Header Ads



முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையும், 6 சந்தேகங்களும்..


-By Isbahan Sharfdeen-

பெப்ரவரி 25 இரவு அம்பாறை நகரில் தொடங்கிய இனவாத ஊழித் தாண்டவம் கண்டி திகன பிரதேசத்திற்குத் தாவி நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவியதால் முஸ்லிம் சமூகம் சில நாட்கள் அச்சத்தில் உறைந்து போனது. இனவாதிகளின் தாக்குதல் அம்பாறை, திகன, தெல்தெனிய, தென்னக்கும்புர, மெனிக் ஹின்ன, எலுகொட, பெனிதெனிய, ஹேன்தெனிய, கடுகஸ்தொட, அக்குரணை, அம்பதென்ன, வத்தேகம, மடவளை, குறுந்துகொல்ல… என கண்டி மாவட்டத்தின் பல பிரதேசங்களுக்கும் குளியாப்பிடிய, மெல்சிறிபுர, தம்பதெனிய ஹாலியெல, ஆனமடுவ போன்ற குருநாகல் மாவட்ட பிரதேசங்களுக்கும், தர்காநகர், பூகொட போன்றவற்றுக்கும் பரவியது.

திட்டமிட்ட வகையில் 465 அழிவுத் தாக்குதல்கள் நடாத்தப்பட்டுள்ளன. கடைகள், வீடுகள், பள்ளிவாயல்கள், மத்ரஸாக்கள், அஹதிய்யா கட்டடங்கள் என்று வன்முறையாளர்களால் முஸ்லிம்களின் சொத்துக்கள் துவம்சம் செய்யப்பட்டுள்ளன. அவற்றுள் 87 முழுமையாகவும் 196 பகுதியாகவும், 182 சிறியளவிலும் சேதமாக்கப்பட்டுள்ளன என அறிக்கைகள் கூறுகின்றன.

அரசியல்வாதிகளும் அரசாங்கத்திலுள்ளோரும் பெரும்பான்மை மதத் தலைவர்களும் முன்வைக்கும் பரஸ்பரக் குற்றச்சாட்டுகள், குற்றவாளிகள் மீதான கவனஈர்ப்புக்களை நோக்கும்போது நடந்து முடிந்து, புகைந்துகொண்டிருக்கும் பேரினவாதிகளின் வெறுப்புக் குற்றங்கள் (Hate Crime) குறித்த சில சந்தேகத்திற்குரிய கேள்விகள் பலமாக எழுகின்றன.

சந்தேகத்திற்குரிய கேள்விகள்

குற்றவாளிகளை இதற்குப் பின்னரே கண்டுபிடிக்கப் போவதாக அரசாங்கம் கூறுகின்றது. அவ்வாறாயின்,

இலங்கையில் கடந்த 6 ஆண்டுகளாக இனவெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்களையும் தர்காநகர், கிந்தோட்டை கலவரத்திற்குக் காரணமானவர்களையும் அரசாங்கம் இதுவரை கண்டுபிடிக்கவில்லையா?

30 வருட கால போரை முடிவுக்குக் கொண்டு வந்த குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு இனக்கலவரம் ஒன்று நடைபெறப் போகின்றது என்ற தகவல் முற்கூட்டியே கிடைக்கவில்லையா?

பல அமைச்சர்களின் கருத்துப்படி அவ்வாறு கிடைத்தும் அரசாங்கம் முற்கூட்டியே தடுக்கும் நடவடிக்கையிலிருந்து விலகிச் சென்றதேன்?

பெரும்பாலான அசம்பாவிதங்கள் பொலிஸார் மற்றும் இராணுவ பிரசன்னத்திற்கு முன்பாகவே நடந்தேறியுள்ளன. அவற்றைத் தடுப்பதற்கு பாதுகாப்புப் படையினர் தொடக்கத்தில் நடவடிக்கை எடுக்காதது ஏன்?

அம்பாறைச் சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு எதிராக பதிவுசெய்யப்பட்ட குற்றச்சாட்டை வாபஸ் வாங்கிக் கொண்டு வேறொரு சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்து குற்றவாளிகளை பொலிஸார் விடுவித்ததேன்?

பொலிஸாரும் இராணுவமும் யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளனர்?

முப்படைகளின் தலைவராக ஜனாதிபதியும் சட்டம் ஒழுங்கு அமைச்சராக பிரதரும் இருந்த நிலையிலேயே அனைத்து வன்முறைச் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.

இப்படி ஒன்றன் பின் ஒன்றாக சந்தேகத்திற்குரிய கேள்விகள் எழுந்தவண்ணமுள்ளன. வெளியாட்களே இவற்றில் ஈடுபடுகிறார்கள் என பிரதமர் ரணிலும், இதுவொரு அரசியல் சூழ்ச்சியென கபீர் ஹாஷிம் மற்றும் முஜீபர் ரஹ்மான் போன்றவர்களும் கூறுகின்றனர். எதிரணியிலுள்ள இரு அரசியல்வாதிகளே இதற்குக் காரணம் என லக்ஷ்மன் கிரிஎல்லவும், கொழும்பு மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் ஒருவரே இதன் பின்னணியில் உள்ளார் என வாசுதேவ நாணயக்காரவும் கூறியுள்ளனர். இதே கருத்தையே பாராளுமன்றத்தில் உரையாற்றிய விமல் வீரவன்சவும் தெரிவித்துள்ளார்.

ஆட்சியைக் கவிழ்ப்பதற்கும் ஸ்திரமற்ற அரசியல் சூழலை உருவாக்கவுமே இந்த சதித் திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என றவூப் ஹக்கீம் மற்றும் பைஸர் முஸ்தபா போன்ற நல்லாட்சியில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் கூறிவருகின்றனர்.

உரிய நேரத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்கத் தவறியதனாலேயே நிலைமை மோசமடைந்தது என ரணில் தனது சுயதோல்வியை ஏற்றுக் கொண்டுள்ளார். ஆயினும், அரசாங்கம் உண்மைக் குற்றவாளிகளை நாட்டுக்கு வெளிப்படுத்துவதும் அவர்களுக்கு தகுந்த தண்டனையை வழங்குவதும் அவசியமாகும்.

இன வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்ற பலர் இவ் எரியும் தருணத்தில் கொழும்பில் இருந்துகொண்டு ஊடகங்களுக்கு வழங்கும் அறிக்கைகளைப் பார்க்கும்போது விபச்சாரிகள் கற்புச் சட்டம் பேசுவதே நினைவுக்கு வருகின்றது.


No comments

Powered by Blogger.