Header Ads



"இலங்கையில் அனைத்து சமூகத்தினரிலும், பாதிக்கப்பட்ட மக்கள் உள்ளனர்" - ஐ. நா. விசேட ஆணையாளர்

இலங்கையில்   அனைத்து  சமூகத்தினரிலும் பாதிக்கப்பட்ட மக்கள் உள்ளனர். 10 வருடங்களுக்கு ஒரு முறை  ஏதோ வகையில் இடம்பெறுகின்ற வன்முறைகளினால்   சமூகங்கள் பாதிக்கப்படுகின்றன.   இலங்கையில் பொறுப்புக்கூறல் பொறிமுறையானது அரசியல் மயமாக்கப்பட்டுள்ளது   என்று உண்மையைக்கண்டறிதல், நீதியை நிலைநாட்டுதல், நட்டஈடு வழங்குதல்,  மற்றும்  மீள்நிகழாமை என்பவற்றுக்கான ஐக்கியநாடுகளின் விசேட ஆணையாளர் பப்லோ டி கிரீப்  தெரிவித்தார். 

ஜெனிவா மனித உரிமைப்பேரவையில் நேற்று நடைபெற்ற   இலங்கை தொடர்பான விவாதத்தில் இலங்கைக்கான விஜயம் குறித்த அறிக்கையை வெளியிட்டு உரையாற்றுகையிலேயே  அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பப்லோ டி கிரீப் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்; 

2015 ஆம் ஆண்டிலிருந்து நான் இலங்கையுடன் தொடர்ந்து செயற்பட்டு வருகின்றேன். பல்வேறு விஜயங்களை அங்கு நான் மேற்கொண்டிருக்கின்றேன்.  கடந்தவருடமும்   இலங்கைக்கு நான் விஜயம் செய்திருந்தேன். அதுதொடர்பான எனது அறிக்கையை   எதிர்வரும் செப்டெம்பர் மாதம்   ஜெனிவாவில் சமர்ப்பிப்பேன்.  

இலங்கை அரசாங்கத்திற்கும் சிவில் சமூகத்திற்கும்   பாதிக்கப்பட்ட மக்களுக்கும்  எனக்கு  வழங்கிய ஒத்துழைப்புக்காக இங்கு நன்றி தெரிவிக்கின்றேன்.  பழைய விடயங்கள் அனைத்தையும் இங்கு  நான் பேசவில்லை. மாறாக இரண்டு வாரங்களுக்கு முன்னர் இலங்கையில் இடம்பெற்ற  முஸ்லிம் சமூகத்தினர் மீதான தாக்குதல் குறித்து  சில விடயங்களை   முன்வைக்கின்றேன். 

2015 ஆம் ஆண்டு காணாமல்போனோர் விடயம்,  காணி விடயம், தடுத்து வைத்தல், சித்திரவதைகள், வன்முறைகள், சிவில் சமூகம் மீதான கண்காணிப்பு பாதிக்கப்பட்ட மக்களை கண்காணித்தல் போன்ற விடயங்கள் குறித்து பரிந்துரைகளை முன்வைத்திருந்தேன். இந்த விடயங்களில்  அதிகமானவை இன்னும் தீர்க்கப்படாமலேயே உள்ளன.  

ஒரு பரந்துபட்ட ரீதியான   நிலைமாறுகால நீதி   குறித்த  பொறுப்புக்கூறல் பொறிமுறையை  முன்னெடுக்கவேண்டுமென   நான்  ஏற்கனவே  பரிந்துரை முன்வைத்திருக்கின்றேன்.  குறிப்பாக  2015 ஆம் ஆண்டு  ஜெனிவா மனித  உரிமை பேரவையில்  நிறைவேற்றப்பட்ட 30/1 என்ற தீர்மானத்தின் கீழ் இந்தப் பொறுப்புக்கூறல் பொறிமுறை  முன்னெடுக்கப்படவேண்டியது    அவசியமாகும். 

காணாமல்போனோர் அலுவலகத்திற்கு   ஆணையாளர்களை நியமித்துள்ளமை  எதிர்பார்ப்பிற்கான ஒரு சமிக்ஞையை வெளிக்காட்டியுள்ளது.  அதில் சில கேள்விகளும் காணப்படுகின்றன. குறிப்பாக   தாமதமும் காணப்படுகின்றது.   இந்த அலுவலகம் தொடர்பில்  ஈடுபாட்டுடன் செயற்படுமாறு நான் அனைத்துத் தரப்பினரிடம் கோரிக்கை விடுக்கின்றேன்.   

காணாமல்போனோர் அலுவலகமானது ஒரு  ஆரம்பம் மட்டுமேயாகும். இலங்கையில்   அனைத்து  சமூகத்தினரிலும் பாதிக்கப்பட்ட மக்கள் உள்ளனர். 10 வருடங்களுக்கு ஒரு முறை  ஏதோ வகையில் இடம்பெறுகின்ற வன்முறைகளினால்   சமூகங்கள் பாதிக்கப்படுகின்றன.   இலங்கையில் பொறுப்புக்கூறல் பொறிமுறையானது அரசியல் மயமாக்கப்பட்டுள்ளது.   

No comments

Powered by Blogger.