March 15, 2018

"அல்லாஹ்வின் உதவியால், அந்தத் தீர்மானத்துக்கு வந்து விட்டேன்"

-Affan Abdul Haleem-

இன்று முஸ்லிம் சமூகத்துக்கு வெறுத்துப் போயிருக்கின்ற ஒரு சொல் இருக்குமென்றால் அது நிச்சயம் சகவாழ்வு என்ற சொல்லாகத்தான் இருக்கும். சகவாழ்வுக்காக எடுக்கப்பட்ட முயற்சிகளும், ஒதுக்கப்பட்ட நேரங்களும், செலவழிக்கப்பட்ட செல்வங்களும் அபரிமிதமானதாகும்.

ஆனாலும் சகவாழ்வுப் பிரச்சாரமும் சகவாழ்வு முயற்சிகளும் ஏன் உரிய வெற்றியைத் தரவில்லை என்று என்றாவது யோசித்திருக்கின்றீர்களா?! எனது தனிப்பட்டதோர் அனுபவத்தை வைத்து இந்தக் கேள்விக்கு விடை காண முயற்சிக்கிறேன்.

பட்டப்பின் டிப்ளோமாவின் பாடங்கள் யாவும் நிறைவு பெறும் கட்டம், பரீட்சைக்கு முன்பதாக ஒரு பிரியாவிடை வைபவம் ஒழுங்கு செய்யப்படுகின்றது. நாட்டின் பிரபலமான நட்சத்திர ஹோட்டல் ஒன்றுக்குப் பக்கத்தில் உள்ள ஒரு இடத்தில், தலைக்கு ஒரு பெருத்த செலவுடன் அந்த வைபவம் ஒழுங்கு செய்யப்படுகின்றது. 

ஒரு வருட காலத்தை ஒன்றாகக் கழித்தவர்கள் என்ற வகையில் எல்லோரும் நன்றாகப் பழகுகின்ற ஒரு சூழலில் அதில் கலந்துகொள்வது மானசீகமாக அனைவருக்கும் கட்டாயமாகி விடுவது இயல்பே. சாதாரணமாக ஒரு வைபவத்தில் கலந்துகொண்டு திரும்புவதொன்றும் பிழையல்லவே! எனவே கலந்துகொள்வது என்று தீர்மானித்தேன்.

ஆனாலும் அதன் பின்னர் சில நாட்கள் செல்லும் போது அந்த வைபவம் எப்படி நடக்கப் போகின்றது என்பது பற்றிய வட்ஸப் குழுமக் கலந்துரையாடல்கள், வகுப்பறைக் கலந்துரையாடல்கள் யாவும் அந்த நிகழ்வில் மதுபானம் பரிமாறப்பட இருப்பதை உறுதி செய்தன. எந்தளவுக்கென்றால் நிகழ்வுக்கு அழைக்கப்பட்டிருப்பவர்கள் வருகை தரும் போது அனைவரையும் வரவேற்கும் வகையில் ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும் பானம் (Welcome Drink) கூட மதுதான் என்பது தெரிய வந்தது. 

மது பரிமாறப்படும் வைபவத்தில் பங்கேற்பதா? என்ற கேள்வி இயல்பாய் உள்ளத்தில் எழ, இன்னொரு பக்கத்தில் பங்கேற்காவிட்டால் கடந்த ஒருவருட காலமாகக் கட்டியெழுப்பிய சகவாழ்வுக்கு என்னாவது? என்ற கேள்வியும் இயல்பாய் எழுந்தது.

மது பரிமாறப்படும் வைபவத்தில் கலந்துகொள்வது எனது அடிப்படைகளையும் பெறுமானங்களையும் மீறுவதாகும். கலந்துகொள்வதைத் தவிர்க்கின்ற போது என்னைப் பற்றிய தப்பெண்ணம் அவர்களுக்கு மத்தியில் ஏற்படுவதற்கான வாய்ப்பும் அதிகம் இருக்கின்றது.

எதைத் தேர்ந்தெடுப்பது என்று பெரிதாக மனப்போராட்டம் எல்லாம் நடாத்த வேண்டிய தேவை இருக்கவில்லை. இதில் கலந்துகொள்வதில்லை என்ற உறுதியான தீர்மானத்துக்கு வருவது கஷ்டமான காரியமாக இருக்கவில்லை. அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹ்வின் உதவியால் அந்தத் தீர்மானத்துக்கு வந்து விட்டேன்.
ஆனால் கலந்துகொள்ளாமல் இருப்பதால் என்னைப் பற்றி ஏற்படலாம் என்று கருதிய தப்பபிப்பிராயத்தை ஏற்படாமல் செய்வதற்கு என்ன செய்யலாம் என்று சிந்திப்பதற்கு தவறவில்லை. ஏற்பாட்டுக் குழு அங்கத்தவர்களில் முக்கியமாக இருந்தவர்களை தனித்தனியாக சந்தித்துப் பேசினேன்.

'உங்கள் எல்லோரோடும் ஒரு வைபவத்தில் ஒன்றாகக் கலந்துகொள்வதில் உண்மையிலேயே நான் மிகவும் ஆர்வமாக இருக்கிறேன். ஆனால் அதில் ஒரு சின்ன சிக்கல் இருக்கின்றது...' என்று ஆரம்பித்தேன்.

'ஏன், பங்குபற்ற முடியாத அளவுக்கு உனக்கு என்ன மச்சான் பிரச்சினை?'

காசுப் பிரச்சினை என்று சொல்லியிருந்தால் 'அதை அலட்டிக் கொள்ளாதே' நாங்கள் அதைப் பார்த்துக் கொள்கிறோம், நீ கட்டாயம் வா!' என்று நிச்சயமாக சொல்லியிருப்பார்கள். அந்தளவுக்கு உண்மையாகப் பழகுகின்றவர்கள். ஆனால் என்னுடைய பிரச்சினைதான் அதுவல்லவே!

'இல்லை.... நான் என்னுடைய வாழ்க்கையில் மதுபானம் குடிப்பது எப்படிப் போனாலும் அதன் வாசத்தைக் கூட முகர்ந்து பார்த்ததில்லை. ஒரு சிகரட்டைக் கூட தொட்டதில்லை. ஏனென்றால் நான் பின்பற்றும் மார்க்கம் அவற்றை எனக்குத் முழுமையாகத் தடை செய்திருக்கின்றது....'

'ஆ... அபி தன்னவா! அற மே... ஹராம் கியன்னே ஏகட நேத?'

ஒவ் மச்சான், ஹராம் என்பது ஒரு கன்செப்ட். மதுபானம் போன்றவையும் அப்படி ஹராமாக்கப்பட்டவைதான். அது மட்டுமல்ல அந்த மது பரிமாறப்படும் நிகழ்வுகளில் பங்கேற்பதையும் இஸ்லாம் தடை செய்திருக்கின்றது. ஏனென்றால் தடை செய்யப்பட்ட ஒன்றை ஒரு Funனுக்காவது ட்ரை பண்ணிப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் வந்து விடக் கூடாதல்லவா! அதற்காகத்தான்'

'அது சரி....  ஆனால் நிகழ்வு இரவு ஏழு மணிக்கு ஆரம்பிக்கின்றது. நீ முடியுமானால் வந்து ஒரு அரை மணித்தியாலம் சரி ஒரு மணித்தியாலம் சரி இருந்து விட்டுப் போகலாமே!'

'நானும் அப்படி யோசித்தேன்தான், ஆனால் நிகழ்ச்சியின் Welcome Drinkகே மதுபானமாக அல்லவா இருக்கின்றது, இனி எப்படி நான் கலந்துகொள்வது 😊?'

'அனே மச்சாங், மொன ஹரி பலல கரண்ண பெரித? மேக Farewell பார்டி எக நே?!'
'நான் ஒரு விஷயத்தை சொல்கிறேன்...😊 உங்களுக்கு மதுபானம் அருந்துவதற்கும், டான்ஸ் ஆடுவதற்கும் (இசைக் கச்சேரி ஒன்றும் அதில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது) உள்ள உரிமையை நான் மதிக்கிறேன்😌. நீங்கள் அதில் ஈடுபடுவதை பிழையென்றோ, அல்லது உங்களுக்கு அது தடுக்கப்பட்டதென்றோ நான் ஒரு போதும் சொல்ல மாட்டேன், அப்படி சொல்லவும் முடியாது. ஆனால் எப்படி குடிப்பதற்கும், இசைக் கச்சேரி நடாத்துவதற்கும் உங்களுக்குள்ள உரிமையை நான் மதிக்கிறேனோ, அவ்வாறே குடிக்காமல் இருப்பதற்கும் மதுவும் இசையும் உள்ள நிகழ்வில் பங்கேற்காமல் இருப்பதற்கும் எனக்குள்ள உரிமையை நீங்கள் மதிக்க வேண்டும், ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன். அதிலும் நான் எனது சொந்த விருப்பத்தின் பேரிலல்ல இதனை முடியுமா முடியாதா என்று தீர்மானிப்பது, நான் பின்பற்றும் மார்க்கம் எனக்கான விதிமுறைகளையும் பெறுமானங்களையும் வரையறைகளையும் வகுத்துத் தந்திருக்கின்றது. அதனை என்னால் மீற முடியாது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன்'

'ஹரி ஹரி பங்.... அபிட தேரெனவா 😊'

'எனக்குத் தடை செய்யப்பட்ட ஒன்றை நீங்கள் பாவிக்கிறீர்கள் என்று நான் உங்களைக் கோபித்துக் கொள்ளவோ, அல்லது பிழை காணவோ இல்லை. அதே போல உங்களுக்கு விருப்பமான ஒன்றை நான் செய்யவில்லை என்பதால் என்னோடு கோபித்துக் கொள்ளவோ அல்லது பிழை காணவோ மாட்டீர்கள் என்ற நம்பிக்கை எனக்கிருக்கின்றது'

'ஏவா ஹரி, ஏகெ ப்ரஷ்ன மொகுத் நே, ஹெபேய் ஆவனங் சதுடுய்.... ஹெபேய் ஒயாட கொஹொமத் ரிலிஜஸ் ப்ரின்ஸிப்ல்ஸ் டிக வயலேட் கரண்ண பே நே... ப்ரஷனயக் நே மசாங்... அபே யாலுகமட மொகுத் ஹானியக் வென்னே 😊❤🤝'

நான் போகவில்லை. அவர்கள் நிகழ்வை நடாத்தினார்கள், அவர்களனைவரும் கலந்துகொண்டார்கள். என்னோடு யாரும் எந்தப் பிரச்சினையும் பட்டுக்கொள்ளவில்லை. அவர்களுடைய மார்க்கம் அவர்களுக்கு என்னுடைய மார்க்கம் எனக்கு என்பதில் தெளிவான வரையறைகளைப் போட்டு பிரச்சினைகளின்றி கலந்துரையாடலுக்கூடாகவும், தெளிவான விளக்கங்களுக்கூடாகவும் அனைத்தையும் சுமுகமாக முடித்துக் கொண்டோம். ஒரே வகுப்பில் ஒரு வருடகாலம் படித்தவர்கள் என்ற வகையில் எமக்கிடையில் நல்லுறவும் நல்லிணக்கமும் தொடர்வதையும் உறுதிப்படுத்திக் கொண்டோம்.

எனக்குத் தெரிந்த சகவாழ்வு இதுதான்.
அது...

அடிப்படைகளை விட்டுக்கொடுக்காத சகவாழ்வு! தெளிவான விளக்கங்களோடும், வரையறைகளோடும் கூடிய சகவாழ்வு! அடையாளங்களுக்காக சண்டை போடாத சகவாழ்வு! என்னை நானாகவும் அவர்களை அவர்களாகவும் பரஸ்பரம் ஏற்றுக்கொண்ட சகவாழ்வு! எனக்காக அவர்களும், அவர்களுக்காக நானும் தத்தமது பெறுமானங்களில், விழுமியங்களில் சமரசம் செய்துகொள்ளாத சகவாழ்வு!

இந்த சகவாழ்வு மலர்ந்திருந்தால் அது நாட்டுக்கும் சமூகத்துக்கும் நல்லதாய் இருந்திருக்கும். இந்த சகவாழ்வு மலர்ந்திருந்தால் நாம் அந்த சொல்லை வெறுக்க வேண்டி வந்திருக்காது.  ஆனால் நாம் இந்நாட்டில் இதுவரை கைக்கொண்ட சகவாழ்வு என்ன தெரியுமா?! 

தண்ணீரில் மூழ்கும் போது கிடைத்ததைப் பற்றிப் பிடித்துக் கொண்டு தப்ப முயற்சித்த சகவாழ்வு! எம்மீது கற்கள் எறியப்பட்ட போது எதையாவது எடுத்து அது எம்மீது பட்டுவிடாமல் தடுக்க முயற்சித்த சகவாழ்வு! அடிப்படைகளில் சமரசம் செய்து அடையாளங்களுக்காய் மல்லுக்கட்டிய சகவாழ்வு!

அல்லாஹ்வின் மீதுள்ள அச்சத்தாலல்ல, மனிதர்கள் மீதுள்ள அச்சத்தால் வலிந்து எடுத்துக்கொண்ட சகவாழ்வு! இந்த சகவாழ்வுக்கு உள்ளங்களை இணைக்கும் சக்தி கிடையாது. பாலங்களைக் கட்டும் சக்தி கிடையாது. கறுப்புக் கண்ணாடிகளைக் களையும் சக்தி கிடையாது. மாறாக இந்த வகை சகவாழ்வு பாலங்களுக்குப் பதிலாக தடுப்புச் சுவர்களையும், இணக்கத்துக்குப் பதிலாக அச்சத்தையும் ஏற்படுத்தக் கூடியதாகும்.

உங்கள் அடையாளங்களால் (வேறுபட்டுத்) தனித்துத் தெரியாதீர்கள்!  உங்கள் அடிப்படைகளால் (தெளிவுபட்டுத்) தனித்துவமாய் இருங்கள்!  அதற்குப் பெயர் சகவாழ்வு. அந்த சகவாழ்வுக்குப் பெயர் இஸ்லாம்.

1 கருத்துரைகள்:

Unmaiyai udaythu sonna oru article ! ithai eppadi marupadhu !

Post a Comment