Header Ads



வாக்கெடுப்பில் அதிர்ச்சி காத்திருக்கிறது, என்கிறது மஹிந்த அணி

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் கையொப்பமிடாமல் இருப்பதுகூட மஹிந்த அணியான கூட்டு எதிரணியின் ஒரு வியூகமாகும் என்று அக்கூட்டணியின் தலைவர்கள் தெரிவித்தனர்.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கையளித்த பின்னர் நாடாளுமன்றக் கட்டடத்தொகுதியில் நேற்று ஊடகவியலாளர் மாநாடொன்றை கூட்டு எதிரணி ஏற்பாடு செய்திருந்தது. கூட்டு எதிரணியில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் உட்பட எம்.பிக்கள் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் கையொப்பமிடாதமை குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு அவர்கள் தெரிவித்தனர்.

"ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் இதில் கையொப்பமிட்டிருந்தால் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும். சிலவேளை நாடாளுமன்ற உறுப்புரிமைகூட பறிக்கப்பட்டிருக்கும். அவ்வாறு நடைபெற்றால் அது எமது முயற்சியைப் பலவீனப்படுத்தும் வகையில் அமையும்.

எனவேதான், வாக்கெடுப்பின்போது ஆதரவளிப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் தயாராக இருக்கின்றனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களும் இதே நிலைப்பாட்டில் இருக்கின்றனர்.

அத்துடன், நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்று கையளிக்கப்பட்டால் குறிப்பிட்டதொரு கால எல்லைக்குள் அது நாடாளுமன்ற ஒழுங்குப்பத்திரத்தில் இடம்பெறவேண்டும் எனக் கட்டாயப்படுத்தப்படவில்லை. இவை உட்பட மேலும் சில காரணிகளைக் கருத்தில்கொண்டுதான் சிலரிடம் கையொப்பம் பெறப்படவில்லை.

அதேவேளை, மஹிந்த ராஜபக்ஷ என்பவர் தேசியத் தலைவர். அவருக்கென தனிச்செல்வாக்கு இருக்கின்றது. அவரின் கையொப்பத்துக்கென தனி மதிப்பு இருக்கின்றது.

முக்கிய கட்டங்களில் மாத்திரமே அவர் அதைப் பயன்படுத்துவார்'' என்றும் கூட்டு எதிரணித் தலைவர்கள் தெரிவித்தனர்.

No comments

Powered by Blogger.