Header Ads



கடாபியிடம் 50 மில்லியன் யூரோ நிதி பெற்ற, முன்னாள் பிரான்ஸ் ஜனாதிபதி

லிபியா அரசிடம் இருந்து 2007 ஆம் ஆண்டு தேர்தல் நிதி திரட்டிய வழக்கில் விசாரணை வளையத்தில் சிக்கியுள்ளார் முன்னாள் பிரான்ஸ் ஜனாதிபதி நிக்கோலாஸ் சர்க்கோஸி.

2007 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் நிதி திரட்டியது தொடர்பாக 63 வயதான நிக்கோலாஸ் சர்க்கோசியிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2011 ஆம் ஆண்டு ஏற்பட்ட உள்நாட்டு கலவரத்தினிடையே கொல்லப்பட்ட லிபியா தலைவர் முயம்மர் கடாபியிடம் இருந்து சுமார் 50 மில்லியன் யூரோ நிதி திரட்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குறித்த குற்றச்சாட்டுகளை மறுத்து வந்த சர்க்கோஸி, அவை மிகவும் கேவலமான குற்றச்சாட்டு என கூறியிருந்தார்.

கடாபியின் குடும்பத்தார் மீது நடத்தப்படும் கொடூரமான பழிவாங்கும் நடவடிக்கை இது எனவும் சர்க்கோஸி குற்றஞ்சாட்டியிருந்தார்.

தற்போது இந்த விவகாரத்தில் சர்க்கோஸியின் நெருங்கிய முன்னாள் அமைச்சர் Brice Hortefeux என்பவரையும் அதிகாரிகள் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம் இந்த விவகாரத்தில் தொடர்புடைய பிரெஞ்சு தொழிலதிபர் அலெக்சாண்டர் டிஜூரி பிரித்தானிய தலைநகர் லண்டனில் வைத்து கைது செய்யப்பட்டார்.

இந்த முறைகேடு தொடர்பில் கடந்த 2013 ஆம் ஆண்டே விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், தற்போது மட்டுமே முன்னாள் ஜனாதிபதியை அதிகாரிகள் விசாரணை நிமித்தம் கைது செய்துள்ளனர்.

பிரான்சில் 2007 ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற நிக்கோலாஸ் சர்க்கோஸி 2012 ஆம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்தார். 2016 ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிட்ட சர்க்கோஸி, முதற்கட்டத்திலேயே வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.