Header Ads



அம்பாறை தாக்குதல் - சி.சி.ரி.வி. கமரா, உணவு, தொலைபேசிகள் ஆய்வுக்கு உட்படுகின்றன

அம்பாறை நகரில் ஜும்ஆ பள்ளிவாசல் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் மீது நடத்தப் பட்ட தாக்குதல் தொடர்பில் 5 பேரை  கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர கேசரிக்கு தெரிவித்தார்.

விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக குறித்த வன்முறைக்கு வந்த குழுவினரை அடையாளம் காண பிரதேசத்தின் பல முக்கிய இடங்களில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி. கண்காணிப்பு கமரா பதிவுகளை பெற்று அதனை ஆரய்ந்து வரும் சிறப்பு பொலிஸ் குழு, சம்பவத்தின் போது சம்பவ இடத்திலிருந்து எடுக்கப்பட்ட தொலைபேசி அழைப்புக்களை மையப்படுத்தியும் சந்தேக நபர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது. 

இது தொடர்பில் தொலைபேசி பகுப்பாய்வு நடவடிக்கைகளை முன்னெடுத்து அந்த அறிக்கையினை பெறவும் அதனை மையப்படுத்தி மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கவும் பொலிஸார் நீதிவானின் அனுமதியையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர  விசாரணைகளை முன்னெடுக்க வேண்டிய கோணங்கள் தொடர்பில் உரிய அதிகாரிகளை தெளிவுபடுத்தியுள்ள நிலையில் கிழக்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கபில ஜயசேகர, மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வெதசிங்க ஆகியோரின் நேரடி மேற்பார்வையில்  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்  சமந்த டி விஜேசேகரவின் நேரடி கட்டுப்பாட்டில் விசாரணைகள் இடம்பெறுகின்றன.

 நேற்று மாலைவரை இடம்பெற்ற விசாரணைகளில் 30 க்கும் மேற்பட்ட முக்கிய வாக்கு மூலங்களைப் பெற்றுள்ள பொலிஸார்,  பிரதேசத்தின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக தொடர்ந்தும் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினருடன் இணைந்து செயற்படுவதாக  பிரதேசத்தின் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

 அத்துடன் தாக்குதலுக்கு உள்ளான பள்ளிவாசல் நேற்று மீளவும் தொழுகை நடவடிக்கைகளுக்காக திறக்கப்பட்டதுடன் பள்ளிவாசலின் பாதுகாப்புக்கு பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்த  வன்முறை சம்பவங்களின் பின்னனியில் இருந்து செயற்பட்டோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து சட்ட மா அதிபரின் ஆலோசனைகளையும் பெற உத்தேசிக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணைகள் தொடர்கின்றன.

1 comment:

  1. Mmmm,, they will start.. but it is the same police....

    ReplyDelete

Powered by Blogger.