Header Ads



அலிமுத்தீன் அன்சாரி படுகொலை, 11 பேருக்கு ஆயுள் தண்டனை


ஜார்க்கண்டில் மாட்டிறைச்சி வியாபாரி ஒருவர் கடந்த ஆண்டு அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில், பாஜக பிரமுகர் உள்ளிட்ட 11 பேருக்கு ராம்கர் விரைவு நீதிமன்றம் நேற்று ஆயுள் தண்டனை விதித்தது.

ஜார்க்கண்ட் மாநிலம், ராம்கர் நகரில் கடந்த ஆண்டு ஜூன் 29-ம் தேதி, அலிமுத்தீன் அன்சாரி (40) என்ற மாட்டிறைச்சி வியாபாரி காரில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் அவரது காரில் பசு இறைச்சி இருப்பதாகக் கூறி, உள்ளூர் பசு பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்கள் காரை தடுத்து நிறுத்தினர். அவர்கள் அலிமுத்தீன் அன்சாரியை கடுமையாக தாக்கினர். மேலும் காருக்கும் தீ வைத்தனர். தாக்குதலில் காயமடைந்த அன்சாரி, சிகிச்சை பலனின்றி பின்னர் உயிரிழந்தார். பசு பாதுகாப்பு என்ற பெயரில் மக்களை கொல்வதை ஏற்க முடியாது என பிரதமர் மோடி அறிவித்த அடுத்த சில மணி நேரங்களில் இந்தத் தாக்குதல் நடந்தது.

இதுதொடர்பான வழக்கை விசாரித்த ராம்கர் விரைவு நீதிமன்றம், 11 பேர் குற்றவாளிகள் என கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தது. இந்திய தண்டனை சட்டத்தின் 147 (வன்முறையில் ஈடுபடுதல்), 148 (கொடூர ஆயுதங்க ளால் தாக்குதல்), 149 (சட்ட விரோதமாக கூடுதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் இவர்கள் குற்றவாளிகள் என நீதிபதி ஓம் பிரகாஷ் அறிவித்தார். இந்நிலையில் 11 பேருக்கும் ஆயுள் சிறை தண்டனை விதித்து நேற்று தீர்ப்பு கூறினார்.

அலிமுத்தீன் அன்சாரியின் மரணத்தால் அவரது குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கு உரிய இழப்பீட்டை உறுதி செய்யும் நடவடிக்கைகளை தொடங்க மாவட்ட சட்டப் பணி கள் ஆணையத்துக்கு நீதிபதி உத் தரவிட்டார்.

தண்டிக்கப்பட்ட 11 பேரில் ராம்கர் மாவட்ட பாஜக ஊடகப் பிரிவு பொறுப்பாளர் நித்யானந்த் மகதோவும் ஒருவர். மேலும் 3 பேர் உள்ளூர் பசுப் பாதுகாப்பு அமைப்பின் உறுப்பினர்கள்.

தீர்ப்பு குறித்து கூடுதல் அரசு வழக்கறிஞர் சுஷில் குமார் சுக்லா கூறும்போது, “குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்குமாறு நாங்கள் கோரினோம். என்றாலும் முதல் குற்ற வழக்கு என்பதால் இவர்கள் மீது கருணை காட்டுமாறு அவர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மைனர் இளைஞர் குறித்து நீதிமன்றம் எந்த முடிவும் எடுக்கவில்லை. 16 வயதுக்கு மேற்பட்ட அவரை மேஜராகவே கருத வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம்” என்றார்.

தீர்ப்பு குறித்து அலிமுத்தீன் அன்சாரியின் இளைய மகன் ஷாபான் அன்சாரி கூறும்போது, “இந்த தீர்ப்பு எனது தாய்க்கு திருப்தி அளிக்கிறது. என்றாலும் எங்கள் குடும்பத்துக்கு அரசு எந்த நிவாரணமும் அளிக்கவில்லை. சம்பவத்தின்போது, பல வகையி லும் உதவுவதாக பலர் உறுதி கூறினர். ஆனால் எங்களுக்கு எந்த இழப்பீடும் வழங்கப்படவில்லை” என்றார்.

வட மாநிலங்களில் கடந்த சில ஆண்டுகளில் பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் கொலை வெறித் தாக்குதல் சம்பவங்கள் பரவலாக நடைபெற்றன. இதில் பலர் உயிரிழந்தனர். இது தொடர்பான வழக்குகளில் வழங்கப்பட்ட முதல் தீர்ப்பு இதுவாகும்.

1 comment:

Powered by Blogger.