Header Ads



நிச்சயமான பேரழிவும், தீர்வுகளும்

-By Isbahan Sharfdeen-

அனர்த்தங்கள் அனந்தமாய் நடக்கும் நிலைக்கு நாடு மாறியிருக்கிறது. இயற்கை அனர்த்தங்கள் முன்னொருபொழுதுமில்லாத அளவுக்கு அதிகரித்திருக்கின்றன. இது போதாதென்று மனித நடத்தைகளினாலான அனர்த்தங்களும் மறுபுறத்தில் அதிகரித்திருக்கின்றன. 2014 ஆம் ஆண்டின் தரவுகளின் படி இலங்கையின் மரணத்துக்கான காரணங்களில் வீதி விபத்துக்களின் மரணம் 2773 மரணங்களுடன் 11 ஆவது இடத்தில் இருக்கிறது. இந்த நிலைக்கு அப்பால் தற்போது இனவாத வன்முறைகள் மனித நடத்தைகளாலான அனர்த்தங்களில் முன்னணி வகிக்கும் நிலை தோன்றியிருக்கிறது. இந்த இனவாத வன்முறைகள் முஸ்லிம் சமூகத்துக்கெதிராகவே கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றன.

அளுத்கம, கிந்தோட்ட, அம்பாறை என தனித்தனி ஊர்களாகத் தொடங்கி தற்போது கண்டி மாவட்டமாக இந்த இனவாத வன்முறைகள் விஸ்தரிக்கப்பட்டிருக்கின்றன. இரண்டு தாக்குதல்களுக்கு இடையிலான இடைவெளி குறைந்து கொண்டு வருவது அவதானிக்கப்பட்டாலும் இவற்றுக்கான நிரந்தரத் தீர்வு சம்பந்தமாக முஸ்லிம் சமூகம் இதுவரை எந்த வரைபடத்தையும் வரையவில்லை. 2014 முதல் நான்கு வருடங்களாக தொடர்ச்சியாக அடி வாங்குகின்ற ஒரு சமூகம் இதிலிருந்து மீண்டு வர முயற்சிக்காமல் தொடர்ந்தும் அடி வாங்கிக் கொண்டேயிருப்பதைப் பற்றியே சிந்தித்து வருவது நாகரிகமானதொரு சமூகத்துக்குப் பொருத்தமானதல்ல.

பொதுவாக இன வன்முறைகளின் போதான முஸ்லிம் சமூகத்தின் எதிர்வினை, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதாகவும், எதிரிகளுக்கு எதிராக துஆ கேட்பதாகவுமே அமைகிறது. இம்முறை ஒருபடி மேலே சென்று ஊர்களிலே ஹிராஸா (கண்விழித்துக் காவல்) இருப்பதற்கு சமூகம் முன்வந்திருக்கிறது. இப்படி ஒவ்வொரு தாக்குதலின் போதும் தாக்குதலுக்கு ஏற்ற வகையில் ஒவ்வொரு புதிய நடவடிக்கை சேர்க்கப்படுவது தான் தாக்குதலை எதிர்கொள்வதற்கான வழியாக அமையுமென்றிருந்தால் நிரந்தரத் தீர்வை அடைவதற்குள் முஸ்லிம் சமூகம் எஞ்சியிருக்கும் இன்னும் பல ஊர்களையோ மாவட்டங்களையோ பலி கொடுக்க வேண்டியிருக்கும்.

அளுத்கம வன்முறைகளின் போதான இழப்பீடு 60 கோடியாக மதிப்பிடப்பட்டிருந்தது. இவ்வருட ஆரம்பத்தில் அரசாங்கம் இவர்களுக்கான ஒரு தொகை நஷ்டஈட்டை அறிவிக்கும் வரையான மூன்றரை வருட காலப்பகுதியில் முஸ்லிம் சமூகம் இந்த இழப்புகளில் பெரும்பாலானவற்றை தன்னாலேயே ஈடு செய்திருந்தது. வன்முறையாளர்களோ வன்முறையைப் பாதுகாத்தவர்களோ இதனால் எந்த வலியையும் உணரவில்லை. மீண்டும் இதேமாதிரியான சுழியிலேயே முஸ்லிம் சமூகம் சுற்றிச் சுழலுகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கென நாடு முழுவதும் நிதி சேகரிக்கப்படுகின்றன அல்லது நிதி வழங்கத் தயாராக உள்ளவர்களது நிதியைப் பெறுவதற்கென குறித்த சந்தர்ப்பத்தில் ஒரு நிறுவனம் முன்னகர்த்தப்பட்டு வங்கிக் கணக்குகளும் திறக்கப்படுகின்றன. இதனூடாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டாலும் எந்த வித கணக்கு வழக்குகளும் இன்றி குறித்த செயற்திட்டம் காலப்போக்கில் மறைந்து போகிறது. மீண்டும் அடுத்த அனர்த்த மழையில் முளைக்கிறது.

இது தொடர்பில் ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழக பேராசிரியர் தம்பர அமில ஹிமி கூறுகையில், முஸ்லிம் சமூகம் வன்முறையால் இழந்தவைகளைத் தமக்குள்ளேயே நிவர்த்தி செய்து கொள்கின்றனர். இதனை விடுத்து, தாமதமாகியேனும் அரசிடமிருந்து நஷ்டஈட்டைப் பெறுவதற்கு முயற்சிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். வன்முறையால் பாதிக்கப்பட்ட சமூகமே மீண்டும் அதனது சுமையையும் சுமக்கின்ற பரிதாப நிலையையே அவர் இவ்வாறு சுட்டிக்காட்டியிருக்கிறார். ஆனால் முஸ்லிம் சமூகத்திலிருந்து முன்வருகின்ற சமூக நிறுவனங்கள் எல்லாம் பாதிக்கப்பட்ட முஸ்லிம் சமூகத்திலிருந்தே நிதியைத் திரட்டி விநியோகிக்கும் பணியையே செய்து வருகின்றன.
நாட்டில் முஸ்லிம்கள் எதிர்நோக்குகின்ற எந்தப் பிரச்சினைகளில் தலையிடாவிட்டாலும் அனர்த்த நிவாரணம் எனும் போது ஓடிவந்து முன்னே நிற்கின்ற அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, முஸ்லிம் சமூகத்தை இவ்வாறானதொரு நிலைக்கே தூண்டி வருகிறது. வர்த்தமானி அறிவித்தல் மூலம் காணிகள் அபகரிக்கப்படும் போது, மீள்குடியேறுகின்ற மக்களின் காணிப்பிரச்சினைகளின் போது, மாகாண, வட்டார எல்லைப் பிரிப்பின் போதெல்லாம் தனது கிளைகளில் அலுவலகம் அமைக்காத உலமா சபை, நிவாரணப் பணி என்று வருகின்ற போது மட்டும் வங்கிக் கணக்கொன்றைத் திறந்து நிதி சேகரிப்பில் ஈடுபடுகிறது. கண்டி அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட கும்புக்கந்துறையில் பள்ளிவாசலில் உரையாற்றிய அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் ரிஸ்வி முப்தி அவர்கள், அளுத்கம அனர்த்தத்தின் இழப்புகளுக்கான நஷ்டஈடு கிடைப்பதற்கே மூன்று வருடங்களுக்கு மேல் சென்றுள்ளது, அதனால் அரசாங்கத்தின் நஷ்டஈடுகளை நம்பிக் கொண்டிருக்க வேண்டாம் என்று வேறு தெரிவித்துள்ளார்.

இதைவிட, கடந்த அனர்த்தத்துக்குப் பிறகு இன்னொரு அனர்த்தம் இடம் பெறாமல் அரசாங்க மட்டத்தில் நடவடிக்கை எடுப்பது பற்றியோ அல்லது குறைந்த பட்சமாக கடந்த அனர்த்தத்தை விட இந்த அனர்த்தத்துக்கான நிவாரணத்தை விரைவாகப் பெற்றுத் தருவது பற்றியோ பேசுவதைத் தான் சமூகம் தனது தலைமைகளிடம் இருந்து எதிர்பார்க்கிறது. இதுவன்றி, சமூகத்திடமிருந்து நிதியைத் திரட்டி அரசாங்கத்தின் பாரத்தைக் குறைக்கும் வகையில் தொண்டர் ஆசிரியர்களை நியமிப்பதையோ, ஆசிரியர்களுக்கான குவாட்டர்ஸ் மற்றும் கட்டடங்கள் கட்டிக் கொடுப்பதையோ, மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்குவதற்கு நிதி திரட்டிக் கொடுப்பதையோ அல்ல.

கண்டி அனர்த்தத்தின் பின்னர் களத்தில் செயற்படுகின்ற ஜம்மியதுல் உலமாவின் உதவி மேசைகள் களத்துக்குத் தேவையான உடனடி முன்னெடுப்புக்களை பாராட்டத்தக்க வகையில் செய்து வருகின்றன. ஆனாலும் தேசிய ரீதியில் முஸ்லிம்கள் எதிர்நோக்கிய வெறுப்புணர்வுச் செயற்பாடுகளின் போது வெளிப்பட்டது போல, ஜம்மியதுல் உலமாவின் இயலுமைக்கு அப்பாலுள்ள பகுதிகளையும் கவனிக்கக் கூடியதொரு பொறிமுறை இருப்பது அவசியம் என்பதை தற்போது உணர முடிகிறது. இதேபோலதொரு சூழலில் தான் இலங்கை முஸ்லிம் சமூகத்தில் தேசிய சூறா சபை தோற்றம் பெற்றது. ஆரம்பத்திலிருந்து அது ஜம்மியதுல் உலமாவின் தலைமை வகிக்கும் பணியை பூரணப்படுத்தும் வகையில் சமூகத்துக்குள்ளால் இன்றுவரை செய்து வருகிறது. தேசிய ரீதியில எப்படியானதொரு சூழல் தேசிய சூறா சபையை உருவாக்கியதோ அதேபோன்ற அல்லது அதைவிடவும் தீவிரமானதொரு சூழல் பிராந்திய மட்டங்களில் தற்போது உருவாகியிருக்கின்றது. எனவே தேசிய சூறா சபையும் பிராந்திய மட்டங்களில் தனது பணியை விஸ்தரித்து, களத்திலே செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற உலமா சபையின் பணிகளை களத்திலும் பூரணப்படுத்துவதற்கான முயற்சிகளில் இறங்க வேண்டிய தேவை வந்திருக்கிறது.
இது சமூகம் எதிர்நோக்கியிருக்கின்ற வாழ்வா சாவா போராட்டம். இந்த வகையில் யாராலுமே தனித்து நின்று சமூகத்தைப் பாதுகாக்க முடியாது என்பதுவே களயதார்த்தம். இதை உணர்ந்து தான் சமூகத்தின் பல்வேறு நிறுவனங்களும் அமைப்புக்களும் தனிநபர்களும் என்றுமில்லாத அளவுக்கு சமூகத்தைத் தாங்குவதற்காக முன்வந்திருக்கிறார்கள். இந்த நிலையில் யார் வந்தாலும் எங்களிடம் தான் தீர்வு இருக்கிறது, அதனைத் தான் நாங்கள் அமுல்படுத்துவோம், அதற்குரிய நிதியை எங்களிடம் தாருங்கள், எங்களுக்குக் கீழால் இருந்து நீங்களும் வேலை செய்யுங்கள் என்று ஆணவத் தோரணையில் இந்த ஆர்வலர்களை அணுகினால் சமூகப் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாது. மாற்றமாக அனைவரையும் இணைத்ததான, அனைவரது பங்களிப்புக்களையும் பெறத்தக்கதான ஒரு தலைமை தான் சமூகத்துக்கு இப்போது தேவைப்படுகிறது.

பாரியதொரு பேரழிவை எதிர்நோக்கியிருக்கும் ஒரு சமூகம், எரிந்து கொண்டிருக்கும் இந்நிலையிலாவது ஒன்றுபட்டு தாக்குப் பிடிப்பதற்கு முன்வரவில்லையென்றால், அந்த சமூகத்தின் அழிவுக்கு அதன் நிகழ்காலத் தலைமை தான் பொறுப்புச் செல்ல வேண்டும்.

கண்டிய அனர்த்தத்தின் பின்னர் சமூகம் தற்காப்பு தொடர்பில் சிந்திக்கத் தலைப்பட்டு செயற்பட்டுமிருக்கிறது. முஸ்லிம் சமூகத்தின் மீதான அடாவடித்தனங்கள் அதிகரிக்காமல் காப்பதற்கு இந்த தற்காப்பு நடவடிக்கைகள் காரணமாக இருந்திருக்கின்றன. பல பகுதிகளிலும் தொடங்கப்பட்டிருக்கின்ற ஹிராஸா நடவடிக்கைகள் இளைஞர்களை ஊரின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியிருக்கின்றன. இவ்வாறான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கவனமாகக் கையாளும் சாணக்கியம் தலைமைகளுக்கு இருக்க வேண்டும். தமிழ்ப் பயங்கரவாதிகளுக்கெதிரான யுத்தத்தின் போது முஸ்லிம் இளைஞர்களை ஊர்காவற்படைகளாக அமர்த்தி அவர்களது கைகளில் தற்பாதுகாப்புக்காக ஆயுதம் வழங்கியதால் வந்த விளைவுகளை வரலாறு பதிந்து வைத்துள்ளது. எனவே தற்போது தற்பாதுகாப்பு நடவடிக்கைகளில் இறங்கியிருக்கின்ற இளைஞர்கள் கவனமாக வழி நடத்தப்பட வேண்டும்.

இனவாதிகளை கட்டுப்படுத்துவதற்கான ஒரு நடவடிக்கையாக அருகிலுள்ள பௌத்த விகாரைகளையும் பிக்குகளையும் அணுகுவது தற்போது ஒரு வழக்கமாக மாறியுள்ளது. இது கட்டாயம் செய்யப்பட வேண்டிய வரவேற்கத்தக்க விடயமே. இருந்தாலும் முற்று முழுதாக இந்தச் செயற்பாட்டில் மட்டும் தங்கி இருப்பது ஆபத்தானது. பிரச்சினைகள் நடைபெற்ற பகுதியொன்றின் விகாராதிபதியை சந்தித்து அவர்களுடைய மக்களுக்கு இது தொடர்பில் போதிக்குமாறு முஸ்லிம் தரப்பினர் வேண்டிக் கொண்ட போது அவர், உங்களுடைய மதத்தைப் போல மதஸ்தலங்களுக்கு வர வேண்டிய கட்டாயம் எங்களது மக்களுக்கு இல்லை. போய தினங்களில் மட்டுமே மக்கள் பன்சலைக்கு வருகிறார்கள். அதிலும் பெரும்பாலானவர்கள் வயதான பெண்கள். இவர்களுக்கு இந்த விடயங்களைப் போதிப்பதால் ஆகப் போவது ஒன்றுமில்லை என்று கூறியிருக்கிறார். பெரும்பாலும் தமக்குச் சார்பான விடயங்களில் மட்டுமே இவர்கள் பிக்குமாருக்குக் கட்டுப்படுவதாகவே இவரது பேச்சுக்களில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது. ஆகவே பிக்குமார் இவர்களை கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்கள் என்று முழுமையாக நம்புவதற்கில்லை என்பதையும் சமூகம் புரிந்து, அதற்கேற்ற வகையில் தமது நடவடிக்கைகளை அமைத்துக் கொள்ள வேண்டும்.

1 comment:

Powered by Blogger.