Header Ads



இனவெறியர்களினால் தாக்கப்பட்ட பள்ளிவாசலை, இடித்துவிடத் திட்டம் - மௌலவி முர்ஷித்.


-முரளீதரன் காசி விஸ்வநாதன்-

கண்டி கலவரங்கள் நடந்து ஒரு வாரம் கழிந்துவிட்ட நிலையில், தங்கள் வாழ்வை மீட்டெடுக்கும் நடவடிக்கையில் இஸ்லாமியர்கள் ஈடுட்டுள்ளனர். ஆனால், இதுபோன்ற கலவரங்கள் தொடரக்கூடுமோ என்ற அச்சமும் அவர்களிடம் காணப்படுகிறது. இந்தக் கலவரம் எப்படித் துவங்கியது, பின்னணி என்ன?

கண்டியின் பலகெல்ல பகுதியிலும் தெல்தனிய பகுதியிலும் எரிக்கப்பட்ட தங்கள் கடைகளைச் சரிசெய்யும் பணிகளை இஸ்லாமியர்கள் துவங்கியுள்ளனர். முதற்கட்டமாக அரசாங்கம் ஒரு லட்ச ரூபாய் தருவதாகவும் பிறகு, இழப்பீட்டை மதிப்பீடு செய்து பிறகு உரிய நிவாரண உதவிகளைச் செய்வதாகவும் அறிவித்திருக்கிறது.

"இதெல்லாம் எந்த மூலைக்கு? சாதாரணமாக சுத்தப்படுத்தும் வேலைக்கே, இந்த ரூபாய் போதாது. என் கடையில் மட்டும் சுமார் ஒரு கோடியே 75 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்திருக்கின்றன. அதை அரசு தருமா?" என்கிறார் தன் பலசரக்குக் கடையை இழந்த முகமது யூசுஃப்.

பல்லேகல்லவில் உள்ள லாஃபிர் ஜும்மா மசூதி முழுமையாகச் சேதமடைந்திருக்கிறது. இங்குள்ள பொருட்கள் முழுமையாக எரிக்கப்பட்டுவிட்டன. "இனிமேல், இங்கு தொழுகை நடத்த முடியாது. அதனால், பக்கத்தில் உள்ள ஒரு இடத்தைச் சீரமைத்து, அதில் தொழுகை நடத்துவோம். விரைவிலேயே பழைய பள்ளிவாசலை இடித்துவிட்டு புதிய பள்ளிவாசலைக் கட்டத் திட்டமிட்டிருக்கிறோம்" என்கிறார் மௌலவி முர்ஷித்.

இந்தக் கலவரத்தில் வீடுகளை இழந்தவர்களின் நிலைதான் மிக மோசம். எங்காவது சொந்தக்காரர்களின் வீடுகளில் தஞ்சமடைய வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். முகமது தயூப் போன்ற பலருக்கு கடையைச் சுத்தம்செய்யக்கூட கையில் பணம் இல்லை.

இதைவிட மோசம், இந்தப் பகுதியில் உள்ள அனைவருமே காவல்துறையின் மீதும் அரசு அமைப்பின் மீதும் முழுமையாக நம்பிக்கை இழந்திருப்பதுதான். "கலவரத்திற்கு முன்பாக நான்கைந்து காவலர்கள் இங்கே நின்றார்கள். கலவரம் துவங்கியதும் அவர்கள் நகர்ந்துவிட்டார்கள். புகார் கொடுத்தாலும் ஏற்கவில்லை. பிறகு இரண்டு, மூன்று நாட்கள் கழித்துத்தான் வந்து விசாரித்தார்கள். இந்த நிலையில், இந்த காவல்துறையை எப்படி நம்புவது?" என்கிறார் இந்தப் பகுதியைச் சேர்ந்த ரஹீம்.

2 comments:

  1. aaan idikka.idu oru ninaivu sinnam.padippinai.appidiye idikaml.punar nirmanm seiga

    ReplyDelete
  2. நீங்கள் எல்லாம் உங்கள் பிள்ளைகளை வியாபாரத்திலும், வெளிநாட்டுக்கு அனுப்புவதிலும்தான் கவனம் காட்டுகிண்றீர்கள். இனிமேலாவது எமது இளைஞர்களை போலீஸ் இல் சேர்த்து உயர் அதிராகரிகளை உருவாக்கி எமது சமூகத்தின் பாதுகாப்பை உறுதி படுத்துவோம்.

    ReplyDelete

Powered by Blogger.