March 16, 2018

"முஸ்லிம்களின் கைகளில் பிரித் நூல் கட்டலாம், பள்ளிகளினுள் 'பண' ஓதலாம்"

'வெற்றிலை' 'கை' கொடுக்க 'யானை' 'தாமரை மொட்டைக்' கொண்டு மேற்கொண்ட முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள்

'அதற்குப் பல காரணங்கள், சாட்சிகள், காரணிகள் உள்ளன. ஒரு உதாரணத்தை எடுத்துக் கொண்டால் தெல்தெனியவில் முஸ்லிம்களின் கடைகளைத் தாக்கும்போது, அந்தக் கடைகள் வரிசையில் ஓர் கட்சியின் இலச்சினை காணப்படும் ஓர் கடை உள்ளது. அந்தச் இலச்சினை உள்ள கடையினைத் தாக்காமல் அதற்கு அருகிலுள்ள ஏனைய அனைத்துக் கடைகளும் தாக்கப்பட்டுள்ளன.'

இது கடந்த மார்ச் 11 ஆந் திகதி ஞாயிறு திவயின பத்திரிகைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கியுள்ள நேர்காணலிலிருந்து பெறப்பட்ட ஒரு பகுதியாகும். இந்தக் கூற்றின் பின்பு அவர் கூறும் விடயம் தொடர்பாக எனது கவனம் ஈர்க்கப்பட்டது.

அதில் ஜனாதிபதி சிறிசேன பின்வருமாறு கூறுகிறார்.

'குளியாப்பிட்டியில் இரண்டு முஸ்லிம் கடைகள் தாக்கப்பட்டன. ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்ட ஓர் வேட்பாளர், அவரது வாகனத்தில் சென்று அந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளார் என விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. சில விடயங்கள் தெளிவாக அரசியல் பின்புலத்தில் அரசாங்கத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்டவை என்பது இவற்றின் மூலம் தெளிவாகிறது. சிலர் அரசியல் பின்புலம் அற்ற கடும்போக்குடன் சிந்திப்பவர்கள் ஆவர்' ஜனாதிபதியின் இக்கூற்று ஏன் எனது விசேட கவனத்தை ஈர்த்தது என இப்போது கூறுகிறேன்.

ஜனாதிபதி சிறிசேன ஒரு இடத்தில் 'ஓர் கட்சியின் இலச்சினை காணப்படும் முஸ்லிம் கடையொன்று உள்ளது. அதற்கு எந்த சேதமும் விளைவிக்கப்படவில்லை. அதன் அருகிலுள்ள ஏனைய அனைத்துக் கடைகளும் தாக்கப்பட்டுள்ளன' எனக் கூறுகிறார். எனினும் அந்தக் கடையில் காணப்பட்ட கட்சி இலச்சினையைக் கூறவில்லை. அடுத்து 'ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவர் குளியாப்பிட்டியில் அவரது வாகனத்தில் சென்று தாக்குதல் மேற்கொண்டமை விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது' எனக் கூறுகிறார். தனது அரசாங்கத்தின் ஓர் பங்காளியாக இருப்பினும் ஐக்கிய தேசியக் கட்சி முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையில் தொடர்புபட்டதாக துணிவுடன் கூறுகிறார். அது மிகவும் நல்லது. எனினும் தெல்தெனியவில் முஸ்லிம் கடையில் காணப்பட்ட கட்சி இலச்சினை யாருடையது எனக் கூறாமல் மறைத்து விடுகிறார். அவ்வாறு மறைப்பதற்குக் காரணம் ஜனாதிபதி சிறிசேன கடந்த உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிட்ட 'வெற்றிலை' அல்லது 'கை' இலச்சினையே அந்த முஸ்லிம் கடையில் ஒட்டப்பட்டிருந்தது. அதனால் அந்த கடை தப்பித்துக் கொண்டது.

அடுத்து மஹசொன் பலகாயவின் தலைவர் அமித் வீரசிங்க என்பவரின் மனைவி கடந்த மார்ச் 12 ஆந் திகதி ஊடகங்கள் முன் சில கருத்துக்களை வெளியிட்டார். அதில் தனது கணவருக்கு கண்டிக்கு வருமாறு மத்திய மாகாணத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபரே அழைப்பு விடுத்தார் எனக் கூறினார். தனது கணவரை இந்த அனைத்துக் குற்றச்சாட்டுக்களிலும் சிக்கி விட்டமை தொடர்பாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் பொறுப்புக் கூற வேண்டும் எனவும் கடுந் தொனியில் குறிப்பிட்டார். இதே தினம் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவீ கருணாநாயக்க கூறிய சில விடயங்களையும் ஊடகங்களில் காண முடிந்தது. அதில் 'எமது அரசாங்கத்தின் உள்ளேயும் பசுத் தோல் போர்த்திய ஓரிரு புலிகள் உள்ளன. எல்லாக் குடும்பங்களிலும் கறுப்பு ஆடுகள் உள்ளன. அதே போன்று அரசாங்கத்திலும் ஓரிருவர் உள்ளனர்' எனக் கூறியிருந்தார்.

இவையனைத்திற்கும் மேலதிகமாக முஸ்லிம் கடையில் 'வெற்றிலை' அல்லது 'கை' இலச்சினையே ஒட்டப்பட்டிருந்தது என உறுதியாகக் கூறுவதற்கு இன்னுமோர் காரணமும் உள்ளது. மத்திய மாகாணத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் எஸ். எம். விக்கிரமசிங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினதும், தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினதும் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவுக்குப் பொறுப்பாக இருந்தவர். முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களுக்கு பொலிஸார் உதவி புரிந்தனர். அதற்கான ஆதாரங்கள் உள்ளன எனவும் ஊடகங்கள் முன்பாக முஸ்லிம் அமைச்சர்கள் தெரிவிக்கின்றனர்.

அமைச்சர் ஹக்கீம் பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது 'கலகமடக்கும் படையினர் இருந்த போதும் அவர்கள் கலகக்காரர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளவில்லை. நடவடிக்கை மேற்கொள்ள தமக்கு உத்தரவு வரவில்லை என இராணுவத்தினர் கூறுகின்றனர். இன்னுமோர் இடத்தில் கிராமத்தைத் தாக்குவதற்கு வந்த கலகக்காரர்களை முஸ்லிம்கள் ஒன்றிணைந்து தாக்கி விரட்டியடித்ததாகவும், விசேட அதிரடிப் படையினர் முஸ்லிம் கிராமத்தவர்களைத் தாக்கி விரட்டியடித்ததாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது. 'ஒரு மணித்தியாலம் தருகிறோம், செய்வதைச் செய்து விட்டு விரைவாகச் சென்று விட வேண்டும்' என கலகக்காரர்களுக்கு பொலிஸார் கூறியதாகவும் ஓர் குற்றசாட்டு உள்ளது' எனக் குறிப்பிட்டார்.

மத்தும பண்டாரவின் டிக்கிரி பண்டார பொலிஸார் இந்தப் பெரும்பாலான குற்றச்சாட்டுக்கள் உண்மையானவை என சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான அமைச்சர் மத்தும பண்டார மார்ச் 12 ஆந் திகதி பிபிசியுடன் மேற்கொண்ட நேர்காணலின்போது உறுதிப்படுத்தியுள்ளார்.

'வன்முறைகள் பரவிச் செல்லும்போது பொலிஸார் பார்த்துக் கொண்டு இருந்தனர் எனவும் கலகக்காரர்களை அடக்க நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனவும் பொலிஸாருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் காணப்படுகின்றன அல்லவா' என பிபிசி அமைச்சரிடம் வினவியிருந்தது. அதற்குப் பதிலளித்த அமைச்சர் 'இந்த மோதல்கள் காரணமாக இருவர் மரணமடைந்துள்ளனர். அதே போன்று 12 பேர் காயமடைந்துள்ளனர். அதில் எட்டு பேர் குண்டுத் தாக்குதல் சம்பவத்தினால் காயமடைந்துள்ளனர். அதாவது மோதிக் கொள்ளவில்லை. பொலிஸார் வன்முறையில் ஈடுபடுவோரை இதனை விடவும் வித்தியாசமாகக் கவனித்திருப்பின் நிலைமை இதனை விட மாறியிருக்க முடியும்' எனக் கூறியுள்ளார்.

அமைச்சரின் பதிலுக்கு ஏற்ப கலகக்காரர்கள் கொண்டு வரும் அனைத்து குண்டுகளையும் வீசுவதற்கு இடமளிக்கின்றனர். அதன் பின்பு விரும்பியவாறு தாக்குதல் மேற்கொள்ளுதல், தீ மூட்டுதல், கொள்ளையடித்தல் என்பவற்றுக்கு இடமளிக்கின்றனர். அவர்களுக்கு இது போதும் எனத் தோன்றி பின்பு மீண்டும் செல்லும் வரை பொலிஸார் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அதன் பின்பு அவர்களில் தெரிவு செய்த அவசியமான ஒருசிலரை மாத்திரம் கைது செய்கின்றனர். இதுவே ஓர் இனத்திற்கு எதிரான கிளர்ச்சியை அடக்குவதற்கு 21 ஆம் நூற்றாண்டில் மேற்கொள்ளப்பட்ட சிறந்த கண்டுபிடிப்பு. இதனை அமைதிக்கான நோபல் பரிசுக்கு சிபாரிசு செய்ய முடியும். ஜனாதிபதியின் விஞ்ஞானபூர்வமான அமைச்சரவை மாற்றத்தின் பின்பு வந்த அமைச்சர் எவ்வளவு அதிஷ்டம் மிக்கவர்.

அடுத்து மோதிக் கொள்ளவில்லை என அமைச்சர் கூறுகிறார். அது உண்மை தான். ஆயுதம் தரித்த சிங்களப் பொலிஸார் மற்றும் சிங்கள இராணுவத்தினர் ஆயுதம் தரித்த சிங்கள வன்முறையாளர்களுக்குப் பாதுகாப்பு வழங்கியுள்ளனர். அதனால் முஸ்லிம்களினால் எதிர்த் தாக்குதல் மேற்கொள்ள முடியவில்லை. எனவே அங்கே மோதல் இடம்பெறவில்லை. அங்கு இடம்பெற்றது முஸ்லிம்கள் தாக்கப்பட்டமை மாத்திரமே.

அமைச்சர் மேலும் இவ்வாறு கூறுகிறார் 'பொலிஸார் வன்முறையில் ஈடுபவோரை அதனை விடவும் வித்தியாசமாகக் கவனித்திருப்பின் நிலைமை இதனை விட மாறியிருக்க முடியும்'. அமைச்சரின் இந்தக் கூற்று மூலம் எதனைக் கூற வருகிறார் என பிபிசி ஊடகவியலாளர் வினவவில்லை. அதனால் யாருக்கும் எவ்வாறும் அர்த்தங் கற்பிக்க முடியும். எதிர்காலத்தில் இவ்வாறான இனரீதியான தாக்குதல் மேற்கொள்ளப்படும்போது வன்முறையில் ஈடுபடுவோர் கொண்டு வரும் குண்டுகள், ஆயுதங்கள் மற்றும் வரும் குழுவினர் எவ்வளவு என்பதை வரையறுக்க முடியுமாயின் அழிவுகளைக் குறைத்துக் கொள்ள முடியும் எனக் கருதுகிறார் என நான் நினைக்கிறேன். அதே போன்று அதற்கு ஏற்புடைய சுற்றறிக்கையொன்றை சட்டம் மற்றும் ஒழுங்க அமைச்சு கூடிய விரைவில் வெளியிடுவது நல்லது.

அவ்வாறான தீவிரவாத செயற்பாடுகளை அமைதியாக கை கட்டிப் பார்த்துக் கொண்டிருப்பதன் மூலம் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் அசௌகரியத்துக்கு உட்படுகின்றனர். அவர்கள் மீது குற்றசாட்டுக்கள் சுமத்தப்படுகின்றன. அதனால் வன்முறையாளர்கள் மீண்டும் திரும்பிச் செல்லும் வரை இதன் பின்பு இராணுவத்தினரையும் பொலிஸாரையும் படையினர் தங்குமிடங்களில் தங்கச் செய்யுமாறு நான் முன்மொழிகிறேன்.

புதுமையான உடனடிக் கோபம் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பாக அமைச்சர் கிரியெல்ல பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது சிங்கள் பௌத்தர்கள் முஸ்லிம் மக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும் எனக் கூறியிருந்தார். அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இலங்கை ராமக்ஞ மகா நிக்காயவின் ஊடகப் பேச்சாளர் ஓமல்பே சோபித தேரர் அவர்கள் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார். அதில் ஓரிடத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 'உடனடிக் கோபத்தை அடிப்படையாகக் கொண்டு ஒழுங்கமைக்கப்படாத ஆவேசம் மிக்க ஓர் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட அந்த தீவிரவாதச் செயல் ஒருபோதும் பௌத்தர்களினால் திட்டமிட்டு ஒழுங்குபடுத்தலுடன் மேற்கொள்ளப்பட்ட ஒன்று அல்ல.'

தேரர் அவர்களே! துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து, தொலைபேசி அழைப்புக்களை மேற்கொண்டு, பொலிஸினுள் கூட்டங் கூடி தாக்குதலைத் திட்டமிடும் முறையை நீங்கள் காணவில்லையா? செவிமடுக்கவில்லையா? அவ்வாறே உடனடி வெளிப்பாடு, உடனடி நூடில்ஸ் ஆகிய பதங்களின் அர்த்தங்களைத் தெளிவுபடுத்த முடியுமா? ஒரு வார காலமாக தொடர்ச்சியாக ஒருவரின் உடனடிக் கோபம் காணப்பட முடியுமா? அதே போன்று உடனடிக் கோபம் வந்தவுடன் உடனடி பெற்றோல் குண்டுகள் உடனடியாக உருவாக முடியுமா?

தேரர் அவர்களின் உடனடிக் கோபம் காரணமாக, தாக்குதல் மேற்கொள்ளத் தயார் செய்யப்பட்டிருந்த 24 பெற்றோல் குண்டுகள் பேராதெனியில் கண்டுபிடிக்கப்பட்டதாக 'உடனடிச் செய்திகள்' தெரிவித்திருந்தன. உடனடிக் கோபம் காரணமாக முஸ்லிம் பள்ளிகள் உட்பட தீக்கிரையாக்கப்பட்ட சொத்துக்களின் எண்ணிக்கை 465 ஆகும். தமது தாய்நாட்டில் உடனடியாக அகதியானோர் எண்ணிக்கை 4,000 குடும்பங்கள் ஆகும். இது சிங்கள பௌத்தரின் உடனடிக் கோபம் நிரம்பி வழிந்தமையினால் மலைநாட்டில் மாத்திரம் இது வரைக்கும் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட சேதங்களின் அளவாகும். சிங்கள பௌத்தரின் நிரந்தக் கோபம் காரணமாக வடக்கில் தமிழர்களின் அழிந்த சொத்துக்களின் பெறுமதி பல பில்லியன்களாகும். அதனுடன் நோக்கும்போது முஸ்லிம்கள் புண்ணியம் செய்துள்ளார்கள் அல்லவா தேரர் அவர்களே. இங்கு இரு கொலைகள் மாத்திரமே. கடுகளவு தான்.

அவ்வாறே தெல்தெனிய பொலிஸ் நிலையத்தின் உள்ளிருந்து கொண்டே மகசொன் பலகாயவின் தலைவர் மட்டக்களப்பு சுமனரத்ன தேரரிடம், 'தேரர் அவர்களே நேற்று இரவே ஒரு குழுவினர் காலியிலிருந்து புகையிரதம் ஏறி விட்டனர். வவுனியா சிங்கள மக்கள் வேன்; ஒன்றில் வருகின்றனர். குருநாகலிலிருந்தும் வந்து கொண்டிருக்கின்றனர்' எனக் கூறுகிறார். பாருங்கள் சோபித்த தேரர் அவர்களே, உடனடிக் கோபம் ஏற்பட்டு, எந்த ஒழுங்கமைப்பும் இன்றி அங்குமிங்கும் அலைந்து மிகவும் சரியான இடத்திற்கு அல்லவா அவர்கள் வந்து சேர்ந்துள்ளனர்.

சோபித்த தேரர்கள் அவர்களின் அறிக்கை மூலம் இன்னுமொன்றும் வெளிப்படுகிறது. அது தான் இந்துத் தமிழனும், இஸ்லாமிய முஸ்லிமும் சிங்கள பௌத்தனி;ன் கோபம் தூண்டப்படாதவாறு வாழ்வதற்கு கற்றுக் கொள்ள வேண்டும். 'தம்பிமார் மிகவும் அதிகமாகத் துள்ளுகின்றனர்' எனப் பெரும்பாலான சிங்கள் பௌத்தர்களும் இந்தக் கருத்தையே கூறுகின்றனர். சமூகத்திலுள்ள பெண்களுக்கும் இவ்வாறானதோர் குற்றச்சாட்டு காணப்படுகிறது. பெண்ணின் ஆடை அணிகலன்கள் மற்றும் அவளது நடத்தைகள் காரணமாகவே அவள் பலாத்;காரம் செய்யப்படுகிறாள் என்பதே அதுவாகும். இதுவும் அது போன்றதே.

அனைத்தும் இவ்வாறு முடிவடைந்த பின்பு 'தமது இனத்தவருக்குப் பாதுகாப்பு வழங்குவதில் முஸ்லிம் அமைச்சர்கள் தோல்வியடைந்துள்ளனர்' என பொதுபல சேனா அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திலந்த விதானகே முஸ்லிம் அமைச்சர்களைக் கேலி செய்திருந்தார். அமைச்சுப் பதவியை விடவும் சிங்கள பௌத்த, இனவாதியாக மதவாதியாக இருப்பது எவ்வளவோ மேல் என்பதே அதன் மூலம் கருதப்படுகிறது. தற்போது (மார்ச் 14) பொதுபல சேனாவின் ஞானசார தேரரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் ஜப்பானுக்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளமையினையும் கருத்திக் கொள்ள வேண்டும்.

கிளர்ச்சியின் உண்மையான தலைவர்கள்

குற்றஞ் சாட்டப்பட்டுள்ள பிரதிப் பொலிஸ்மா அதிபர், திலும் அமுனுமக, லொஹான் ரத்வத்த ஆகியோர் மஹிந்த ராஜபக்ஷ அணியைச் சார்ந்தவர்கள்.
அதனால் இந்த அனைத்து விடயங்களையும் ஆராயும்போது முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையில் நேரடியாகத் தொடர்புடைய மூன்று தரப்பினர் உள்ளனர் என்பது தெளிவாகிறது. அது ஜனாதிபதி சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் ஆவர். அவர்கள் அதனை மறுப்பதாயின் தமது ஆதரவாளர்கள் எவரும் இந்த வன்முறையில் தொடர்புபடவில்லை, எனப் பகிரங்க அறிக்கையொன்றை வெளியிடுவதற்கும் அவ்வாறு இருப்பின் கட்சி என்ற வகையில் மேற்கொள்ளும் நடவடிக்கையை நாட்டிற்கு வெளிப்படுத்துமாறும் நாம் அவர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.  

அதே போன்று இந்த முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை புதியதோர் பரீட்சார்த்த நடவடிக்கையா என்பது தொடர்பாகவும் நாம் கருத்திற் கொள்ள வேண்டும். ஏனெனில் மஹிந்த, கோட்டாபய தமிழ்;, முஸ்லிம் மக்களுக்கு நேரடியாக எதிர்ப்புத் தெரிவித்து தாக்குதல் மேற்கொண்டனர். அதன் மூலம் அந்த அரசாங்கம் இனவாத, மதவாத அரசாங்கம் என சர்வதேசரீதியாகப் பெயர் பெற்றது. எனவே நல்லாட்சி அரசாங்கம் தியரியை மாற்றியிருக்க முடியும்.

அவ்வாறான சந்தேகம் ஏற்படுவதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவை பின்வருமாறு - இந்த வன்முறையுடன் தொடர்புடைய எந்தப் பிக்குவும் இது வரைக்கும் கைது செய்யப்படாமை, தாக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் உடனடியாக நஷ்டஈடுகளை வழங்குகின்றமை, இனவாத, மதவாதக் கருத்துக்களைப் பரப்பும் இலத்திரனியல் ஊடகங்கள் அல்லது அச்சு ஊடகங்களுக்கு எவ்விதமான தடையும் விதிக்கப்படாமை, முகநூல், வட்ஸ் அப், வைபர் மாத்திரம் நிறுத்தப்பட்டமை, இராணுவத் தளபதியின் முஸ்லிம்கள் மீதான பொங்கி வழியும் கருணை, தீக்கிரையாக்கப்பட்ட அனைத்து வீடுகள், வியாபார நிலையங்கள், சமயஸ்தலங்களை எதிர்வரும் போயா தினத்திற்கு முன்பாக திருத்தியமைக்க இராணுவத் தளபதி வாக்குறுதியளித்தமை, 1988 ஆம் ஆண்டு முதல் தொடர்;ச்சியாக சமூகத்தில் நிலைபெறும் சிங்கள, பௌத்த இனவாத மதவாதக் கருத்தோட்டத்தைத் தோற்கடிக்க சிறு துளி முயற்சியைக்கூட நல்லாட் அரசாங்கம் மேற்கொள்ளாமை. 

புதியதோர் பரீட்சார்த்த முயற்சியா?


அதனால் சிலபோது எதிர்வரும் போயா தினத்திற்கு முன்பாக அனைவரும் மீளக் குடியமர்த்தப்பட்டு பிக்குமார் சென்று பிரித் ஓதி முஸ்லிம்களின் கைகளில் பிரித் நூல் கட்டலாம். வெள்ளிக் கிழமை இறை வணக்கத்தின் பின்பு பிக்குமார் முஸ்லிம் பள்ளிகளினுள் 'பண' ஓதலாம். மௌவலிமார் போயா தினத்தில் பன்சலைக்கு வர வேண்டியேற்படும். பன்சலையின் தொரண் உட்பட பல்வேறுபட்ட நிகழ்வுகளுக்கு உதவி செய்வது கட்டாயமானதாக மாறலாம். அதற்கு 'சமய சகவாழ்வு' என அழகிய பெயரை இட முடியும். மாக்சிசத்தில் ஒன்றிப் போதல் என இந்த வேலைத்திட்டத்தையே அழைப்பர்.

ஹிட்லரின் நாசிசத்தை விடவும் ரஷ்யாவின் ஸ்டாலினின் சர்வாதிகாரம் பயங்கரமானது, கொடியது என அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். ஹிட்லர் தனது வதை முகாம்களுக்கு கொண்டு வந்த கொமியுனிஸ்டுகள் சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட நிர்வாண உடல்களாக அல்லது எரிக்கப்பட்ட சாம்பல்களாவே மீண்டும் வெளியே சென்றனர். எனினும் ஸ்டாலின் கொண்டு வந்த கொமியுனிஸ்டுகள் வெளியே வந்து லெனின் அல்லது டுரோட்ஸ்கி குற்றவாளிகள், ஸ்டாலின் தான் நல்லவர் எனக் கூறும் இழிவானவர்களாக  வாழ்ந்தனர்.

எனவே சிங்கள, பௌத்த, கொவி வம்சத்தவரின் இராசதானியில், சிங்கள பௌத்தரின் அதி உத்தம செங்கடகலவில் வாழும் முஸ்லிம்களின் வாழ்க்கை விதி நாளைய தினம் எவ்வாறு தீர்மானிக்கப்படும என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

ஞானசிறி கொத்திகொட
தமிழில் - சேனையூரான்      

2 கருத்துரைகள்:

மிகவும் சிந்தனைக்குரிய கட்டுரை

Supper .ilagayilum abuthaalibuhal irkkuzu

Post a Comment