Header Ads



TNA தோல்விக்கு சுமந்திரனே காரணம் என குற்றச்சாட்டு, இடைநடுவிலும் வெளியேறினார்

உள்ளுராட்சி தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஏற்பட்ட தோல்விக்குக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனே முழுக் காரணம் என நேற்று நடந்த தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் கடுமையான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன எனத் தெரியவந்துள்ளது.

தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், சாள்ஸ் நிர்மலநாதன் உட்படப் பலர் சுமந்திரன் மீது குற்றச்சாட்டுக்களையும் விமர்சனங்களையும் முன்வைத்தனர் எனக் கூறப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலின் பின்னரான பின்னரான நிலைமைகளை ஆராய்வதற்காக இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு நேற்று தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் கொழும்பில் கூடியது.

இதில், கடந்த தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஏற்பட்ட பின்னடைவு தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.

தேர்தல் தோல்விக்கு பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனே முழுக் காரணம் என தமிழரசுக் கட்சியின் எம்.பிக்களான சி.சிறீதரன், சாள்ஸ் நிர்லநாதன் ஆகியோர் குற்றம் சுமத்தினர்.

இதனால் கூட்டத்தில் காரசாரமான வாக்குவாதம் நடந்தது.

தேர்தல் பிரசாரத்தின் போது சுமந்திரன் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்புடன் பிரசாரக் கூட்டங்களில் பங்குபற்றியமை, மாவட்ட ஒருங்கினைப்புக் குழுக் கூட்டங்களில் அரசின் முகவர் போன்று செயற்பட்டமை, முல்லைத்தீவு தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்கு வந்த மக்கள் உடற்பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டமை, காணாமற்போனோர் தொடர்பான விவகாரத்துக்குப் புலிகளும் காரணம் என்று சுமந்திரன் அறிக்கை விட்டமை போன்ற பல காரணங்களை குறிப்பிட்டு இந்த தேர்தல் தோல்விக்கு முக்கிய காரணங்களாக அமைந்தன என்று நேற்றைய கூட்டத்தில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

ஆயினும் இவற்றுக்கு பதில் கூறாமல் பொதுவான விடங்களிற்கு மட்டும் பதில் கூறிவிட்டு கூட்டம் முடிவடைவதற்கு முன்னதாகவே சுமந்திரன் அங்கிருந்து வெளியேறினார் எனத் தெரிவிக்கப்பட்டது.

தேர்தல் பின்னடைவு தொடர்பில் ஆராய்வதற்காக இந்தக்கூட்டத்தில் மாவட்ட ரீதியாக பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டனர்.

இதன்படி வவுனியாவுக்கு மாகாணசபை உறுப்பினர் சத்தியலிங்கமும், மன்னாருக்கு பா.உ சாள்ஸ் நிர்மலநாதனும், முல்லைத்தீவுக்கு பா.உ சாந்தி சிறீஸ்கந்தராசாவும், மட்டக்களப்புக்கு முன்னாள் பா.உ அரியநேந்திரனும், யாழ்ப்பாணத்திற்கு பிரதேச சபை உறுப்பினர் சுகிர்தன், பெ.கனகசபாபதி ஆகியோரும், கிளிநொச்சிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனும் நியமிக்கப்பட்டனர்.

இவர்கள் பின்னடைவு தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை தயாரித்து மத்திய செயற்குழுவிடம் சமர்ப்பிக்கவுள்ளனர்.

இதற்கான ஒருங்கினைப்பாளராகக் கனடாவில் இருந்து வருகை தந்துள்ள தமிழரசுக்கட்சியின் பிரமுகர் குகதாஸன் செயற்படவுள்ளார் எனக் கூறப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.