March 08, 2018

அனுர குமாரக்களும், அமில ஹிமிக்களும்

அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.ஃபளீல் (நளீமி)

   “தெல்தெனிய தாக்குதலில்  முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட இழப்புக்களை தனிப்பட்ட முறையில் யாரும் ஈடு செய்யக்கூடாது.இந்த நாட்டில் உள்ள சமுர்தி உதவி பெறும் ஒவ்வொருவரிடமிருந்தும் ஒரு  தொகைப்பணம் இதற்காக அறவிட்டப்பட்டு அது ஈடு செய்யப்பட வேண்டும்.காரணம் அப்போது தான் இது ஒரு சமூக கடமையாக உண்ரப்படும்.”  எனப் பேசியவர் ஒருமுஸ்லிம் அல்லர்.இந்த நாட்டில் பெளத்த புத்தி ஜீவிகளில் ஒருவரும் பிரபல மத குருவுமான அமில தேர் ஆவார்.அதுவும் அரச ஊடகமான இலங்கை வானொலியில் 7ஆம் திகதி இடம்பெற்ற நேரடி நிகழ்ச்சியின் போது இதனை அவர் தெரிவித்தார்.  பிற சமயங்களைச் சேர்ந்த  அரசியல்வாதிகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், தொடர்பு சாதனத்துறையில் இருப்போர், பல்கலைக்கழக மட்டங்களிலுள்ள அறிஞர்கள், சட்டத்துறையினர் ஆகியோருக்கு மத்தியிலுள்ள சிலர் முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்து வருகிறார்கள் என்பதற்கு இது சிறந்த ஓர் உதாரணமாகும்.

முஸ்லிம் சமூக அவலங்களைப் பற்றி முஸ்லிம் அல்லாத அரசியல் வாதிகள்  தைரியமாகப் பேசுகிறார்கள்; பல எழுத்தாளர்கள் எழுதுகிறார்கள். அவர்களை நாம் இனம் கண்டு அவர்களுடன் கூட்டிணைந்து அவர்களைப் பயன்படுத்தி எமது சகவாழ்வுச் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். பெளத்த, இந்து, கிறிஸ்தவ மதப் பெரியார்களிற் சிலர் கூட இனவாதத்தை பகிரங்கமாக எதிர்க்கிறார்கள். இப்படியான சிலருடன் இணைந்து செயற்படுவதற்கான செயற்றிட்டமொன்றை வகுக்க வேண்டிய காலம் வந்து விட்டது. ஏற்கனவே சில முஸ்லிம் அமைப்புக்களும் தனிமனிதர்களும் இப்படியான முயற்சிகளில் ஈடுபட்டுவது பாராட்ட்த்தக்கதாகும். அம்முயற்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டு தீவிரப்படுத்தப்பட வேண்டும். பெளத்த சமுதாயத்திலுள்ள சில முக்கியமான தேரர்கள் இந்தவகையில்குறிப்பிடத்தக்கவர்களாவர்:
# சபரகமுவ பல்கலைக் கழகத்தின் வேந்தர் பேராசிரியர் கும்புருகமுவே வஜிரநாயக தேரர், ஜயவர்தனபுர பல்கலைக் கழக விரிவுரையாளர் நாம் மேலே சுட்டிக் காட்டிய தம்பர அமில தேரர்,பாலி பெளத்த பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் கல்லெல்ல சுமனசிரி,கலாநிதி மகிந்த தீகல்ல,மாதம்பகம அஸ்ஸஜி தேரோ,மஹாபோதி விகாரையின் பிரதம குரு பனாகல உபதிஸ்ஸ தேரோ,தியகடுவெவ சோமானந்த தேரோ,கலடுவெவ பஞ்சாலோக தேரர்,பன்னில ஆனந்த தேரர்.

# இவர்களோடு கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த பாதிரியார் சரத் ஹெட்டியாராச்சி, பாதிரியார் அனுர செனவிரத்ன,பாதிரியார் திலகரத்ன பாதிரியார் வெலிகட ஆராச்சி போன்றோரும்,

# மற்றும் பேராசிரியர் ஜயந்த செனெவிரத்ன, கலாநிதி நிர்மல் ரஞ்ஜித் பெரேரா,பிரபல பத்திரிகையாளர் விக்டர் ஐவன் போன்றோரும் இனம்காணப்பட்டிருக்கிறார்கள்.அதேபோன்று இந்துக்களது சமூகத்திலும் பல குருக்கள் இருக்கிறார்கள்.அவர்களும் இனம்காணப்பட்டு இந்த முயற்சிகளில் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும்.தெல்தெனிய சம்பவத்தின் பின்னர் ஜே.வீ.பீ.தலைவர் அனுர குமார அவர்கள் நிகழ்த்திய உரை முஸ்லிம் சமூகத்தால் மட்டுமன்றி பிறராலும் மெச்சப்படுகிறது.

இத்தகையவர்களுடன் தொடர்புகளை உருவாக்கி, பலப்படுத்தி சமாதான சகவாழ்வுக்கான திட்டங்களை கூட்டாக இணைந்து மேற்கொள்ளலாம்.அதன் மூலம் ”Win Win Situation” என்று ஆங்கிலத்தில் கூறப்படுவது போன்று இரு தரப்பினருக்கும் நலன்களை ஈட்ட முடியும்.முஸ்லிம்கள் இந்நாட்டில் நிம்மதியாக வாழ்ந்தால் அது முஸ்லிம் சமுதாயத்துக்கு பயன் தருவது போல இந்த நாட்டுக்கும் அது பயனளிக்கும்.

எனவே,முஸ்லிம் அல்லாத அனைவரையும் எமது எதிரிகள் என்ற பட்டியலில் நாம் சேர்த்து விட முடியாது. எமது கொள்கையை அவர்கள் ஏற்றுக் கொள்ளாத போதிலும் அவர்களிற் சிலர் எம்முடன் மனிதாபிமான அடிப்படையிலான உறவுகளை வைத்துக் கொள்ளும் தயார் நிலையில் இருக்கலாம். நாம் உதவி கேட்டால் உதவி செய்ய தாராளமாக முன்வரலாம். ஒடுக்கப்படும் மக்களுக்காக குரல் கொடுக்கும் நிதானமும் மனவலிமையும் அவர்களுக்கு இருக்கலாம். அத்தகையவர்களுடன் நாம் நல்லுறவைப் பேணுவதுடன் அவர்களுக்கு நாம் கைமாறு செய்வதற்கும் பழகிக் கொள்ள வேண்டும்.

நபிகளார் காலத்து உதாரணங்கள்
நபி (ஸல்) அவர்களது காலத்தில் இஸ்லாத்தின் வெற்றிக்குப் பின்புலத்தில் முஸ்லிம் அல்லாதவர்களும் இருந்திருக்கிறார்கள் என்பது எமக்கு சிறந்த முன்மாதிரியாகும்.

1. முத்இம் இப்னு அதீ, அபூதாலிப் போன்ற பெருந்தகைகளிடம் நபி(ஸல்) அவர்கள் உதவிகளை கேட்டுப் பெற்றிருக்கிறார்கள்.
2. நபி(ஸல்) அவர்களுடன் மதீனத்து அன்ஸார்கள் அகபா எனும் இடத்தில் உடன்படிக்கை செய்த போது இஸ்லாத்தை தழுவாத நிலையில் இருந்த அப்பாஸ் அவர்கள் அங்கு பிரசன்னமாகியிருந்து நபி(ஸல்)அவர்களை பாதுகாத்தார்கள்.
3. நபி(ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் சென்ற போது அப்துல்லாஹ் இப்னு உரைகத் என்ற பிற சமயத்தவரின் உதவியைப் பெற்றார்கள்.
4. குறைஷியரது நடவடிக்கைகளை உளவு பார்ப்பதற்காக குஸாஆ கோத்திரத்தைச் சேர்ந்த முஸ்லிம் அல்லாதவர்களின் உதவியையும் நபிகளார் பெற்றார்கள்.
5. முஸ்லிம் அல்லாதவர்களுடன் ஹுதைபியா, நஜ்ரான் உடன்படிக்கைகளில் நபி(ஸல்) சம்பந்தப்பட்டார்கள்.

’முத்இம் இப்னு அதீ’

நபி(ஸல்)அவர்கள் குறிப்பாக  ’முத்இம் இப்னு அதீ’என்பவரது உதவியைப் பெற்றார்கள் என்பதனை  நாம் குறிப்பாக நோக்கமுடியும்.

யார் இந்த ’முத்இம் ’ என்ற கேள்வி எழலாம்? இவர் கி. பி. ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த சிலை வணங்கிகளில் ஒருவர். நபி(ஸல்) அவர்களுக்கு அபூஜஹ்ல் அல்வலீத், அபூலஹப் போன்ற குறைஷித் தலைவர்கள் பயங்கரமான நெருக்கு’தல்களைக் கொடுத்துக் கொண்டிருந்த கால கட்டத்தில் நபி(ஸல்) அவர்களுக்கு மிகவுமே தேவைபட்ட உதவிகளைச் செய்தவர்.இவர் இஸ்லாத்தை கடைசி வரை தழுவியிருக்கவில்லை.ஆனால்,மிக இக்கட்டான இரண்டு சந்தர்ப்பங்களில் இஸ்லாத்தைப் பாதுகாத்தார்.

முதலாவது சந்தர்ப்பம்: முஸ்லிம்களும் முஸ்லிம்களுக்கு சார்பாக இருந்த பனூ ஹாஷிம்களும் அபூதாலிப் கணவாயில் ஒதுக்கி வைக்கப்பட வேண்டும் என்று கூறி குறைஷித் தலைவர்களால் எழுதப்பட்டு கஃபதுல்லாஹ்வில் தொங்கவிடப்பட்டிருந்த பட்டயத்தை தனது கையால் உடைத்து எறிந்தவர் முத்இம் தான். குறைஷியர் மேற்கொண்ட இந்த அநியாயத்தை சகிக்க முடியாத அவரும் இன்னும் சிலரும் இதற்கான திட்டமிடலைச் செய்தார்கள். அதன் பின்னர் தான் நபி(ஸல்) உட்பட ஏனைய முஸ்லிம்களும் பனூ ஹாஷிம்களும் சுமார் 3 வருட துன்பத்தின் பின்னர் கணவாயிலிருந்து வெளிவர முடிந்தது.

இரண்டாம் சந்தர்ப்பம்: நபி(ஸல்) அவர்கள் ஸைத்(ரழி) அவர்களுடன் தாயிபிலிருந்து திரும்பி மக்காவை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் மக்காவில் நுழைந்தால் கொல்லப்படும் ஆபத்து இருந்தது. குறைஷியர்கள் அன்னாரை எதிர்பார்த்திருந்தார்கள். இச்சந்தர்ப்பத்தில் முத்இம் இப்னு அதீயின் உதவியுடன் தான் நபி(ஸல்) அவர்கள் மக்காவில் நுழைந்தார்கள்.
பொதுவாக மக்காவில் நுழைவதில் எவரும் ஆபத்தை எதிர்நோக்கினால் குறைசியர்களுக்கு மத்தியிலிருந்த சமூக அந்தஸ்துள்ள ஒருவர் அத்தகையவருக்கு அபயம் வழங்கி பாதுகாக்கும் வழக்கம் ஒன்று அன்று இருந்து வந்தது. அதற்கு `இஜாரா` எனப்பட்டது.

நபி(ஸல்) அவர்கள் தாயிபிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த வேளை குறைஷியரில் எவரிடமிருந்து ’இஜாரா’ வைப் பெறுவது என்று சிந்தித்தார்கள். அந்தவகையில், அக்னஸ் பின் ஷரீக், சுஹைல் இப்னு அமர் ஆகிய முக்கியஸ்தர்களிடம் தூதுவர்களை அனுப்பி ’இஜாரா’ தரும்படி வேண்டினார்கள். ஆனால், அவர்கள் அதனை வழங்க மறுத்து விட்ட சூழ்நிலையில் குஸாஆ எனப்படும் கோத்திரத்தைச் சேர்ந்த ஒருவரை முத்இம் இப்னு அதீ இடத்தில் நபி(ஸல்)அவர்கள் அனுப்பி இஜாரா வேண்டினார்கள். அப்போது அதற்கு விருப்பம் தெரிவித்த முத்இம் அன்னாரை தனது வீட்டுக்கு வரும்படி தூதுவர் மூலம் அழைத்தார். அதற்கமைய முத்இமின் வீட்டுக்குச் சென்ற நபியவர்கள் அன்றைய இரவை அவரது வீட்டில் கழித்தார்கள்.
காலையானதும் முத்இமும் அவரது ஆறு ஆண் மக்களும் ஆயுதம் தரித்தார்கள். நபி(ஸல்) அவர்களை கஃபதுல்லாஹ்வுக்கு நுழைந்து தவாபில் ஈடுபடும்படி முத்இம் கூறினார். அவ்வேளை அவரும் மகன்மாரும் ஆயுதங்களுடன் பாதுகாப்பு வழங்கினார்கள். நபி(ஸல்) அவர்கள் கஃபதுல்லாஹ்வை தவாப்(வலம்)வந்த பொழுது அன்னாருக்கு பின்னாலேயே முத்இம் சென்று கொண்டிருந்ததை அவதானித்த அபூசுப்யான் ‘‘அமுஜீருன் அவ் முத்தபிஉன்’’ (நீ அவருக்கு ‘இஜாரா கொடுக்கிறாயா அல்லது அவருக்குப் பின்னால் வெறுமனே சென்று கொண்டிருக்கிறாயா?)என்று கேட்ட போது முத்இம்,`இல்லை இஜாரா கொடுக்கிறேன்` என்றார். எனவே, நபி(ஸல்)தனது வழிபாடுகளை பாதுகாப்பாகப் பூர்த்தி செய்த பின்னர் தனது வீட்டில் நுழையும் வரை முத்இமும் அவரது புதல்வர்களும் அன்னாருக்குப் பாதுகாப்பு கொடுத்தார்கள் என்று வரலாற்று நூல்கள் கூறுகின்றன.

நபி(ஸல்) மதீனா வந்த பின்னர் முத்இம் 90 க்கு மேற்பட்ட வயதில் இறந்து விட்டார். பத்ர் யுத்தம் அதற்குப் பிறகு தான் நடைபெற்றது. பத்ர் யுத்தத்தில் குறைஷியர்களில் 70 பேர் சிறைபிடிக்கப்பட்ட வேளையில் நபி(ஸல்) அவர்கள் ‘‘முத்இம் இப்னு அதீ இன்று உயிருடன் இருந்திருந்து,இந்த கைதிகள் விடயமாக என்னோடு பேசியிருந்தால் நான் அவர்களை அவருக்காக விடுவித்திருப்பேன்` (புகாரீ) என்றார்கள்.

முத்இம் இணை வைப்பவர்களில் ஒருவராகவும் பனூ நவ்பல் எனப்படும் கோத்திரத்தின் தலைவராகவும் மக்காவின் பிரமுகர்களில் ஒருவராகவும் இருந்தார். அவரது உதவியை- அடைக்கலத்தை நபி(ஸல்) அவர்கள் கேட்டுப் பெற்றிருக்கிறார்கள். முஸ்லிம்கள் தமக்கான உதவிகளை பிறசமயத்தவரிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம் என்பதை இது காட்டுகின்றது.

இவை அன்னாரது அரசியல் ராஜதந்திரத்துக்கான சான்றுகளாகும்.

மேற்கூறிய சம்பவங்களிலிருந்து முஸ்லிம்கள் அடக்கியொடுக்கப்படும் நிலைகளில் நல்லுள்ளம் படைத்த முஸ்லிம் அல்லாதவர்களது உதவிகளைப் பெறமுடியும் என்பதுடன் முஸ்லிம்கள் அதிகாரமிக்கவர்களாக மாறிய பின்னர் அதற்கு கைமாறு செய்ய முடியும் என்பதும் தெளிவாகிறது.

# நிபந்தனைகள்

ஆனால், உதவிகள் பெறப்படும் போதும் கூட்டுச் சேரும் போதும் உடன்படிக்கைகளின் போதும் முஸ்லிம் சமூகத்தின் நலன்களுக்கன்றி தனி மனித நலன்களுக்கு ஒரு போதும் முன்னுரிமை வழங்கப்படலாகாது. சமூகத்தை காட்டிக் கொடுக்கும், தாரை வார்க்கும் வகையிலான எந்த நகர்வுகளும் அல்லாஹ்வினால் தடுக்கப்பட்டிருக்கின்றன.

அதேவேளை,முஸ்லிம் அல்லாதவர்களது உதவியை நாடுவதும் அவர்களுடன் சேர்ந்து பணிபுரிவதும் இஸ்லாத்தைப் பொறுத்தவரையில் நயவஞ்சகத்தனமோ கபட நாடகமோ அல்ல. முஸ்லிம்கள் பலவீனர்களாக இருக்கும் போது மட்டுமே இவ்வாறு பிறரது தயவை நாடுவார்கள்; பலசாலிகளாக மாறிய பின்னர் பிறரைத் தூக்கி எறிந்துவிடுவார்கள் என்று எவரும் கருத முடியாது. முஸ்லிம்கள் பலசாலிகளாக மாறிய பின்னர் தாம் பலவீனர்களாக இருந்த போது உதவியவர்களை ஒரு பொழுதும் மறக்கமாட்டார்கள். ``முத்இம் உயிரோடு இருந்து, அவர் பத்ர் கைதிகள் விடயமாக என்னோடு பேசியிருந்தால் நான் அவர்களை விடுதலை செய்திருப்பேன்’’ என்ற நபி (ஸல்) அவர்களது கூற்று இதனையே காட்டுகிறது.

நாம் பலசாலிகளாக மாறிய பின்னர் எமது தொகையும் பலமும் அதிகரித்து விட்டது தானே; இதற்குப் பிறகு நாம் பிறரது தயவில் வாழத்தேவையில்லை; அவர்களுடன் செய்த உடன்படிக்கைகளை நாம் மீறுவோம் என்று சிந்தித்தால் அது ஒரு முஸ்லிமின் பண்பல்ல என்பதை அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்.

‘‘ஒரு சமூகத்தவர் மற்றுமொரு சமூகத்தாரை விட அதிகமானவர்களாக இருக்கிறார்கள் என்னும் காரணத்தால் நீங்கள் உங்கள் சந்தியப் பிரமாணங்களை உங்களுக்கிடையில் ஏமாற்றும் சாதனங்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்களை சோதிப்பதெல்லாம் இதன் மூலமாகத்தான்……. …..நீங்கள் உங்கள் சத்தியப் பிரமாணங்களை உங்களுக்கிடையில் மோசடிக்குரியவையாக ஆக்கிக் கொள்ளாதீர்கள்`` (16:92, 94)

எனவே,முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் சூழலில் பெரும்பான்மை இனத்தவர்களிடமிருந்து ஒதுங்கி வாழாமல் அவர்களது நல்ல காரியங்களில் ஒத்துழைப்பதுடன் முஸ்லிம் சமூக உரிமைகளை வென்றெடுக்கவும் நாட்டின் சமாதான சகவாழ்வை கட்டியெழுப்பவும் அவர்களுடன் இணைந்து செயற்படவேண்டிய சந்தர்ப்பங்களில் இணைந்து செயற்படுவதும் அவர்களது உதவியைப் பெற்ருக்கொள்வதும் காலத்தின் தேவையாகும்.முஸ்லிம் அல்லாத அனைவரும் துவேஷிகள் என்ற முடிவுக்கு நாம் வந்துவிடாமல்,அனைவரையும் ஒரே தராசில் போட்டுப் பார்த்துவிடாமல் இதய சுத்தியோடும் அர்ப்பணிப்போடும் அவர்களை அரவணைத்துக் கொண்டு எமது நிகழ்சித் திட்டங்களை முன்னெடுப்போமாக!
இலங்கை முஸ்லிம்களது தேவை


இலங்கை முஸ்லிம்கள் மிகவும் இக்கட்டான ஒரு கால கட்டத்தை கடந்து கொண்டிருக்கிறார்கள். பல சர்வதேச, தேசிய சக்திகள் முஸ்லிம்களை வேரறுத்து விடுவதற்கான திட்டங்களை நேரடியாகவும் திரைமறைவிலும் தீட்டிக்கொண்டிருக்கின்¬றன. நாடு தழுவிய ஒரு கலவரம் முஸ்லிம்களுக்கெதிராகக் கட்டவிழ்த்துவிடப்படலாம் என்ற அச்சம் பலமாக இருந்து வருகிறது. மியன்மாரில் நடப்பது போன்ற நிகழ்வுகளுக்கு இங்கு தூபமிடப்படுகிறதோ என்று நினைக்கத் தோன்றுகிறது. அல்லாஹ்தான் பாதுகாக்க வேண்டும்!

அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம். எமது பாவங்களிலிருந்து விலகிக் கொள்வோம். எமது பக்கத்தில் தவறுகள் நிகழ்ந்திருக்கின்றனவா என்று சிந்திப்பதும் அப்படி இருந்தால் எம்மை நாம் திருத்துவதும் எமது கடமை . ஆனால்,அத்துடன் நிறுத்திக் கொள்ளக்கூடாது. இந்த நாட்டில் எமது இருப்பை தக்க வைத்துக் கொள்ளவும் உடைந்து கொண்டு போகும், எமக்கும் பிற சமூகங்களுக்குமிடையிலான உறவை மீளவும் கட்டியெழுப்பவும் சமாதான சக வாழ்வை மேற்கொள்ளவும் நாம் தீவிர முயற்சிகளில் ஈடுபட வேண்டும். சாணக்கியத்தோடும் தூர நோக்கோடும் நகர்வுகள் தேவை. எமக்குள் மாத்திரம் குறுகிக் கொண்ட மூடுண்ட ஒரு சமூகமாக நாம் இங்கு வாழ முடியாது. பிற சமூகங்களுடன் நல்லுறவைப் பேணவும் அவர்களுக்கு மத்தியிலுள்ள நன் மக்களை எமது முயற்சிகளுக்கு உள்வாங்கவும் நாம் பழகிக் கொள்ள வேண்டும்.

இது நபி(ஸல்)அவர்களது வழிமுறையுமாகும். ஈற்றில் முஸ்லிம் சமூகம் மாத்திரமின்றி முழு நாட்டு சமூகங்களும் பயனடைய வேண்டும் என்ற பரந்த மனப்பாங்கும் இஹ்லாசும் இருப்பின் அல்லாஹ்வின் அருளும் மகத்தான கூலியும் கிட்டும். அல்லாஹ் உதவி செய்வானாக!

11 கருத்துரைகள்:

That´s a way should go do this process!

முற்றிலும் சரியான காளாத்திகுதிக்கேற்ற கட்டுரை. நாங்களும் UNP/ SLFP என்று எத்தனை காலம்தான் மக்கிப்போன/ நீதி நியாயமில்லாத, கொள்ளை கொலைகாரக்கட்சிகளுடன் மாறடித்தபோதும், இனிமேலாவது நாங்களும் நல்லவர்களுடன் சேர்த்து எங்களையும் எங்கள் சமூகத்தயும் பாதுகாத்துக்கொள்ளும் வழியைத் தேடுவோம். சகோதர்களே இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவைகளை கொஞ்சம் சிந்திப்போம்.

It is very informative & timely article. May allah protect all muslims. May allah give muslims of SL to live peacefully with other ethnic groups.. May Allah give muslims freedom to obey their rituals without any obstacles..

Very Excellent article for this situation!

Masha Allah
Sheikh it's un valuable advise
May Almighty grant yiu longliveness

Social,political,religious leaders & others should think regarding important points in this article & try to make them in action without delay.

Social,political,religious leaders & others should think regarding important points in this article & try to make them in action without delay.

கருத்து கவனிக்கப்பட வேண்டியது. ஆனால் துரதிக்ஷ்டவசமாக பெறுமதியான ஆலோசனைகள் பெறப்பட்டும் அதை திட்டமிட்டு சமயோசிதமாக நடத்தக்கூடியவர்களை கான்பது அரிது. அப்படி ஏதாச்சும் நல்லது செய்தாலும் தன்னால் அதை செய்ய முடியவில்லை என்பதற்காக புகாரியில் இல்லை, முஸ்லிமில் இல்லை என கதை வேறு..

Masha Allah, Our Muslims (we) will try to keep connection with Anura Disanayake, we all vote to JVP

ACJU THERE ARE TRAVELLING BY THIS WAY
PLEASE BE GET TO GETHER WITH ACJU.

We all muslim pls vote to jvp

Post a Comment