March 21, 2018

‘யா அல்லாஹ் எங்களை இப்படி, மற்றவர்களிடம் கையேந்த வைத்துவிட்டாயே’ என சொல்ல வைக்காதீர்


-மூத்த ஊடகவியலாளர் Naushad Mohideen-

கண்டி திகண சம்பவங்கள் இடம்பெற்று அதன் வலிகளும் வேதனைகளும் இன்னும் நீங்காத நிலையில் இப்போது அந்த மக்களுக்கான நிவாரணங்கள் பல வரத் தொடங்கி உள்ளன. அவ்வாறு நிவாரணம் வழங்கும் தனிநபர்களிடமும் நிறுவனங்களிடமும் ஒரு அன்பான வேண்டுகோள். 

தயவு செய்து நீங்கள் சிறிய அளவிலான உதவிகளை அவர்களுக்கு வழங்கிவிட்டு அது பற்றி தம்பட்டம் அடித்துக் கொள்ளாதீர்கள். அந்த மக்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புக்கள் ஈடு செய்ய முடியாதவை. அதில் கடுகளவான ஒரு பகுதிதான் உங்கள் ஒவ்வொருவரிடமும் இருந்து செல்லுகின்றது. அது உங்கள் கடமை. கடமையைச் செய்து விட்டு அதற்கான விளம்பரத்தையும் புகழாரத்தையும் தயவு செய்து எதிர்ப்பா்க்க வேண்டாம். காரணம் அந்த மக்கள் உங்களிடம் கையேந்தி வாழ்ந்த பிச்சைகாகரர்கள் அல்ல. அவர்கள் கௌரவத்தோடு வளமாக வாழ்ந்த மக்கள். அவர்களை கெமராக்களுக்கு முன்னால் கையேந்த வைப்பது உங்களுக்கு கிடைக்கும் பிரபலம். ஆனால் அவர்களின் நிலை…. நீங்கள் இப்போது செய்வது இனவாதிகள் அவர்களுக்கு இழைத்ததை விட மாபெரும் கொடுமை. அவர்கள் கூனிக்குறுகி கையேந்தி நிற்கும் கோலத்தை காட்டி தான் நீங்கள் பிரபலம் தேடவேண்டுமா? தயவு செய்து சிந்தித்துப் பாருங்கள்.

அடுத்தது நீங்கள் இப்படி தம்பட்டம் அடித்து உதவிகளை வழங்குகின்ற போது அது அவற்றை அவதானித்துக் கொண்டிருக்கும் இனவாதிகளை மேலும் ஆத்திரமடையச் செய்யூம். நாம் எவ்வளவு அடித்தாலும் இவர்களுக்கு உதவி வழங்க ஆற்கள் இருக்கின்றார்கள். எனவே இவர்களைத் தாக்குவதில் தவறில்லை என்ற ஒரு வகை வஞ்சத்தை அது கொடியவர்கள் சிந்தனைகளில் விதைத்து விடும். இதன் விளைவு இன்னும் உள்ள பகுதிகளிலும் இவ்வாறான காரியங்களில் அவர்கள் ஈடுபட வழியமைக்கலாம். திகண நகரைத் தாக்கிக் கொண்டிருந்த இனவாதிகள் ஒரு இடத்தில் நின்று சாப்பிடக் கூட வழியில்லாமல் ஆலோசனைகள் நடத்திக் கொண்டிருந்த காட்சிகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அவர்களுக்கு உதவ ஒருவரும் இல்லை. ஆனால் எமது மக்களுக்கு உதவ பாதிக்கப்படாத எல்லா பகுதிகளையூம் சேர்ந்த மக்கள் தயார். ஆனால் அந்த உதவிகள் காதும் காதும் வைத்தாற் போல் இருக்க வேண்டுமே தவிர தண்டோரா எழுப்பி தடல்புடலாக உதவிகளை வழங்குவது மறு தரப்பில் ஆத்திரம் மேலிடவே வழிவகுக்கும். 

அடுத்து இன்னொரு முக்கிய விடயம் இன்றைய நிலையில் நிறுவனங்களின் பெயர்களைப் பிரபலப்படுத்தி உதவிகள் வழங்குவது ஒரு விவேகமான செயல் அல்ல. காரணம் இப்போது உதவி வழங்கும் நிறுவனங்கள் நிச்சயம் முஸ்லிம்களுடைய நிறுவனங்களாகத் தான் இருக்க வேணடும். அல்லது பெரும்பான்மையான முஸ்லிம்களின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனமாக இருக்க வேண்டும் என்பதை அவர்கள் மிக இலகுவாகப் புரிந்து கொள்ளலாம். இதன் விளைவு இனவாதிகளின் அடுத்த தாக்குதல் பட்டியலில் நீங்களே உங்கள் பெயர்களையும் உங்கள் நிறுவனப் பெயர்களையும் வலிந்து சென்று பதிவு செய்தமைக்கு சமனாகும். இதுவரை இது முஸ்லிம்களுடைய நிறுவனமா என்ற சந்தேகத்தோடு பார்க்கப்பட்ட நிறுவனங்களை அவர்கள் இனிமேல் இது முஸ்லிம்களுடைய நிறுவனம் தான் என்பதை ஊர்ஜிதம் செய்ய நீங்ளே வழியமைத்துள்ளீர்கள். இதன் விளைவு அவர்களின் அடுத்த தீய பொய் பிரசாரங்களுக்குள் நீங்களாகவே உங்கள் நிறுவனங்களை சிக்க வைக்கும் ஆபத்தை உருவாக்கி உள்ளீர்கள்.

இவை எல்லாவற்றையும் விட மேலான ஒரு விடயம் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு உதவ வேண்டியது இன்னொரு முஸ்லிமின் கடமை என்ற ரீதியில் இதை நீங்கள் செய்கின்றீர்கள். மிகவும் வரவேற்கப்பட வேண்டிய விடயம். ஆனால் அதில் உதவி வழங்குவதற்கான அடிப்படை இஸ்லாமிய தர்மத்தை நீங்கள் மீறுவது தான் கவலை அளிக்கின்றது. காதும் காதும் வைத்தாற்போல், வலது கரம் செய்வது இடது கரத்துக்கு தெரியாமல் உதவி செய்ய வேண்டும் என்பதுதான் இஸ்லாம் எமக்கு கற்றுத் தரும் அழகிய பாடம். அது இங்கே முற்றாக மீறப்படுகின்றது. இத்தகைய உதவிகளுக்கு நிச்சயம் இறைவனிடம் எந்த மதிப்பும் இல்லை. நீங்கள் இந்த உலகில் எதிர்ப்பார்க்கும் பிரபலமும் புகழும் உங்களுக்கு நிச்சயமாக கிடைக்கலாம். 

ஆனால் எல்லாம் வல்ல இறைவனின் சந்நிதானத்தில் நீங்கள் நிறுத்தப்படும் போது இவை அனைத்தையும் சுருட்டி உங்கள் முகத்துக்கு எதிரே திருப்பி வீசப்படும் என்பதை மறந்து விடாதீர்கள். மற்றவர்களுக்கு உதவும் சமூகக் கடமையை நிறைவேற்றும் போது எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பெயரால் அவனுக்கு அஞ்சி அதை செய்வோம். உங்களால் முடிந்தளவு எல்லாவிதமான உதவிகளையும் வழங்குங்கள். கோடி கோடியாக கொண்டு போய் கொட்டுங்கள். ஆனால் உங்கள் கெமராக்களை மறைத்து வைத்து விட்டு மக்களை கூனிக் குறுக வைக்காமல் ‘யா அல்லாஹ் எங்களை இப்படி மற்றவர்களிடம் கையேந்த வைத்துவிட்டாயே’ என்ற வேதனை எள்ளளவும் அந்த மக்கள் மனதில் ஏற்படாத வண்ணம் அதை செய்யுங்கள். இறைவன் நம் எல்லோரையூம் நேர் வழப்படுத்தி நல்வழி காட்டுவானாக..

2 கருத்துரைகள்:

Why these organisations such as ACJU, SLTJ,our Media, etc. did not understand this simple truth and act accordingly. There are photos, News Reports , Mosque collection announcements etc regarding relief work and it is going to have a negative effect and image as mentioned by Mr. Naushad Mohideen.It is pity that we are not learning by these bitter experiences.

Why these organisations such as ACJU, SLTJ,our Media, etc. did not understand this simple truth and act accordingly. There are photos, News Reports , Mosque collection announcements etc regarding relief work and it is going to have a negative effect and image as mentioned by Mr. Naushad Mohideen.It is pity that we are not learning by these bitter experiences.

Post a Comment