Header Ads



பள்ளிவாசல்கள்,, கயவர்களின் கண்களிற்கு ஆபத்தாகின்றன..!

இலங்கை நாட்டில் பல்லின மக்களுடன் கலந்து வாழும் நாம், பெரும்பான்மை மதத்தினரால் அமைக்கப்பட்ட சட்டத்திற்கு கட்டுப்பட்டவர்களாக வாழுகின்றோம். இருந்தும் எமது அன்றாட தேவைகளை மார்க்க விழுமியங்களிற்கு உற்பட்டதாக செய்து கொள்வதில் எந்த தடங்கலும் இல்லாதவாறு இந் நாட்டின் சட்டம் நமக்கான ஒழுங்கமைப்புகளையும், வரையறைகளையும் ஏற்படுத்தித் தந்திருக்கின்றது என்பதில் சந்தேகமில்லை. இருந்தும் நமக்காக இந்த நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள சதிகளிற்கும், குரோத மனப்பாங்கிற்குமான எல்லை அரசியல் சாசன கட்டுப்பாட்டையும் மீறி அரங்கேறிக்கொண்டிருப்பதை நாம் அறிவோம், அனுபவப்பட்டுக் கொண்டிருக்கின்றோம். இவைகள் அல்லாஹ்வினால் நமக்கு தரப்படுகின்ற சோதனையாக, அல்லது தண்டைனையாகவே பார்க்கப்பட வேண்டும் என்பதுவே நிதர்சனமான உண்மை. அல்லாஹ் எங்களின் பாவங்களை மன்னித்து மற்றவர்கள் எங்கள் மீது கொண்டுள்ள பொறாமையையும், காழ்ப்புணர்வையும் அடியோடு அளித்துவிடுவானாக. ஆமீன்.

நாட்டின் இவ்வாறான அசாதாரண சூழ்நிலையில் நமது இருப்பையும், சொத்துக்களையும் பாதுகாப்பது எமது கடமையாகும். அதற்காக பல மாற்றீடுகளையும், தற்காப்பு விடயங்களையும் எமது சமூகம் கூட்டாக முன்னெடுக்க வேண்டியுள்ளது.

எமது பள்ளிகளின் துரித வளர்ச்சி இனவாதத்தை போஷிக்கும் கயவர்களின் கண்களிற்கு ஒரு ஆபத்தாகவே உருவாகி வருகின்றது என்பதும் நாம் பல பிரதேசங்களில் கண்கூடாக கண்ட, அறிந்த உண்மையாகும். கடந்த காலங்களில் கண்டியிலும், வெலம்பொடயிலும் அவர்கள் வைத்த குற்றச்சாட்டு எமது பள்ளிகளில் நிர்மாணிக்கப்படுகின்ற குபாவின் தோற்றமும், உயரமும். நாம் அறிந்தோ அறியாமலோ மினாராவின்  உயரத்தினை தேவைக்கு அதிகமாகவே உயர்த்தப்போய் சர்ச்சையில் சிக்கி இப்போது அவை கிடப்பில் இருப்பதை நாம் காண்கின்றோம்.

இதேபோல் வேறுபட்ட சிக்கல்களை பல இடங்களில், பல பள்ளிகளின் வெளித்தோற்றம் உருவாக்கியுள்ளது என்பதும் உண்மையே. பல ஊர்களின் கடைத்தெருவில் நிற்கும் போது பிரமாண்டமாகத் தெரிவது பள்ளிவாயல்களே. இன்றுவரை எமது நாட்டில் கட்டப்பட்டுள்ள பள்ளிகளின் வெளித்தோற்றம் பார்ப்பவர்களை கவரக்கூடிய வகையில் அமைத்ததுமே இதற்கு காரணமாக கொள்ள முடியும். அதற்கு ஒரு மாற்றீடாகவும், காலத்தின் தேவையாகவும்  நாம் முன்னெடுக்க வேண்டிய ஒரு திட்டம் எமது பள்ளிகளின் தோற்றங்கள் மீதான எமது கரிசனையும் ஒன்றாகும்.

உதாரணமாக கட்டப்படுகின்ற பள்ளிகள் அனைத்தும் ஒரே வடிவமைப்பு கொண்டதாக (Typical Design) கட்டப்பட வேண்டும். அரபு நாடுகளில் கூட அநேகமான பள்ளிவாயல்களின் தோற்றம் ஒரே வடிவத்தினை ஒத்ததாக இருக்கின்றன. நாமும் எமது சூழலை உணர்ந்து ஒரே வடிவத்தினை கொண்டதாக பள்ளிகளை கட்டுவது பிறர் கண்களை உறுத்தாமல் இருக்கும். எம்மிடையே, மஹல்லாவிற்கு மஹல்லா ஒரு பெருமைக்காகவும், போட்டியிற்காகவும் பள்ளிகளை அமைத்துக்கொண்டுள்ளோம் என்பதை நாம் யாரும் மறுப்பதற்கு இல்லை. இந் நிலை மாற வேண்டும். பிரதேசத்தில் அமைந்துள்ள பள்ளிகளிற்கு இடையிலான போட்டிகள் முற்றாக தவிர்க்கப்பட வேண்டும். ஊரின் சனத்தொகை, பள்ளி நிர்மாணிக்கப்படும் இடத்தின் அமைப்பிற்கு ஏற்ப சிறிதாக அல்லது பெரிதாக கட்டிக்கொள்ள முடியும். முடிந்தவரை வெளித்தோற்ற அமைப்பையாவது ஒரே வடிவமைப்பை ஒத்ததாக அமைப்பது நல்லது. 

அதேபோல் பின்வரும் விடயங்களையும் கருத்திற்கொள்வது எமது பள்ளிகளின் பாதுகாப்பை இன்ஷா அல்லாஹ் உறுதிசெய்யும்.

1) Emergency Exit - எமது பள்ளிகளை பொறுத்தவரையில் முன்பக்கமாக மட்டுமே கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன. பள்ளியின் பின் பக்கமாக அல்லது அவசர தேவைகளின் போது வெளியேறும் வகையில் வாயில்கள் பொறுத்தப்படுவது உதவியாக இருக்கும்.
2) First Aid Box - பாடசாலை மற்றும் அரச பொது கட்டிடங்களில் போல பள்ளிகளிலும் முதலுதவிப்பெட்டி வைக்கப்பட வேண்டும். 
3) CCTV Cameras, Cloud based storage systems - கண்காணிப்பு கெமராக்களை பொருத்துவதும், அதன் கோப்புகளை பராமரிப்பதும் காலத்தின் தேவையாகும். 
4) Fire Extinguisher - தீயணைக்கும் கருவிகள் பொருத்தப்பட வேண்டும்.
5) Fire rated Doors & Windows - தீயின் போது தாக்குப்பிடிக்கூடிய மூலப்பொருள்கள் கொண்டு உருவாக்கப்பட்ட கதவுகள், ஜன்னல்களை கொண்டு பள்ளிகளை அமைத்துக்கொள்ள வேண்டும்.

மேற்குறிப்பிட்ட விடயங்களில் பல செலவினங்கள் இருப்பதை மறுப்பதற்கு இல்லை. இவைகள் காலத்தின் தேவையாக இருக்கின்ற காரணத்தினால் இவற்றில் முதலிடுவது பயனளிக்கும். அதேபோல் பள்ளிகளின் வெளித்தோற்ற அழகிற்காகவும், கவர்ச்சியிற்காகவும் நாம் செலவிடும் பணத்தை தவிர்த்துவிட்டு இவ்வாறான விடயங்களிற்கு அவற்றை பயன்படுத்தலாம். 

பள்ளிகளின் நிலையையும், காலத்தின் தேவையினையும் உணர்ந்து மாற்றீடுகளை எமக்கு சாதகமாக உருவாக்கிக்கொள்வோம்.

No comments

Powered by Blogger.