண்டியது மிக முக்கியமானதாகும். இன்று முஸ்லிம்கள் அரசு மீதும், பாதுகாப்புத் தரப்பு மீதும் நம்பிக்கை இழந்துள்ளனர். இந்த நம்பிக்கையை மீளக்கட்டியெழுப்ப முடியுமா? என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
கேள்வி - ஒரு மூத்த தலைவர் என்ற அடிப்படையில் முஸ்லிம் சமூகத்துக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
முஸ்லிம்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்சம், பீதி களையப்பட வேண்டும். முஸ்லிம்களின் பாதுகாப்பு உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும். அந்த மக்களின் பிரதிநிதிகளான நாம் எந்த முகத்துடன் போய் பேச முடியும். அவர்களுக்கு எம்மால் ஆறுதல் கூறக்கூட முடியாத நிலை இன்று ஏற்பட்டுள்ளது. இவ்வளவு நடந்தும் கூட முஸ்லிம்கள் பொறுமையுடன்தான் காணப்படுகின்றனர். கடந்த காலத்தில் இனவாதச் சக்திகள் முஸ்லிம்கள் மீது சுமத்திய குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என்பதுகூட நிரூபிக்கப்பட்டுள்ளது.
நான் முஸ்லிம்களிடம் தயவுடன் கேட்டுக்கொள்வது உங்கள் பொறுமையை நாம் மதிக்கின்றோம். இழப்புகளை ஈடுசெய்ய முடியாது என்பதையும் நாம் அறிவோம். அல்லாஹ்வின் மீது பொறுப்பைக் சாட்டி தொடர்ந்து பொறுமையுடன் இருங்கள். ஜனாதிபதியும், பிரதமரும் அளித்திருக்கும் உறுதிமொழிக்கமைய எமக்கு நியாயம் கிடைக்கும் என்று நம்புவோம். முஸ்லிம்கள் ஐவேளைத் தொழுகையிலும் விசேட துஆப் பிரார்த்தனைகளில் ஈடுபட்டு அமைதி காக்க வேண்டுவோமாக.
எமக்குரிய ஒரே ஆயுதம் இறைவனிடம் பிரார்த்திப்பதுதான். நிச்சயமாக இறைவன் முஸ்லிம் சமூகத்தைக் காப்பாற்றுவான்.
கேள்வி - முஸ்லிம் தலைவர்களுக்கு என்ன சொல்லப் போகிறீர்கள்?
முஸ்லிம் தலைமைகள் இந்த தருணத்தில் பிளவுபட்டு நிற்காது ஒன்றினைய வேண்டும் சமுதாயம் காப்பாற்றப்பட்டால் மட்டுமே அந்த சமுதாயத்திற்கு சேவையாற்ற முடியும். சமுதாயம் அழிந்த பின்னர் எங்கள் அரசியல் செயற்பாடுகளால் என்ன பயன் எற்படப்போகிறது. கடந்த காலத்தில் விட்ட தவறை இனியும் செய்யாமல் முரண்பாட்டு அரசியலை கைவிட்டு இணக்கப்பாட்டு அரசியலுக்கு வாருங்கள். அதுதான் இன்றைய அவசரத் தேவை. அப்போதுதான் சமூகத்தை காப்பாற்றும் எங்கள் பணிக்கு இறைவனும் அருள்புரிவான்.

No comments

Powered by Blogger.