Header Ads



'அறிவுகளில் சிறந்தது, சந்தர்ப்பை உணர்ந்து செயற்படும் அறிவாகும்' - நபி மொழி

இன்று எமது நாட்டில் இடம்பெற்று வருகின்ற அசாதாரண சூழ்நிலைகளின் போது அடிப்படை சந்தர்ப்ப அறிவு கூட இல்லாமல் எம்மவர்கள் சிலர் நடந்து கொள்வது கவலையைத் தருகிறது.

அந்த வகையில் இது வரை காலமும் இந்நாட்டில் நாம் நம்பி, வளர்த்து விட்ட ஊடகங்கள் அனைத்தும் எம்மை கைவிட்டிருக்கின்றன. எமது செய்திகளை ஒளிபரப்ப அஞ்சுகிறார்கள். இந்நிலையில் சமூக வலைத்தளங்களே இன்று செய்திப்பரிமாற்றத்தில் பாரிய பங்களிப்பை செய்து வருகின்றன. இவ்வாறு வட்சப், பேஸ்புக் மற்றும் இணையதளங்கள் மூலம் செய்திகளை பரப்புகின்ற போதும், ஒலி வடிவங்களை அனுப்புகின்ற போதும் மிகக் கவனமாக செயற்பட வேண்டிய தார்மீகப் பொறுப்பு எம்மனைவர் மீதும் உள்ளது. 

நாம் பகிர்கின்ற ஒவ்வொரு செய்தியும் உண்மையாக இருக்கிறதா?  என்று சரி பார்க்கிற அதேநேரம் அது எந்த காலத்துக்குரியது? என்றும் பார்த்துவிட்டே பதிவிட வேண்டும். இன்று செய்திகளை அவசரமாக பகிர்ந்து கொள்வதன் மூலம் 'எனக்குத்தான் முதலில் செய்தி தெரிய வந்தது' என்று அடுத்தவர்களுக்கு காட்டுவதற்காக செய்திகளை கேள்விப்பட்ட மாத்திரத்திலே அப்படியே பகிர்ந்து விடுகிறோம். இங்கே எந்தவொரு செய்தியும் தவறி விடக்கூடாது என்ற நல்லெண்ணம் எம்மில் சிலரிடம் இருந்தாலும் எம்மை அறியாமல் பிழையான செய்தி ஒன்று பகிரப்படுமானால் எமது நோக்கமே பிழையாகிவிடும்.

அதே போல் இரண்டு நாட்களுக்கு முன்னர் 'தற்போது' என்று வெளியான செய்தி ஒன்றை நாம் இப்போது பகிர்வதன் மூலம் பழைய சம்பவம் ஒன்றுக்காக மீண்டும் நாமும் கலவரமடைந்து அடுத்தவர்களையும் கலவரமடையச் செய்கிறோம்.

இங்கே நாம் பெற்றுக்கொள்கின்ற செய்திகளது உண்மைத்ன்மையை ஆராயாது அனைத்தையும் அப்படியே பரப்பி விடுகின்றவர்களை பார்க்கின்ற போது நபி மொழி ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது அதாவது...
'தான் கேள்விப்படுகின்ற அனைத்தையும் அடுத்தவர்களுக்கு பரப்புகிற ஒருவனது இச்செயற்பாடே அவன் பொய்யன் என்பதற்கு போதுமானதாகும்' 

எனவே, சமூக வலைத்தளங்களை கையாள்கிற நாம் மிகவும் நிதானமாகவும் பொறுப்புணர்வுடனும் செயற்பட வேண்டும். ஆயிரம் உண்மையான செய்திகள் பகிரப்படாமல் போனாலும் ஒரு பொய்யான செய்தி கூட பகிரப்படக்கூடாது என்பதில் அனைவரும் உறுதியாக இருக்க வேண்டும்.

வல்ல இறைவன் நம் அனைவரையும் நேரான பாதையில் பயணிக்க செய்வானாக! நம் அனைவரதும் உயிர், உடமை, மானம் என்பவற்றை பாதுக்காப்பானாக!!

-Hisham Awm-

No comments

Powered by Blogger.