March 08, 2018

இலங்கை முஸ்லிம்ளுக்கெதிரான இனவாதம், இஸ்லாமிய நாடுகள் அழுத்தம் கொடுப்பதாக உறுதி


இஸ்லாமிய ஒத்துழைப்பு நாடுகளின் அமையத்தின் (OIC) ஜெனீவாவுக்கான தூதுவர் நஸீமா பக்ளி அவர்களை   நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG)யின் தவிசாளர் பொறியியலாளர்  அப்துர் றஹ்மான் சந்தித்துக் கலந்துரையாடினார். இச் சந்திப்பு நேற்று மாலை (07.03.2018)  ஜெனீவாவில் அமைந்துள்ள OIC அலுவலகத்தில் இடம்பெற்றது. இச் சந்திப்பில் மனித உரிமை செயற்பாட்டாளர் முயீஸ் வஹாப்தீன் மற்றும்  NFGGயின் செயற்குழு உறுப்பினர் இஸ்ஸதீன் அவர்களும் கலந்துகொண்டனர்.

கடந்த சில தினங்களாக இலங்கை முஸ்லிம்களை இலக்கு வைத்து நடாத்தப்படும் இனவாதத் தாக்குதல்கள் பற்றி இந்த சந்திப்பின் போது அப்துர் றஹ்மான் விரிவாக எடுத்துரைத்தார்.  அவர் OIC தூதுவரிடம் எடுத்துக்கூறியதாவது ,

“இலங்கை  முஸ்லிம்  மக்களுக்கெதிரான  இனவாத நடவடிக்கைகள் நிறுவன மயப்படுத்தப்பட்ட வகையில் கடந்த சில வருடங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதிலும் கடந்த அரசாங்கம் இதனைக் கண்டு கொள்ளவே இல்லை. மட்டுமன்றி அரசாங்கத்தின் மறைமுக ஆதரவும் இனவாத அமைப்புக்களுக்கு இருந்து வந்ததனை அவதானிக்க முடிந்தது. முஸ்லிம்களுக்கெதிராக தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வந்த வெறுப்புணர்வுப் பிரச்சாரத்தின் பின்னணியுடனேயே அழுத்கம பாரிய வன்முறைகளும் நடந்து முடிந்தன. இந்த இனவாதப் போக்கிற்கு முடிவு கட்ட வேண்டுமென்பதற்காகவே ஆடசி மாற்றம்   ஒன்றுக்கான ஆணையினையும் மக்கள் வழங்கினர். இருந்தாலும் புதிய அரசாங்கமும் இனவாத நடவடிக்கைகளை கட்டுப் படுத்தத் தவறிவிட்டது. 

இனவாத வன்முறைகளுக்குக் காரணமானவர்கள் மற்றும் அதனைத் தூண்டுபவர்கள்  தொடர்பாக ஏராளமான  பொலிஸ் முறைப்பாடுகளும், வழக்குகளும் பதிவு செய்யப் பட்டுள்ளன. ஆனாலும் எவரும் தண்டிக்கப்படவில்லை. அதன் விளைவாகவே கடந்த 26ம் திகதி அம்பாரையில் ஆரம்பித்த முஸ்லிம்களுக்குகெதிரான வன்முறைகள் இன்று வரையில் கண்டிப் பிரதேசத்தில் தொடர்கின்றன. பல பள்ளிவாயல்கள் எரிக்கப்பட்டும், தாக்கப்பட்டுமுள்ளன. முஸ்லிம் ஒருவர் கொல்லப்பட்டும், இன்னும் பலர் காயப்பட்டுமுள்ளனர். கோடிக்கணக்கில் பெறுமதியுள்ள பொருளாதாரமும், வீடுகளும் வாகனங்களும் இலக்கு வைத்து தீக்கிரையாக்கப் பட்டுள்ளன. கண்டிப் பிரதேசத்தில் சிறுபான்மையாக சிதறி வாழும் முஸ்லிம்கள் உயிர் அச்சுறுத்தல் காரணமாக வீடுகளை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. ஊரடங்குச் சட்டமும், அவசரகால சட்டமும் அமுலில் இருக்கும் நிலையிலேயே இந்த வன்முறைகள் தொடருகின்றன. சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவதில் இந்த அரசாங்கம் படு மோசமாகத் தவறு விட்டிருக்கிறது என்பதனையே இது மீண்டும் நிரூபிக்கன்றது.

இந்த வன்முறைகள் தொடர்பில் OIC அமைப்பு ஏற்கனவே தனது கவலையையும், கண்டனத்தையும் தெரிவித்திருக்கிறது. இதற்காக எமது மக்கள் சார்பாக எனது நன்றியைத் தெரிவிக்கின்றேன். எனினும் தொடரும் நிலைமைகளின் பாரதூரத்தைக் கருத்திற் கொண்டு இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கக் கூடிய மேலதிகமான நடவடிக்கைகளை OIC மேற்கொள்ள வேண்டும். இதனை அவசரமாகவும் செய்ய வேண்டும் என்ற   ஒரு அவசர வேண்டுகோளினை எமது மக்கள் சார்பாக முன்வைக்கின்றேன்”

இந்த விடயங்களை கவனமாக செவிமடுத்த OIC தூதுவர் இலங்கை விடயங்களை தாம் உன்னிப்பாக  அவதானித்து வருவதாகவும் இங்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கையினை உடனடியாக OIC அமைப்பின் தலைமையகத்திற்கு  தெரியப்படுத்துவதி , இலங்கை விடயத்தில் தொடர்ச்சியான இரஜதந்திர அழுத்தங்களை கொடுப்போம் எனவும்  உறுதியளித்தார். அத்தோடு நடைபெற்றுவரும் மனித உரிமைகள் மாநாட்டு அமர்வுகளிலும் இதுபற்றி சுட்டிக்காட்டி கேள்வியெழுப்புவதாகவும் தெரிவித்தார்.

2 கருத்துரைகள்:

Inda pori iyalalar endu peruku munnuku poadati enna pirachina waapa? Simple podungalan, awarra peruku pmattum A4 pakkam ondu wenum

May Almighty bless Br. Abdur Rahman high spirit of Eiman, long life, wisdom and sound health for his outstanding sincere and instant contribution for the community in his own earnings.
In fact this is a kind of Zakatah for the blessings almighty showered as per their specialties.
Jabri

Post a Comment