Header Ads



நாட்டில் அரசியல் குழப்பங்கள், ஏற்படக்கூடிய வாய்ப்பு

நாட்டின் அரசியல் குழப்பங்கள் 2020ம் ஆண்டின் பின்னரும் தொடருமா? என்ற கேள்வி தற்போது மக்களின் மனங்களில் எழுந்துள்ளது.

2020 ஆம் ஆண்டு ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தலும் நாடாளுமன்றத் தேர்தலும் இடம் பெறவுள்ளன. இந்தத் தேர்தல்களில் மிகக் கடுமையான போட்டிகள் நிலவுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

மூன்று பிரிவுகளாகப் பிளவுபட்டுப் போய்க் காணப்படும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி மகிந்தவின் கட்சியுடன் இணைந்து செயற்படுமா? அல்லது இப்போது உள்ளதைப் போன்று தனிவழியில் செல்லுமா? என்பது குறித்து இப்போதைக்கு எதுவும் கூற முடியாதுள்ளது.

ஆனால் ஐக்கிய தேசியக் கட்சி தனிவழியில் செல்லுமென்பது உறுதியாகிவிட்டது.

உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் பெரும் உற்சாகத்தைக் கொடுத்துள்ளதால் மகிந்தவின் கட்சி தனித்துத் களத்தில் இறங்கக் கூடிய வாய்ப்புக்களும் அதிகரித்துக் காணப்படுகின்றன.

ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தலில் மகிந்த தரப்பின் சார்பில் கோத்தபாய களத்தில் இறங்குவாரெனவும் கூறப்படுகின்றது.

கோத்தபாய ஜனாதிபதி பதவியை வகிப்பாராயின், பலர் இன்னல்களை எதிர்கொள்ள வேண்டியதொரு நிலை உருவாகி விடும்.

குறிப்பாக, அமைச்சர் சரத் பொன்சேகா நிச்சயமாக நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும்.

தற்போதைய அரசினால் அவருக்கு வழங்கப்பட்ட பீல்ட் மார்சல் பதவி பறிக்கப்படுவதுடன், அவரது ஓய்வூதியம் மற்றும் இராணுவப் பதக்கங்களும் பறித்தெடுக்கப்படுமென ஊகிக்க வேண்டியுள்ளது.

அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் புதுப்பிக்கப்பட்டு அவருக்கு தண்டனை வழங்கப்படுவதற்கான சாத்தியங்களும் உள்ளன.

இறுதிப் போரில் கோத்தபாயாவின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் காணப்பட்டதால், போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் ஆதரவு இவருக்குக் கிடைக்காதென நம்பலாம். இவரது சகோதரரான மகிந்தவுக்கும் இதே நிலைதான் நேர்ந்தது.

இதேவேளை முஸ்லிம் மக்களின் ஆதரவையும் இவர் இழக்கக் கூடியதற்கான வாய்ப்புக்களும் காணப்படுகின்றன. இதனால் கோத்தபாய தேர்தலில் வெற்றி பெறுவதற்குச் சில தடைகள் இருக்கத்தான் போகின்றன.

கடந்த தேர்தலைப் போன்று மைத்திரிபால சிறிசேனவுக்கு ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவு வழங்குமென எதிர்பார்க்க முடியாது. ஏனென்றால் இம்முறை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்கவும் போட்டியிடுவதற்கான சாத்தியமும் அதிகரித்துக் காணப்படுகின்றது.

மேலும் கடந்த முறை போன்று தமிழர்களும், முஸ்லிம்களும் தேர்தலில் முடிவைத் தீர்மானிக்கப் போகும் சக்திகளாக விளங்கப் போகின்றனர். இவர்களைப் பொறுத்தவரையில் பெரும்பான்மையினத் தலைவர்கள் மீது நம்பிக்கை உள்ளவர்களாகத் தெரியவில்லை.

போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு இதுவரை நீதி கிடைக்காமையும், முஸ்லிம் மக்கள் மீதான இனவாதத் தாக்குதல்களும் இதற்கான காரணங்களாகக் காணப்படுகின்றன. இதனால் இந்த இரண்டு இனங்களையும் சேர்ந்த மக்கள் தேர்தலில் ஆர்வத்துடன் வாக்களிப்பார்களா? என்பதும் சந்தேகமாகவே உள்ளது.

2020 ஆம் ஆண்டிலும், குழப்பமானதொரு அரசியல் சூழ்நிலையே நாட்டில் நிலவுமென எதிர்பார்க்கலாம்.

கடந்த முறை இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஐக்கிய தேசியக் கட்சியும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து ஆட்சியமைத்ததால் பலமானதொரு அரசை நிறுவ முடிந்தது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும், சில முஸ்லிம் கட்சிகள், மலையக மக்களைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற சில கட்சிகளின் ஆதரவும் அரசுக்கு இருந்ததால் அரசின் பலம் மேலும் உயர்வடைந்து காணப்பட்டது.

ஆனால் அரசின் மீதான தமிழ் மக்களது அதிருப்தி அதிகரித்து வருவதால், இந்தக் கட்சிகளின் ஆதரவு தொடருமென எதிர்பார்க்க முடியாது.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் மூன்றாகப் பிளவுபட்டுக் காணப்படுவதால், கூட்டு அரசு தனது பலத்தை இழக்கக் கூடிய ஆபத்தையும் மறுதலிக்க முடியாது.

அடுத்து இடம்பெறப் போகும் நாடாளுமன்றத் தேர்தலில், எந்தக் கட்சியும் அறுதிப் பெரும்பான்மையைப் பெறுவதற்கான சாத்தியம் மிகக் குறைவானதாகவே காணப்படுகின்றது.

இதனால் ஆட்சியமைப்பதில் குழப்பங்கள் நிலவப் போகின்றன. கட்சித் தாவல்களும் தாராளமாக இடம்பெறப் போகின்றன.

அதுமட்டுமல்லாது அரசைக் கவிழ்த்துவிடுவதற்கான சதி வேலைகளும் இடம் பெறுமென எதிர்பார்க்கலாம்.

ஆகவே 2020 ஆம் ஆண்டுக்குப் பின்னரும் தற்போது உள்ளது போன்று அரசியல் குழப்பங்கள் தொடருமென எதிர்பார்க்க முடியும்.

No comments

Powered by Blogger.