Header Ads



தன்னுடன் பேச்சு நடாத்த வருமாறு, ரிஷாத்திற்கு பிரதமர் அழைப்பு

நல்லாட்சி அரசாங்கத்தை நம்பிய முஸ்லிம்கள் இன்று செல்லாக்காசாக ஆக்கப்பட்டுள்ளதையே அம்பாறை பள்ளிவாசலையும், முஸ்லிம்களின் சொத்துக்களையும் சேதப்படுத்திய இனவாதிகளை பிணையில் விடுதலை செய்த துர்ப்பாக்கிய நிகழ்வு உணர்த்துவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். 

பள்ளிவாசலை அடித்து நொறுக்கிய சம்பவத்தை மறைத்து, இரண்டு தரப்பினருக்கும் இடையில் இடம்பெற்ற சம்பவமாக அம்பாறை நாசகாரச் செயலைக் காட்டி, நீதிமன்றத்தை பிழையாக வழிநடாத்தி, நாசகார சக்திகளுக்கு பிணையை பெற்றுக்கொடுத்த பொலிஸாரையும், அதற்குத் துணை நின்ற அரசாங்கத்தையும் தமது கட்சி வன்மையாகக் கண்டிப்பதாக அமைச்சர் விடுத்துள்ள கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அம்பாறையில் உள்ள பெரும்பான்மையினர் அரசியல்வாதிகளின் ஆசியுடனும், பொலிஸாரின் வழி நடாத்தலுடனும் இந்தப் பிணை வழங்கும் சம்பவத்தை நன்கு சோடித்து, மிகவும் நேர்த்தியாக அரங்கேற்றியுள்ளனர்.

பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம்கள் மீதான இந்த நாசகாரச் செயலை இனவாத சம்பவம் கிடையாது எனவும், இரண்டு தரப்பினருக்கிடையில் இடம்பெற்ற பிரச்சினை எனவும் பொலிஸார் நாக்கூசாமல் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

சட்டத்தைப் பேண வேண்டியவர்கள், மக்களைப் பாதுகாப்பவர்கள் இவ்வாறு கேவலமாக நடந்துகொண்டிருப்பது, நல்லாட்சி அரசின் ஓட்டைகளையே வெளிப்படுத்தியுள்ளது.
மனுதாரரின் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணிகள் ஆட்சேபனை தெரிவித்தும், நல்லாட்சி அரசின் காவலர்கள் இவ்வாறு நடந்துகொண்டிருப்பது சட்டத்தை மதிப்பவர்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.

இனவாதிகளின் மிரட்டல்களுக்கும், பௌத்த மதகுருமார்களின் அச்சுறுத்தல்களுக்கும் நல்லாட்சி அரசு பயந்து, பொலிஸாரின் ஊடாக இவ்வாறான கைங்கரியத்தை செய்திருப்பது, அவர்களை ஆட்சிக் கட்டிலுக்குக் கொண்டுவந்த சிறுபான்மை மக்களுக்கு கன்னத்தில் அறைவது போன்று இருக்கின்றது.

வெளிப்படையாகவும், தெளிவாகவும் தெரிந்த ஓர் இனவாத அட்டகாசத்தை மறைத்து, நீதிமன்றத்தை பிழையாக பொலிஸார் வழிநடாத்தி இருப்பதை எம்மால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

கடந்த காலங்களிலும் இனவாத பௌத்த தேரர்களின் வெளிப்படையான அட்டகாசங்களையும், அட்டூழியங்களையும் மறைத்து பொலிஸார் பிணை வழங்கி இருக்கின்றனர். இப்போது, இனவாத மதகுருமார்களே நல்லாட்சியை வழிநடாத்துவது வெளிப்படையாக வெட்டவெளிச்சமாகி உள்ளது.
அரசாங்கம், முஸ்லிம்கள் மீதான இவ்வாறான தொடர்ச்சியான சம்பவங்களை கண்டும்காணாதது போல் இருந்தால், அதன் விளைவுகளை அனுபவிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை என்றும் அமைச்சர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை அம்பாறை முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பில், சற்றுமுன்னர் கொழும்பு வந்தடைந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தமது கண்டனத்தையும், கவலையையும் வெளியிட்ட போது, இதுதொடர்பில் உடனடியாக தன்னுடன் பேச்சு நடாத்த வருமாறு பிரதமர், அமைச்சருக்கு அழைப்பு விடுத்துள்ளார். இன்னும் சில நிமிடங்களில் பிரதமருக்கும், அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்குமிடையிலான சந்திப்பு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.   

1 comment:

  1. அம்பாறை சம்பவத்துக்கு சட்ட நடவடிக்கை எடுப்பதில் மு.கா தீவிரம்
    Editorial / 2018 மார்ச் 03 சனிக்கிழமை, பி.ப. 02:22 Comments - 0 Views - 34
    முஸ்லிம்களுக்கு எதிராக அம்பாறையில் மேற்கொள்ளப்பட்ட இனவாத தாக்குதல்களுக்கு உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீவிரம் காட்டி வருகிறது.

    அமைச்சர் ரவூப் ஹக்கீமின் வேண்டுகோளின் பேரில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நேற்றிரவு முதல் கட்ட சந்திப்பு நடைபெற்றுள்ள நிலையில், இன்று பிற்பகல் 4 மணிக்கு இரண்டாம் கட்ட சந்திப்பு நடைபெறவுள்ளது.

    அம்பாறை பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில், சட்டம் ஒழுங்கு அமைச்சு மேற்கொள்ளவேண்டிய சட்ட நடவடிக்கைகள் தொடர்பில் பிரதமருக்கு வலியுறுத்தும் சந்திப்பு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்றிரவு (02) நடைபெற்றது.

    சிங்கப்பூர் சென்றிருந்த பிரதமர், 3 தடவைகள் தொலைபேசி மூலம் அமைச்சர் ரவூப் ஹக்கீமுடன் தொடர்புகொண்டு பேசிய பின்னர், பொலிஸ் மா அதிபருடன், இந்த அவசர சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்து.

    அதன்பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக ஹபீர் காசிமும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக ரிஷாத் பதியுதீனும் இச்சந்திப்புக்கு அழைக்கப்பட்டனர்.

    அம்பாறை சம்பவம், பொலிஸார் முன்னிலையில் நடைபெற்றமை, சாதாரண சட்டத்தின் கீழ் சிலரை கைதுசெய்தமை, கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களுக்கு பிணை வழங்குவதற்கு பொலிஸார் உடந்தையாக இருந்தமை, பள்ளிவாசல் தாக்குதல் தொடர்பில் எந்தவொரு சந்தேகநபர்களையும் கைதுசெய்யாமை, சூத்திரதாரிகள் கைதுசெய்யப்படுவதை தடுப்பதற்கான முஸ்தீபுகள் குறித்து இதன்போது பிரதமருக்கு சுட்டிக்காட்டப்பட்டன.

    சட்டம் ஒழுங்கு அமைச்சை கேலிக்குட்படுத்தும் இந்ச்த சம்பவங்கள் தொடர்பில் ஆராய்ந்து உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்தக் கலவரத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கத் தவறிய பொலிஸார் மீது உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென முஸ்லிம் அமைச்சர்களால் வலியுறுத்தப்பட்டது.

    சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் தலைமையில் இதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் இதன்போது தெரிவித்தார்.

    அத்துடன், இதன் இரண்டாம் கட்ட சந்திப்பு, இன்று 4 மணிக்கு நடைபெறவுள்ளது. இச்சந்திப்பு காரணமாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் இன்று ஜனாதிபதியுடன் செல்லவிருந்த மட்டக்களப்பு பயணம் ரத்துச் செய்யப்பட்டுள்ளது.

    இன்று நடைபெறும் இரண்டாம் கட்ட சந்திப்பின் பின்னர், நாளை (04) ஞாயிற்றுக்கிழமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அம்பாறைக்கு விஜயம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதேவேளை, அம்பாறை கலவரம் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய சட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயும்‌ விசேட சந்திப்பொன்று, அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் அவரது இல்லத்தில் இன்று (03) காலை நடைபெற்றது.

    இச்சந்திப்‌பில் ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், மு.கா. செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான நிசாம் காரியப்பர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.எச்.எம். சல்மான், கட்சியின் வெளிவிவகார பணிப்பாளரும் சட்டத்தரணியுமான ஏ.எம். பாயிஸ், சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா ஆகியோர் கலந்துகொண்டனர்.

    ReplyDelete

Powered by Blogger.