March 19, 2018

கோட்டை பள்ளிவாசலுக்கு, இப்படியொரு நிலையா..?

(ஆதில் அலி சப்ரி)

கோட்டை பள்ளிவாசலுக்கு சொந்தமான 40க்கு மேற்பட்ட கடைகள் 4000 ரூபாய் என்ற மிகக் குறைந்த தொகைக்கு வாடகைக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை பாதுகாக்க அரசியல் அழுத்தங்கள் இருப்பதாகவும் கோட்டை பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைக்கு விசேட உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டுள்ள முஹம்மத் முயீனுதீன் தெரிவித்தார்
நவமணிக்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவரது முழுமையான பேட்டியை இங்கே தருகின்றோம்

கேள்வி: உங்களைப் பற்றிய சிறிய அறிமுகம்
பதில்: நான் பள்வானையைச் சேர்ந்தவன். ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே மாகாண சபையில் ஐக்கிய தேசிய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி முன்னாள் அங்கத்தவராக செயற்பட்டேன். அதேநேரம் அகில இலங்கை சமாதான நீதவானாகவும் நீண்ட காலம் பணியாற்றி வருகின்றேன். நான் உயர்தர படிப்பை மள்வானை அல் முபாரக் மகாவித்தியாலயத்தில் முடித்துவிட்டு மருதானை தொழிநுட்பக் கல்லூரியில் வியாபார முகாமைத்துவ கற்கையை தொடர்ந்தபோது கோட்டைப் பள்ளிவாசலுக்கு அடுத்தபடியாக உள்ள எனது மாமாவின் வியாபார நிலையத்தில் பகுதி நேரங்களில் தொழில்புரிந்து வந்தேன். அது நகை வியாபார நிலையமாக இருந்ததால் வெளிநாட்டவர்களே அதிகமாக வருகைதந்தனர். அது எனக்கு மிகுந்த அனுபவத்தை வழங்கியது.  

கேள்வி: கோட்டை பள்ளிவாசலின் ஆரம்பம், வரலாறு குறித்து தெளிவுபடுத்த முடியுமா?
பதில்: உண்மையில், இது
 சிறந்ததொரு கேள்வி. இந்த பள்ளிவாசலின் ஆரம்பம் குறித்து பேசும் போது, 1865ஆம் ஆண்டுகளில் என்னுடைய மாமியின் பாட்டியின் பாட்டனார் காஸிம் மரிக்கார் அப்பாதையினூடாக அவரது குதிரை வண்டியில் வரும்போது சிறியதோர் இடம் ஏல விற்பனைக்கு விடப்பட்டிருந்ததைக் காண்கின்றார். ஏல விற்பனையாளருக்கும் பாட்டனாருக்கும் ஏற்கனவே அறிமுகம் இருந்துள்ளது. பாட்டனார் அவ்விடத்தைக் கடக்கும்போது, சீ.எல்.காஸிம் மரிக்கார்! நீங்கள் ஏன் இந்த இடத்தை உங்களது பள்ளிவாசலுக்கு வாங்கிக்கொள்ளக்கூடாது என்று கேட்டுள்ளார். இதுவோர் நல்ல யோசனையென்று தோன்றி, மர்ஹூம் சீ.எல்.காஸிம் மரிக்கார் இடத்தை கொள்வனவு செய்துள்ளார். எனக்குக் கிடைத்த தகவல்களின்படி அப்போது இலங்கையில் பாவனையில் இருந்த பவுண்களின் அடிப்படையில் 70 பவுண்களுக்கு கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.    

கேள்வி: உங்களுக்கும் கோட்டைப் பள்ளிவாசலுக்குமான உறவை தெளிவுபடுத்த முடியுமா
பதில்: நான் இவ்வாறு வியாபார நிலையத்தில் இருக்கும் போது பள்ளிவாசலின் நிர்வாக விடயங்களை என்னுடைய மாமாவும் குடும்பத்தினருமே கவனித்து வந்தார். பள்ளிவாசல் பராமரிப்பு, பணியாளர்களுக்கான ஊதியம் போன்றன முன்னெடுக்கப்பட்டன
என்னுடைய மாமியின் தந்தை இந்த பள்ளிவாசலுக்கு அண்மித்து இருந்த வியாபாரஸ்தலத்தை விலைக்கு வாங்கி பள்ளிவாசலுக்கு வழங்கவேண்டும் என்ற நோக்கத்தில் இருந்தார். அவரது ஜீவிய காலத்தில் அது நிறைவேறவில்லை. 1978ஆம் ஆண்டு என்னுடைய மனைவியின் தந்தை காலஞ்சென்ற உவைஸ் ஹாஜியாரும் குடும்பத்தினரும் இவ்விடயத்தில் முன்னின்று செயற்பட்டார். இதனடிப்படையில் காலஞ்சென்ற மசூத் ஆலிம் தலைமையில் குறித்த வியாபார நிலையத்தின் பாதியை உடைத்து பள்ளிவாசலை விஸ்தரிப்பதற்கான வேலைகளை மேற்கொண்டோம். பள்ளிவாசலுக்கு மேலதிக வருமானங்கள் இருக்கவில்லை. பள்ளிவாசலில் பணியாற்றிய அக்குரணையை சேர்ந்த ஹபீப் லெப்பை என்ற ஆலிம் பள்ளிவாசலுக்கு வருகை தருபவர்களிடம் பள்ளிவாசலின் தேவைகளை அன்பாக எடுத்துரைத்து பூர்த்திசெய்வதில் முனைப்புடன் செயற்பட்டதும் குறிப்பிடத்தக்கது. பள்ளிவாசலின் பெரிய தேவைகள் ஏற்படும் போது எனது மாமா உவைஸ் ஹாஜியார் அங்கிருந்த வியாபாரிகளையும் இணைத்துக்கொண்டு அவை பூர்த்திசெய்யப்பட்டன

கேள்வி: கோட்டை பள்ளிவாசலின் ஆரம்ப கால நிர்மாணப் பணிகள்?              
பதில்: பள்ளிவாசல் விஸ்தரிக்கப்பட்டதும் ஓர் நிர்வாகக் குழு அமைக்கப்பட்டது. காலஞ்சென்ற மசூத் ஆலிம் என்னை நிதி விவகாரங்களுக்கு பொறுப்பாக வைத்தார். நானும், காலஞ்சென்ற உவைஸ் மற்றும் ஷாஹுல் ஹமீத் ஹாஜியாரும் இப்றாஹிம் கப்பார் என்ற மேமன் சகோதரரும் குழுவில் முக்கிய பங்கெடுத்தோம். பள்ளிவாசல்  நிர்மாணத்திற்கு சீமேந்துகளை வழங்க ஒரு தனவந்தர் முன்வந்தார். இரும்புப் பொருட்களை வழங்க இன்னொருவரும் முன்வந்தார். பள்ளிவாசலை அடுக்குமாடியாக கட்டும் யோசனை முன்வைக்கப்பட்டது. அதனடிப்படையில் தனவந்தர்களின் உதவியுடன் மூன்று மாடிகளாக கட்டப்பட்டது

கேள்வி: இந்த பள்ளிவாசல் இயக்கம் சாராதிருக்க வேண்டுமென் ஸ்தாபகர்கள் தெரிவித்திருந்தனர். அது இன்றுவரை தொடர்கின்றதா?
பதில்: பள்ளிவாசல் கட்டப்பட்டு, அது ஒரு ஜும்ஆ பள்ளிவாசலாக மாறியதன் பிற்பாடு பள்ளிவாசலுக்கு அனுமதி பெறப்படவில்லையென்ற குற்றச்சாட்டில் நகர அபிவிருத்தி அதிகாரரசபை வழக்கு தொடர்ந்தார்கள். வழக்கில் நிர்வாகத்தினருக்கு தலா 1000 தண்டப்பணம் விதிக்கப்பட்டு பள்ளிவாசலுக்கு அனுமதி கிடைத்தது.   பள்ளிவாசலை பதிவுசெய்துகொள்வதில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பங்களிப்பு நினைவுகூறத்தக்கது
பள்ளிவாசலை இறுதிவரை இயக்கம் சாராது அனைத்து இயக்கங்களினதும் மார்க்க பிரசார செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்ல மசூத் ஆலிம் வழிகாட்டியிருந்தார். இந்த பள்ளிவாசல் ஏனையோருக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்றும் இயக்க வெறிகொண்டு பள்ளிவாசல்கள் நிர்வகிக்கப்படக் கூடாதென்றும் கூறியிருந்தார். நாம் அவ்வழிகாட்டல்களை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல முயற்சிப்போம். ஜும்ஆக்கள் இலக்கண தமிழில் நிகழ்த்தப்படும் போது கொழும்பு மக்களுக்கு விளங்கிக் கொள்வதில் 
பிரச்சினைகள் உள்ளன. பேச்சுத் தமிழிலும் 
சிங்கள ஆங்கில ஜும்ஆக்களும் மிகுந்த வரவேற்பைப் பெறுகின்றன.  

கேள்வி: பள்ளிவாசலின் நிரந்தர வருமானத்தைப் பெற எவ்வாறான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன?
பதில்: பள்ளிவாசலுக்கு தொழுகைக்காக வருபவர்கள் அதிகரித்தனர். பள்ளிவாசலை விஸ்தரிக்கவேண்டிய தேவையேற்பட்டது. பள்ளிவாசலுக்கு பகத்தில் உள்ள கட்டடமொன்று விற்பனைக்கு வந்தது. 17.5 பேச்சர்ஸ் காணியொன்று 25 மில்லியனுக்கு கொள்வனவு செய்யப்பட்டது. ஆரம்பத்தில் 7.7 மில்லியன்களை முற்பணமாக செலுத்தினோம். நாம் காணியில் ஐந்து கடைகளை அமைத்துவிட்டு பள்ளிவாசலை விஸ்தரிக்கவே திட்டமிட்டோம்

கேள்வி: வக்பு சபையின் செயற்பாடுகளை எவ்வாறு நோக்குகின்றீர்?
பதில்: வக்பு சபையுடனும் பல விடயங்களில் இணைந்து செயற்பட
வேண்டிய நிலையேற்பட்டது. வக்பு சபை குறித்த எனது அவதானங்களை கூறவிரும்புகின்றேன். வக்பு சபை உறுப்பினர்களை அமைச்சர்களே நியமிக்கின்றனர். இதில் நான் தவறு காணவில்லை. வக்பு சபை உறுப்பினர்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து பணியாற்றுகின்றனரா? என்பதில் சந்தேகம் ஏற்படுகின்றது. இவ்விடயத்தில் சிலர் அல்லாஹ்வுக்காக என்று பணியாற்றி வருகிறார்கள். வக்பு சபை அரசியல் அல்லது ஒரு சாராரை அனுசரிக்கும்போது பிரச்சினைகள் முடிவடைவதில்லை. பள்ளிவாசல்கள் பலதது பிரச்சினைகளும் கிடப்பில் இருக்கின்றன. கொழும்பை மையமாக கொண்டுள்ள வக்பு சபைக்கு மேலும் கிழக்கு, மத்திய மற்றும் தெற்கு மாகாணங்களில் கிளை அடிப்படையில் இயங்குவது பயனாளிகளுக்கு இலகுவாக அமையும். அப்பகுதியில் நடைபெறும் பிரச்சினைகள் அப்பகுதி மக்கள், பிரதிநிதிகளுக்கே தெரியும். இவற்றில் அரசியல் தலையீடுகள் வராதிருக்கவும் கால தாமதம், பண விரயத்தை தடுக்கவும் உதவும். சில தவணைகளில் முடிக்கப்படவேண்டிய பள்ளிவாசல் பிரச்சினைகள் வருடக்கணக்கில் இழுத்தடிக்கப்படுகின்றன. அல்லாஹ்வுக்காக என்ற நிய்யத்துடன் செயற்படும் நிர்வாகிகள் இதனால் விரக்தியடைகின்றனர்


கேள்வி: கோட்டை பள்ளிவாசலை நடத்திச் செல்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல் என்ன
பதில்: 1994- 1996 வரை நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டோம். என்னையும் காலஞ்சென்ற ஷாஹுல் ஹமீத் ஹாஜியாரையும் தவிர ஏனைய ஐவர் இரண்டு மாதங்களில் பதவியை இராஜினாமா செய்தனர். அவர்களின் இராஜினாமாவுக்கான காரணம் நியாயமானதாக இருந்தது. அதற்காக மேலும் ஐவர் விசேட நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டனர். இந்த காலத்திலேயே 25 மில்லியன் பெறுமதியான காணியும் பள்ளிக்கு வாங்கப்பட்டது. 1996ஆம் ஆண்டிலிருந்து செயற்பட்டு வந்த சபை நிர்வாகக் குழு தேர்வுக்கான ஏற்பாடுகளை 2006ஆம் ஆண்டு வரை மேற்கொள்ளவில்லை. 2008ஆம் ஆண்டு வரை அந்த நிலை தொடர்ந்தது. நாம் வக்பு சபையில் இவ்விடயத்தை 
முறையிட்டோம். பள்ளிவாசல் விஸ்தரிப்பு 
வேலைகள் பூர்த்தியடையும் வரை இருக்கும்படி வக்பு சபை கூறியது. மேலும் மூன்று வருடங்களுக்கு குறித்த நிர்வாகிகளே நியமிக்கப்பட்டனர்
பள்ளிவாசல் விஸ்தரிப்புக்கு பதிலாக அவர்கள் கடைத் தொகுதிகளை நிர்மாணித்து வாடகைக்கு விட்டனர். அதுவும் சிறிய தொகைகளுக்கே வாடகைக்கு வழங்கியுள்ளனர். இது பெரும் அநியாயமாகும். புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் போர்ட் சிட்டிக்கும் இதுவே பள்ளிவாசலாக அமையப்போகின்றது. அப்படி பெருமதியான இடத்தில் 4000 ரூபாய்க்கு 40 கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. கடைகளை 4000 ரூபாவுக்கு பெற்றுக்கொண்டவர்கள் 30 ஆயிரம் வரை வாடகைக்கு விட்டுள்ளனர்

 கேள்வி: இப்போது ஏற்பட்டுள்ள பிரச்சினை என்ன
பதில்: புதிதாக விசேட நிர்வாகக் குழு நியமிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒன்பது பேர் உள்ளடங்குகின்றனர். நானும் ஒருவன். தற்காலிகமாக நிர்வாகத்தில் இருந்தவர்கள் மகிழ்வுடனேயே எங்களிடம் நிர்வாகத்தை டிசம்பர் மாதம் 8ஆம் திகதி ஒப்படைத்தனர். ஏற்கனவே நிர்வாகத்தில்இருந்த இருவர் இந்த நியமனத்தை எதிர்த்து வக்பு நியாய சபையில் முறையிட்டுள்ளனர். 4000 ரூபாய்வக்கு கடைகளை வாடகைக்கு வழங்கியவர்களே அரசியல் தூண்டுதலால் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.    

2 கருத்துரைகள்:

​கோட்டை ஜும்ஆப்பள்ளியின் வரலாற்றை இங்கு ஆவலோடு வாசித்தேன். அதன் உள்ளடங்கள் எமக்குப் புதிதாக இருந்தன. இந்த வரலாற்றுடன் தொடர்புடைய விடயமொன்று எனக்கு ஞாபகம் வந்தது. அதை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வது பொறுத்தமாகஇருக்கும் என நம்புகிறேன். 1983ம் ஆண்டு வெலிகம மத்ரஸதுல் பாரி மதரஸாவின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள சென்றபோது முன்னாள் கல்வி அமைச்சர் காலம் சென்ற கலாநிதி பதியுத்தீன் அவர்களைச் சந்திந்து நான் அப்போது நடாத்திய ஒரு பத்திரிகைக்கு பேட்டி வழங்குமாறு வேண்டிக் கொண்டேன். அன்னார் உடன்பட்டு அடுத்த நாள் காலையில் எனக்கு நேரம் ஒதுக்கித்தந்தார்கள். அப்போது பல விடயங்கள்,குறிப்பாக அவர் சார்ந்திருந்த அரசியல் கட்சி,அதன் ஸ்தாபகம் உற்பட முஸ்லிம்களின் கல்விக்காக அன்னார் செய்த பல விடயங்களை எங்களுத் தௌிவுபடுத்தும் போது கோட்டை ஜும்ஆ பள்ளிவாயல் விவகாரம் வந்தது. அப்போது வீடமைப்பு நிர்மாணத்துறைக்குப் பொறுப்பான அமைச்சராக இருந்தவர் ஆர்.பிரேமதாஸ கோட்டையில் பள்ளி கட்ட அனுமதி வழங்காமையால் அந்த விடயம் சம்பந்தமாக கதைத்து கௌரவ அமைச்சர் பதியுத்தீன் அவர்களைச்சந்திக்க கோட்டை பள்ளியின் நிர்வாக சபை வீட்டுக்கு வந்ததாகவும் எப்படியாவது பள்ளிவாயல் கட்ட அமைச்சரின் உதவியை அவர்கள் வேண்டிக் கொண்டதாகவும் எம்மிடம் கூறினார். சில நேரம் மௌனமாக இருந்த அமைச்சர் தொலை பேசியை அழுத்தி அப்போது வீடமைப்பு அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய பாஸ்கரலிங்கத்துடன் கதைத்ததாகவும், கல்வி அமைச்சில் சாதாரண எழுதுவிஞைராக இருந்த அவரை முன்னாள் கல்வி அமைச்சர் தனது செயலாளராக நியமித்ததாகவும் உடனே இந்த விடயத்தில் அமைச்சர் பிரேமதாஸாவுடன் கதைத்து அந்த அனுமதியை நாளை பெற்றுத் தருமாறு கேட்டதாகவும் எம்மிடம் கூறினார். அந்த வேண்டுகோளின்படி அந்த அனுமதி பெறப்பட்டு கோட்டை பள்ளிவாயல் கட்டுமானப்பணி ஆரம்பிக்கப்பட்டதாகவும் எம்மிடம் கூறினார். உண்மையில் இந்த மாதிரியாக மனஉறுதியும் ஒரு செயலை செய்ய நாடினால் என்னவகையில் அதனை அணுகி செய்து முடிக்கலாம் என்ற தூரநோக்குடைய ஆட்சியாளர்கள் இன்று இல்லாமை அல்லது மிகக்குறைவாக இருப்பது உண்மையில் இந்த நாட்டின் துர்ப்பாக்கியமாகும். ஆனால் இளம் சந்ததியினர் இத்தகைய விடயங்களில் பாடம் கற்று செயல்பட முனைந்தால் எமக்கும் இந்த நாட்டுக்கும் நல்லதொரு எதிர்காலம் நிச்சியம் இருக்கும்.

piraku kafeerkal udaikarkal entru seithi waratha?

Post a Comment