Header Ads



இதுவரை 71 பேர் கைது - வருடாந்தர கிரிக்கட் போட்டிகள் ரத்து

கண்டியில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவருடன் மேலும் 9 பேர் கைதாகி இருப்பதாக காவற்துறை ஊடகப்பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

அத்துடன், இன்று காலை 6 மணி வரையிலான காலப்பகுதிக்குள் வீடுகள், வணக்கஸ்தலங்கள் ஆகியவற்றிட்கு சேதம் விளைவித்தமை தொடர்பில் 71 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், கண்டி நிர்வாக மாவட்டத்தில் இன்று மாலை 6 மணி முதல், நாளை காலை 6 மணி வரையான காலப்பகுதியில் மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்பட்டுள்ளது.

கண்டி மாவட்டத்தின் அமைதியை தொடர்ந்தும் பேணும் முகமாகவே இந்த ஊரடங்கு சட்டம் மீண்டும் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க இன்று கண்டிக்கு விஜயம் செய்தார்.

கண்டி மாவட்டத்தில் பல பிரதேசங்களில் ஏற்பட்டிருந்த நிலமைகள் தொடர்பில் இராணுவ தளபதியின் தலைமையில் இன்று முற்பகல் கலந்துரையாடல் இடம்பெற்றது.

அந்த கலந்துரையாடலில் பாதுகாப்பு பிரதானிகள் மற்றும் பிரதேசத்தின் சமய தலைவர்கள் ஆகியோர் பங்குகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, பிரதேசத்தில் அமைதியான சூழலை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதன் பொருட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது.

ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் வெளிநாட்டு சுற்றுப்பயணிகள் தமது கடவுச் சீட்டை அனுமதி பத்திரமாக பயன்படுத்தி பயணிக்க முடியும் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதனிடையே, கண்டி மாவட்டத்திற்குட்பட்ட பிரதான பாடசாலைகளில் இடம்பெறவிருந்த வருடாந்தர கிரிக்கட் போட்டிகள் பிற்போடப்பட்டுள்ளன.

சில்வெஸ்டர் – வித்தியாரத்ன, கிங்ஸ்வுட் - தர்மராஜா ஆகிய பாடசாலைகளின் வருடாந்தர கிரிக்கட் போட்டிகள் பிற்போடப்பட்டுள்ளன.

முன்னதாக புனித அந்தோனியார் மற்றும் திரித்துவ கல்லூரிகளுக்கிடையேயான கிரிக்கட் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, குருநாகல் புனித எனா மற்றும் மளியதேவ வித்தியாலங்களுக்கிடையே நாளை இடம்பெறவிருந்த வருடாந்தர கிரிக்கட் போட்டி திகதி அறிவிப்பின்றி பிற்போடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.