Header Ads



இலங்கையில் 95 கோடி ரூபாவை வைப்புச்செய்த சீனர்கள் - விசாரணை ஆரம்பம்

மூன்று சீன இனத்தவர்கள் இலங்கையில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் இருக்கும் தமது வங்கிக் கணக்கில் சந்தேகத்திற்கிடமான வகையில் 95 கோடி ரூபாவுக்கும் மேல் வைப்புச் செய்துள்ளதாக பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம், தொடர்பில் விசாரணைகளை நடத்தி முன்னேற்றத்தை அறிய தருமாறு நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டுள்ளார்.

டெயங் சேங்க் என்பவர் 36 கோடி ரூபாவுக்கும் மேல் வைப்புச் செய்துள்ளதுடன், பிங்க் சேங்க் என்பவர் 20 கோடி ரூபாவுக்கும் மேல் வைப்புச் செய்துள்ளார்.

அத்துடன் வேன் லியூ என்பவர் 39 கோடி ரூபாவுக்கும் மேல் வைப்புச் செய்துள்ளதாக பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் நடத்திய விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வங்கியில் கணக்கை வைத்துள்ள சீனப் பிரஜைகளில் ஒருவர் சிகையலங்கார நிபுணராக தொழில் புரிந்து வருகிறார்.

ஏனைய இருவர் மொழிப்பெயர்ப்பாளராகவும், நிறுவனம் ஒன்றின் பணிப்பாளராகவும் தொழில் புரிந்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த தனியார் வங்கியின் உதவி முகாமையாளர் மிலிந்த பண்டார தசநாயக்க என்பவர் கடந்த ஜனவரி 3 ஆம் திகதி தனிப்பட்ட வங்கி கணக்கு பிரிவை ஆரம்பித்துள்ளதாக கடந்த 9 ஆம் திகத பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.

சீன நிறுவனம் ஒன்றில் பணிப்பாளராக பணியாற்றும் லியூ ஜின் என்பவர் வேன்டி லியூ என்பவரை வங்கிக்கு அறிமுகப்படுத்தியதாகவும் இந்த நபர் மேலும் இரண்டு சீனப் பிரஜைகளை அறிமுகப்படுத்தியதாகவும் வங்கியின் முகாமையாளர் கூறியுள்ளார்.

இந்த நபர்கள் எப்படி இந்தளவு தொகை பணத்தை வைப்புச் செய்கின்றனர் எனக் கேட்டபோது மாணிக்க கல் வர்த்தகர் ஒருவரிடம் இருந்து பணம் கிடைத்ததாக அவர்கள் வங்கியிடம் கூறியுள்ளனர்.

சீனப் பிரஜைகளின் இந்த வங்கி கணக்கு குறித்து இலங்கை மத்திய வங்கியின் நிதிப் புலனாய்வுப் பிரிவின் பதில் பணிப்பாளர், பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளதுடன் அதற்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

No comments

Powered by Blogger.