Header Ads



அம்பாரை சம்பவமும், அது சொல்லும் பாடங்களும்..!!

-Sharthaar Mjm-

மலட்டுத்தன்மை! இது தான் சிங்களவர்கள் சொல்லும்/ குற்றம் சாட்டும் "வந்தபாவய" எனும் சொல்லுக்கு நேரடியான தமிழ் சொல்லாக எனக்கு தெரிகிறது. இதை விட நல்ல சொற்கள் இருந்தால் யாராவது கூறுங்கள். மலட்டுத்தனத்தை ஏற்படுத்தும் மாத்திரைகளை கலந்து கொடுத்தார்கள் என்பதே சமீபத்திய அம்பாரை கலவரத்தின் ஆணி வேராக இருந்தது.

இந்த "மலட்டுதனத்தை" இஸ்லாமியர்கள் அரேபிய நாடுகளின் உதவியோடு சிங்கள மக்கள் மத்தியில் ரகசியமாக பரப்பி, அவர்களது இனப்பெருக்க வீதத்தை குறைக்கும் ஒரு நீண்ட கால திட்டத்தில் இருப்பதாகவே சிங்கள "மத" வாத சக்திகள் நீண்டகாலமாக குற்றம் சாட்டி வருகின்றன. இது ஒரு ஆதாரபூர்வமற்ற அபாண்டம் என்பதை இக்குற்றச்சாட்டை வைப்பவர்களும் அறியாதவர்கள் அல்லர். ஆனால் அவ்வாரான ஒரு குற்றச்சாட்டை வைத்து இஸ்லாமியர்களை ஒரு நெருக்கடிக்குள் வைத்திருக்க வேண்டிய அரசியல் மற்றும் சமூக காரணிகள் அவர்களை இவ்வாறு தூண்டுகிறது.

யுத்தம் நிறைவடைந்தவுடன் ஒரு சனத்தொகை கணகெடுப்பு எடுக்கப்பட்டது. 2010/2011 ஆக இருக்கலாம். ஆனால் அந்த கணக்கெடுப்பின் முடிவுகள் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை. அதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், அதில் இஸ்லாமியர்களது சன்னத்தொகை பரம்பல் ஆட்ச்சியாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் இருந்தது என்றும், அதுவே அதை வெளியிட விடாமல் மேலிடம் அப்படியே அதை அடக்கி வாசித்தது என்று கூறப்படுகிறது. சமீபத்தில் வெளியான சனத்தொகை மதிப்பீட்டின் போதும் வெளியிடப்பட்ட தகவல்கள் அச்சொட்டானவை அல்ல என சில இஸ்லாமிய அரசியல் வாதிகள் கூறிக்கொண்டு இருக்கின்றார்கள்.

30 வருட கால யுத்தம், மற்றும் அவர்களது பழக்க வழக்கங்கள், கலாச்சாரம், புலம்பெயர்தல் போன்ற காரணிகள தமிழர்களதும் சிங்களவர்களதும் சனத்தொகையில் பாரிய தாக்கம் செலுத்தியிருந்த போதும், இஸ்லாமியர்களை அது வெகுவாக பாதித்து இருக்கவில்லை. தவிரவும் இஸ்லமியர்களது மத சட்டப்படி கருக்கலைப்பு செய்வதென்பது விலக்கப்பட்ட ஒன்றாகும். முறையான குடும்ப கட்டுப்பாட்டுக்கான சட்டங்கள் இஸ்லாத்தில் இருந்த போதும் அது பாரம்பரிய இஸ்லாமியர்களிடையே சரியாக சென்றடையவில்லை. இக்காரணிகளாவன இஸ்லாமியர்களது சனத்தொகை வளர்ச்சி வீதத்தை எப்போதும் ஏறு முகமாகவே வைத்திருந்தது. ஆனால் ஏனைய இனங்களின் வளர்ச்சி விகிதம் இஸ்லாமியர்களோடு ஒப்பிடுகையில் மிக மிக குறைவானதாகவே காணப்பட்டது. இந்த நிலை தொடர்ந்தால் இன்னும் இருபது முப்பது வருடங்க்ளில் இஸ்லாமியர்கள் ஆட்சியமைக்கும் அளவுக்கு வளர்ந்து விடுவார்கள் என்ற ஒரு ஆதாரபூர்வமற்ற, அல்லது நடைமுறை சாத்தியமற்ற விடயத்தை "மத"வாதிகள் உண்மையென நம்பிக்கொண்டு காய் நகர்த்துவதும், இந்த நம்பிக்கையை விதைப்பதன் மூலம் தாம் ஆட்சியில் இருக்கலாம் என்ற கணக்குகளுமே இவ்வாரான விவகாரங்கள் தொடர்கதையாகின்றன.
இதுவே அரச மட்டத்தில், இஸ்லாமியர்களை கட்டுப்படுத்தும் ஒரு உயர் மட்ட திட்டத்தை தீட்டுவதற்கு வழி வகுத்தது. அதற்கு முதலில் அவர்கள் கையில் எடுத்த ஆயுதம் சமகால "ட்ரெண்டுக்கு" அமைய இஸ்லாமிய பயங்கரவாதம். அதன் பின்னர் 2011களில் இஸ்லாமிய தீவிரவாதிகள் நாட்டில் ஊடுருவி இருக்கின்றார்கள், அவர்கள் கிழக்கில் பயிற்சி முகாம்களை நடத்தி வருகின்றார்கள் என்று அப்போதைய பாதுகாப்பு செயலாளர் வெளிப்படையாகவே இஸ்லாமியர்களை குற்றம் சாட்டியதும், அதை இஸ்லாமிய கட்சி தலைவர்கள் மறுத்ததும், பின்னர் நாட்டில் அரச ஆதரவுடன் பொதுபல சேனா செயலில் இறங்கியதும், அரசு அதற்கு பின்னணியில் நின்றதும் கடந்த காலங்களில் அரங்கேறிய நாடகக்காட்சிகள், அந்த காட்சிகளின் நீட்சியே இப்போது அம்பாரை வரை நீண்டுள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் இவர்களது மீளெழுச்சிக்கு மற்றும் ஒரு உந்து சக்தியாக காணப்படுகிறது. அத்தோடு இஸ்லாமியர்களால் பொதுவாக நம்பப்படும் ஐ.தே.க கட்சியை இக்கட்டில் மாட்டி விடுவதற்கும் இவ்வாரான கலவரங்கள் கை கொடுக்க கூடியவை. அம்பாரையில் நிகழ்வுகள் நடந்தேரிய உடனேயே சட்ட ஒழுங்கு அமைச்சரான ரனில் விக்கிரம சிங்கே இந்திகழ்வுக்கு பொறுப்பேற்க வேண்டுமென்று அவரது பங்காளிக்கட்சிகளே குரல் எழுப்பியமை இந்த தாக்குதலின் பின்னணியில் செயல்பட்டவர்களுக்கு வெற்றியையே கொடுத்திருக்கும். அவர்களின் முகங்களில் ஒரு மகிழ்ச்சி மொட்டு மலர்ந்திருக்கும்.

இது இனி வருங்காலங்களில் ஒரு தொடர்கதையாகலாம், நல்லாட்சியும் ஒன்று கடந்த கால ஆட்சியும் ஒன்று என்ற எண்ணக்கருவை விதைப்பதன் மூலம் சிறந்த அறுவடை யாருக்கு கிடைக்கும் என்பதையும், சமீபத்தில் இஸ்லாமியர்களது வாக்குகளை யார் அறுவடை செய்து கொண்டிருக்கின்றார்கள் என்பதையும், சமீப காலங்களில் இஸ்லாமிய மற்றும் தமிழ் கட்சிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள பிளவுகளையும் வெளிப்படையாக நோக்கினாலேயே இந்த பிரச்சனைகளுக்கான அடிப்படை காரணங்களை யாரும் இலகுவாக புரிந்து கொள்ளலாம்.

இது கள யதார்த்தமாக இருந்த போதும் இதற்கான தீர்வை தேடுவதுதான் இடியப்ப சிக்கலாக இருக்கின்றது. இஸ்லாமியர்கள் எவ்வளவுதான் ஐ தே கவை நம்பினாலும் அது இஸ்லாமியர்களுக்கு கடந்த காலங்களில் பல துரோகங்களை வெளிப்படையாகவே செய்துள்ளது. ஆனால் ஆளும் கட்சியிலேயே இருந்து பழகிய "இஸ்லாமி"யர்களுக்காக குரல் கொடுக்கின்றோம் என்று சொல்லி கொள்ளும் கட்சிகளுக்கு வேறு போக்கிடமில்லாமல் அவர்கள் ஆளும் தரப்போடு ஒட்டிக்கொண்டிருக்க வேண்டிய நிலமைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

இதற்கு அரசியல் வாதிகளை மட்டும் குற்றம் சொல்லி பலனில்லை, எங்கள் பகுதிக்கு கெபினட் அமைச்சர் வேண்டும், எங்கள் தொகுதிக்கு பாராளுமன்ற உறுப்பினர் வேண்டும், ரோடு வேண்டும், அரச வேலை வேண்டும என்று சலுகைகளுக்காக ஓட்டுப்போடும் மக்கள் இருக்கும் போது அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் தலைமைகள் தான் வேறு என்ன செய்யும்? சமீபத்தில் அரசியல் இஸ்திரமின்மை ஏற்பட்டிருந்த போது த தே கூ ஆட்சியில் பங்காளியாகி அமைச்சு பொறுப்புக்களை எடுத்திருந்தாலே போதுமானது, ஆனால் அவர்களுக்கு ஓட்டு போடும் மக்கள் தேர்தலில் அவர்களுக்கு சொன்ன பாடத்துக்கு அமைய பிச்சை வேண்டாம் நாயை பிடி என்பது போல நாம் எதிர்கட்சியிலேயே இருப்போம் என்று அவர்கள் கூறியமையே மீண்டும் கூட்டு "நல்லாட்சி"க்கு ஐ தே க போக வேண்டி ஏற்பட்டது.

எனவே இவ்வாரான காலகட்டங்களில் அரசியல் வாதிகளை குற்றம் சொல்வதை போலவே அவர்களுக்கு வாக்களிக்கும் மக்களும் அந்த குற்றச்சாட்டில் பங்கேற்க வேண்டும். சமூகத்தில் உள்ள அரசியல் நோக்கற்ற பெரியவர்கள், படித்தவர்கள், மற்றும் அனுபவமுள்க்ளவர்கள் நடை முறை சிக்கல்களை கருத்தில் கொண்டு ஒரு சீறிய கொள்கை அமைத்து அதன் பால் மக்களையும் அரசியல்வாதிகளையும் வழி நடத்தினாலேயன்றி மாளிகாவத்தை, அளுத்கமை, ஜிந்தொட்ட, அம்பாரை போன்ற விடயங்கள் தொடர்கதையாகவே இருக்கும். ஆட்சி மாறினால் நடப்பை விட உக்கிரமானதாகவே அது இருக்கும். 

No comments

Powered by Blogger.