Header Ads



"அமைதி நிலவ ஒத்துழைப்பதாக, மஹிந்த கூறுவது வேடிக்கையானது"

நாட்டில் எல்லாவிதமான அசம்பாவிதங்களும் கடந்த சில நாட்களில் நடந்து முடிந்திருக்கின்ற நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நாட்டில் அமைதி நிலவுவதற்கு, தன்னால் முடிந்த ஒத்துழைப்புகளை வழங்குவதாகக் கூறியிருப்பது வேடிக்கையானதெனக் கூறிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க, ஒத்துழைப்பு வழங்குவதாகக் கூறுகின்ற இவர்களின் அண்மைக்கால கருத்துகளைத் திருப்பிப் பார்த்தால், நாட்டில் ஏற்பட்டிருக்கும் இன வன்முறைகளுக்குப் பின்னால், எவர் இருக்கிறார்கள் என்பது தெளிவாகுமென்றும் குறிப்பிட்டார்.  

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில்,  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.   

அங்கு அவர் தொடர்ந்து கூறியதாவது,   

“நாட்டின் கடந்தக்கால வரலாற்றில், இனவாதம் தலை தூக்கியிருந்ததால், எமது பெற்றோர்களும் நாமும், பெரும் துயரமடைந்திருந்தோம். நாம் அனுபவித்த கஷ்டங்கள், எமது நாட்டின் வருங்காலச் சந்ததியினருக்கு ஏற்பட்டுவிடக்கூடாது. இதற்காக, நாட்டில் உள்ள எல்லா மக்களும், இன, மத பேதமின்றி, ஒற்றுமையாக நாட்டை முன்னோக்கிக்கொண்டு செல்வதற்கு, ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.   

“நாட்டுக்கு நெருப்பு வைத்து, அதில் குளிர்க்காய வேண்டிய தேவை, ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சிக்குக் கிடையாது. ஆனால், தங்களது தனிப்பட்ட அரசியலுக்காக சிலர், நாட்டில் இனவாதத்தை விதைக்கிறார்கள். எனினும், நாட்டில் ஏற்பட்டிருக்கும் இன வன்முறைகளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவுக்கு அமைய, முப்படையினர் இணைந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருக்கிறார்கள்” என்றார். 

1 comment:

  1. இவன் தான் எல்லா பிரச்சினைக்கும் மூல காரணம்.இரண்டு முறை ஜனாதிபதி தொழிலை செய்த பிறகு ஒழுங்கா மரியாதையோடு வீட்டில் இருந்து இருந்த இப்படி எல்லாம் பிரச்சினை வந்து இருக்காது.இவன் திரும்ப ஜனாதிபதியாக வேண்டும் என்ற காரணத்தால் தான் பாதி பேர் இவன் பக்கம் மற்ற பாதிமார் மறுபக்கம் இருந்து போராடுகின்றார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.