Header Ads



பௌத்த இனவாதம் தலைவிரித்தாட, மைத்திரி - ரணில் அதிகாரப் போட்டியும் காரணம்

மைத்திரிபால சிறிசேனவிற்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையிலான அதிகாரப் போராட்டமானது இருவரையும் மிகவும் மோசமாகப் பாதித்துள்ளதுடன் இவ்விருவரினதும் நீண்டகால அரசியல் மூலோபாயங்களின் வரையறைகளையும் வெளிப்படுத்தியுள்ளதாக சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இவ்விரு தலைவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற அதிகாரப் போட்டியானது சிங்கள பௌத்த இனவாதம் நாட்டில் தலைவிரித்தாடுவதற்கும் நாட்டில் வன்முறைகள் ஏற்படுவதற்குமான போலித்தனமான வெற்றியைக் கொடுத்துள்ளது.

எனினும், பெப்ரவரி 10 அன்று நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் தேசிய அரசாங்கத்தில் நிலவும் ஒற்றுமையின்மை வெளிப்படுத்தப்பட்டமை மக்கள் இலகுவாக மறந்துவிட முடியாது. இத்தேர்தல் பெறுபேறைத் தொடர்ந்து, மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தை விட தனது அரசாங்கமானது ஊழல் மிக்கதாக உள்ளதாக மைத்திரிபால சிறிசேன அறிவித்திருந்தார்.

இதற்கு மாறாக, மைத்திரிபால சிறிசேனவை ஆட்சியிலிருந்து கவிழ்ப்பதற்கு முயற்சித்த ஐக்கிய தேசியக் கட்சியின் இளையோர்களை ரணில் அமைதிப்படுத்தியிருந்தார். ரணிலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் ஆதரவளித்திருந்தார். இதனால் நிலைமை சுமுகமாகியது.

ஜனநாயக நாடான சிறிலங்காவின் தலைவிதியானது 341 உள்ளுராட்சி சபைகளால் மட்டும் தீர்மானிக்கப்படமாட்டாது. இதற்கும் அப்பால் 2020ல் இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலிலேயே நாட்டின் தலைவிதி தீர்மானிக்கப்படும் என்பதே உண்மையாகும்.

ஜனநாயகம் நிலைநாட்டப்படாது, அரசியல் சாசனத்தில் மாற்றம் கொண்டுவரப்படாவிட்டால் 2020 ஜனவரியில் இடம்பெறும் அதிபர் தேர்தல் மூலம் புதிய அதிபர் பதவியேற்க வேண்டும். அத்துடன் பெப்ரவரி 2020ல் நாடாளுமன்றத் தேர்தல் நடாத்தப்பட வேண்டும். மகிந்த ராஜபக்ச அதிபர் தேர்தலில் ஆர்வம் காட்டமாட்டார் என்பதற்கு பல காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.

எனினும் மகிந்தவின் பெரும்பான்மை ஆதரவாளர்கள் அடுத்த அதிபர் தேர்தலில் கோத்தாபய நிறுத்தப்படுவார் என நம்புகின்றனர்.

இதேவேளையில், மறுபுறத்தே அதிபர் தேர்தலில் போட்டியிடுமாறு ரணில் மற்றும் மைத்திரியிடம் அவர்களது ஆதரவாளர்கள் அழுத்தம் கொடுக்கலாம். இரண்டாம் தடவையாக அதிபர் தேர்தலில் போட்டியிடமாட்டேன் என அதிபராகப் பதவியேற்ற போது மைத்திரிபால சிறிசேன அறிவித்திருப்பினும் கூட, சிறிலங்கா சுதந்திரக் கட்சி சார்பாக மைத்திரியே அதிபர் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என பலரும் நம்புகின்றனர்.
நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தல் பெறுபேறானது தற்போது ஆட்சியிலுள்ள தேசிய அரசாங்கம் தொடர்பான நம்பிக்கையை சிதறடித்துள்ளதுடன் பல்வேறு முரண்பாடுகளையும் தோற்றுவித்துள்ளது.

முன்னைய ஆட்சியில் ஊழல்களில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை வழங்கத் தவறியமையே தற்போது நடந்து முடிந்த தேர்தலில் பின்னடைவு ஏற்பட்டமைக்கான காரணம் என உள்ளூராட்சித் தேர்தல் முடிந்த பின்னர் ரணில் விக்கிரமசிங்கவால் கூட்டப்பட்ட முதலாவது ஊடக மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது.

சட்ட ஒழுங்கைக் கடைப்பிடிக்கத் தவறியமை, வாழ்க்கைச் செலவு அதிகரித்தமை, நாட்டில் வறட்சி மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டமை போன்றன ஐ.தே.க அரசாங்கத்திற்கான வாக்குகளைக் குறைத்துள்ளதாகவும் குறிப்பாக சட்ட ஒழுங்கு நிலைநாட்டத் தவறியமையே இதற்கான முக்கிய காரணம் எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார்.

நாட்டில் சட்ட ஒழுங்கு நிலைநாட்டப்படவில்லை  என்கின்ற குற்றச்சாட்டை முன்னாள் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சகல ரட்ணயக்க ஏற்றுக்கொண்டதுடன் இதற்காக தான் தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்யவும் தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

எனினும், சிறிலங்கா அதிபரின் அழுத்தத்தின் காரணமாகவே ஊழல் குற்றச்சாட்டுக்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக தண்டனை வழங்கவில்லை என அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதிபரின் தலையீடின்றி, முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச மற்றும் ஏனைய குற்றவாளிகளை முன்னாள் சட்ட மற்றும் ஒழுங்கு அமைச்சர் மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் பாதுகாத்திருக்க முடியாது.

கோத்தாபயவைப் பாதுகாக்கும் மைத்திரியின் மூலோபாயமானது தோல்வியடைந்துள்ளது என்பதையே அண்மையில் இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தல் பெறுபேறு தெளிவாகச் சுட்டிக்காட்டுகின்றது. இருப்பினும், கோத்தாபயவை மைத்திரி பாதுகாப்பதாக கூறுவதன் மூலம் சிறிசேனவின் சிறிலங்கா சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்த முடியும் என ரணில் நம்புகிறார் எனக் கூறுவது தவறானதாகும்.

கோத்தாபயவை மூன்றாவது வேட்பாளராக பயன்படுத்தாது, ரணில் சிறுபான்மை மக்களின் வாக்குகளைப் பெற்று மைத்திரியை வெற்றி பெற முடியும் என்பது தெளிவாகும். பெப்ரவரி 10 அன்று இடம்பெற்ற உள்ளுராட்சித் தேர்தலில் மைத்திரி மற்றும் மகிந்த பெற்ற வாக்குகள் ஐ.தே.க பெற்ற வாக்குகளை விட குறைவானதாகும். கோத்தாபயவை சட்டத்திலிருந்து தான் பாதுகாத்தமை தொடர்பான குற்றச்சாட்டை கடந்த ஜனவரியில் மைத்திரி ஏற்றுக்கொண்டிருந்தார்.

பிளவுபட்டுள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள் கடும்போக்கு சிங்கள பௌத்தர்களை ஒன்றிணைப்பதற்கு கோத்தாபயவே பொருத்தமான நபர் என்பதையும் இக்கட்சியின் தலைமைத்துவத்தை ஒருங்கிணைப்பதற்கும் கோத்தாபய தேவை என்பதை மைத்திரியின் விசுவாசிகள் நம்புகின்றனர். இவ்வாறு அறிவித்ததன் மூலம், கோத்தாபய கைதுசெய்யப்படுவதிலிருந்து இவரை மைத்திரி பாதுகாத்துள்ளார்.

அத்துடன் சிங்கள இனத்தின் இரட்சகராக கோத்தாபய உள்ளார் என்பதையும் இதனால் உள்ளுராட்சித் தேர்தலில் கோத்தாபயவிற்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்கின்ற மறைமுகமான செய்தியை கடந்த ஜனவரி மாதம் மைத்திரி மக்களுக்கு விடுத்திருந்தார் என்பது தெளிவாகும்.

இதேவேளையில், ஐ.தே.க மீது மைத்திரி பழிசுமத்தியுள்ளார். ஆனால் இவரின் இந்த அரசியல் மூலோபாயமானது முற்றிலும் எதிர்மறையான விளைவையே ஏற்படுத்தியுள்ளது. மகிந்த விசுவாசிகளைத் தனக்கு ஆதரவளிக்குமாறு உந்துதல் வழங்குவதற்குப் பதிலாக, முன்னாள் அதிபருக்கு ஆதரவளிக்குமாறும் அவர்களை விட ஐ.தே.க மிக மோசமான ஊழல்களில் ஈடுபடுவதாகவும் மைத்திரி பரப்புரை செய்துள்ளார். ஆகஸ்ட் 2015 பொதுத் தேர்தலில் ஐ.தே.க இழந்த அதேயளவு வாக்குகளை இத்தேர்தலில் மைத்திரியின் கட்சி பெற்றுள்ளது.

ஆகவே மைத்திரி, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் எந்தவொரு வாக்குகளையும் பெற முயற்சிக்கவில்லை என்பதுடன் ஐ.தே.கவின் வாக்கு வங்கியை சிதறடிப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது என வாதிட முடியும். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சிங்கள இனவாத வாக்குகளை மகிந்தவின் புதிய கட்சியான சிறிலங்கா பொதுஜன பெரமுனவிற்கு மைத்திரிபால சிறிசேன வழங்கியுள்ளார் எனக் கூறமுடியும்.

வழிமூலம்        – ceylon today மொழியாக்கம் – நித்தியபாரதி

No comments

Powered by Blogger.