Header Ads



ஜெனீவாவில் இலங்கை, முஸ்லிம்கள் நடத்திய ஆர்பாட்டம் (படங்கள்)

(ஜெனீவாவிலிருந்து ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்)

இலங்கையில் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்படும் இன வன்முறைக்கு எதிராகவும், அந்த வன்முறையுடன் தொடர்புடையவர்களை கைதுசெய்து உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தக் கோரியும் ஐரோப்பிய வாழ் இலங்கை முஸ்லிம்கள் ஏற்பாடு செய்திருந்த மாபெரும் போராட்டமொன்று நேற்று திங்கட்கிழமை, 19 ஆம் திகதி ஜெனீவா நகரில் நடைபெற்றது.

ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு முன் நடைபெற்ற இப்போராட்டத்திற்கான அழைப்பை, சுவிஸர்லாந்தில் இருந்து இயங்கும், ஐரோப்பிய இஸ்லாமிய தகவல் நிலையம் (EIMF) விடுத்திருந்தது.

பிற்பகல் 1.30 மணியளவில் ஆரம்பமான இப்போராட்டதில் இனவாதத்தை நிறுத்து, பள்ளிவாசல்களை உடைக்காதே, முஸ்லிம்களின் பொருளாதாரத்தை சூறையாடாதே, சட்டத்தை சரிசமமாக அமுல்படுத்து, குற்றவாளிகளை கைதுசெய் உள்ளிட்ட பல்வேறு சுலோகங்களையும், பதாதைகளையும் தாங்கியபடி மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.


மேலும் ஜெனீவா ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு முன் கூடிய இந்த மக்கள், இனவாதத்திற்கு எதிராகவும் உரத்த குரலில் கோஷமிட்டனர்.

சுவிஸ், பிரிட்டன், ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகளிலிருந்து வருகைதந்த இலங்கைவாழ் முஸ்லிம்கள் பெருமளவில் பங்கேற்ற இப்போராட்டதின் இறுதியில், 3 முக்கிய மகஜர்களும் கையளிக்கப்பட்டன.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் சாயிட் ஹுசைன், ஐ.நா. மனித உரிமைகள் சிறுபான்மை விவகார சிறப்பு அறிக்கையாளர் டொக்டர் பெர்னான்ட் டீ. வரன்னஸ், இஸ்லாமிய கூட்டுறவு அமைப்பின் ஜெனீவா பிரதிநிதி திருமதி ஜெஸீமா பக்லி ஆகியோரிடம் இந்த மகஜர்கள் கையளிக்கப்பட்டன.

இந்த மகஜரில் இலங்கையில் முஸ்லிம் சமூகத்திற்கெதிரான இனவாத அடக்குமுறைகளை நிறுத்த, சர்வதேச சமூகம் உரிய அழுத்தம் பிரயோகிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.







1 comment:

  1. வேறுபாடுகள் மனிதர்களிடம் காணப்படுவது தவிர்க்க முடியாதது . ஆனால் வேறுபாடுகள் முரண்பாடுகளுக்கானதல்ல. வேறுபாடுகள் முரண்பாட்டை உருவாக்கும் (வாய்த் தர்க்கம்,சண்டை) இயல்பு கொண்டவைதான். சராசரி ஆத்மாக்கள் வேறுபாட்டில் முரண்பாட்டையே காணும் அல்லது உருவாக்கும். பரந்த உள்ளமுடைய மஹாத்மாக்களால்தான் வேறுபாடுகளை முரண்பாடாக காணமல் கடந்து செல்ல முடியும். மார்கத்தை,வாழ்க்கையை, அடுத்த இனத்தை பார்க்கும் பார்வைகள் ,அணுகும் அணுகுமுறைகள் ஒருவருக்கொருவர் வேறுபடலாம், ஆனால் அவ்வேறுபாடுகள் இயல்பானவை எனவும் அவை முரண்பாடுகளுக்கானவை அல்ல எனவும் பார்க்கும் ஓர் பரந்த பார்வை அவசியமாகும். இந்தச் சிந்தனை ஆழமாகவும் அகலமாகவும் நாட்டில் கட்டியெழுப்பப் படல் அவசியமாகும்.(ஏ.எம்.ஆரிப், நிந்தவூர்)

    ReplyDelete

Powered by Blogger.