Header Ads



ஹிஸ்புல்லாவின் கருத்தை கண்டிக்கும் NFGG

NFGG அலுவலக்கதின் மீதான குண்டுத் தாக்குதல் தொடர்பில் விசாரணைகள் எதுவும் முடிவுறாத நிலையில் இதில் தனது ஆதரவாளர்களுக்கு எதுவித தொடர்பில்லையெனவும், இது NFGG க்கு உள்ளிருந்தே திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது எனவும் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்திருக்கிறார். விசமத்தனமான நோக்கத்தோடு விசாரணைகளை திசை திருப்பும் வகையில் அவர் தெரிவித்திருக்கும் இந்த கருத்தை NFGG வன்மையாகக் கண்டிக்கிறது” என NFGG யின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

NFGG வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“நல்லாட்சிக்கான தேசிய முன்னணி(NFGG)யின் ஆதரவாளர் ஒருவரின் வீட்டின் மீது அவரை இலக்கு வைத்து ஒரு குண்டுத் தாக்குதல் கடந்த மாதம் 6 ஆம் திகதி அதிகாலை மேற்கொள்ளப்பட்டிருந்தது. மற்றுமொரு குண்டுத் தாக்குதல் ஒன்று கடந்த 12.02.2018 அதிகாலை நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் காத்தான்குடி பிரதேச தலைமைக்காரியாலயத்தின் மீதும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இதன் போது இரண்டு குண்டுகள் வெடித்துள்ள நிலையிலும் மேலும் சில குண்டுகள் வெடிக்காத நிலையிலும் மீட்கப்பட்டன. நேரம் குறித்து வெடிக்க வைக்கப்படும் வையில் வைக்கப்பட்டிருந்த இக்குண்டுத் தாக்குதல் மிக நுட்பமான முறையில் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இத்தாக்குதலை நடத்தியவர்கள் யார் என்பது தொடர்பில் பொலிஸார் தற்போது விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர். 

இதற்கிடையில் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் இந்த விசாரணைகளை திசை திருப்பும் வகையில் ஒரு ஊடக அறிக்கையினை வெளியிட்டுள்ளார். அதாவது, ‘கடந்த மாதம் 6ஆம் திகதி இடம் பெற்ற குண்டு தாக்குதலில் அக்குண்டு வெளியிலிருந்து வீசப்படவில்லை யெனவும் உள்ளேயிருந்தே அது வேண்டுமென்றே வைக்கப்பட்டதாகவும் விசாரணைகளிலிருந்து தெரிய வந்ததாக’ அவர் தெரிவித்திருக்கிறார்.

அத்தோடு, ‘அதே வகையில் கடந்த 12 ஆம் திகதி  நடந்துள்ள   குண்டுத்தாக்குதலும் தன்மீது பழி சுமத்துவதற்காக அல்லது வேறு பிரச்சினைகளை உண்டு பண்ணுவதற்காக அவர்களுக்குள்ளாலேயே திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது’ என சந்தேகிப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். பொலிஸாரின் விசாரணைகளையே இவர் மேற்கோள்காட்டியிருந்ததனால் இது தொடர்பான விளக்கத்தை காத்தான்குடி போலிஸாரிடம் நாம் கோரினோம். தமது விசாரணைகளில் அவ்வாறான எதுவும் தெரிய வரவில்லை எனவும் இன்னமும் தாம் விசாரணைகளை தொடர்வதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதிலிருந்து இராஜாங்க அமைச்சர் தெரிவித்திருக்கும் கருத்து அப்பட்டமான மற்றுமொரு பொய் எனத் தெரிய வருகிறது.

மேலும், NFGG யினையும் அதன் உறுப்பினர்களையும் இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் தாக்குதல்களே இவை என்பது தெட்டத் தெளிவானதாகும். மேலும், இது NFGG யை பழிவாங்கும் நோக்கம் கொண்டவர்களால் அல்லது அவ்வாறானவர்களால் தூண்டப்பட்டவர்களினாலேயேமேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதும் தெளிவான ஒரு உண்மையாகும்.

இந்நிலையில் விஷமத்தனமான நோக்கத்தோடும் விசாரணைகளை திசை திருப்பும் வகையிலும் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்திருக்கும் இந்தக் கருத்தை NFGG வன்மையாகக் கண்டிக்கிறது. மேலும், இந்த வன்முறைகளோடு தொடர்புபட்ட உண்மையான குற்றவாளிகளை மறைத்து , அதனோடு NFGG ‘கோர்த்து’ விடுவதற்கான மறைமுகமான சில சதிகளை அவர் செய்ய தொடங்கியிருக்கிறாரா என்ற சந்தேகமும் தற்போது எழுகின்றது.

காத்தான்குடியை பொறுத்தளவில் தேர்தல் கால வன்முறைகளில் பெரும் பாலானவை ஹிஸ்புல்லாஹ்வை எதிர்த்து தேர்தல் கேட்பவர்கள் மீதே மேற்கொள்ளப்படடிருக்கின்றன என்பதே வரலாறாகும். மேலும், ஹிஸ்புல்லாவுக்கு எதிரான அரசியலில் ஈடுபடுகின்றவர்கள் மீதான கொலை முயற்சி சம்பவங்கள், தீவைப்பு சம்பவங்கள், அவர்களின் வீடுகள் மீதான துப்பாக்கி சூட்டுச் சம்பவங்கள் போன்ற பராதூரமான வன்முறைகளோடு ஹிஸ்புல்லாஹ் தரப்புக்கு தொடர்பிருந்திருக்கிறது என்பது யாவரும் அறிந்த விடயமாகும் என்பது இங்கு நினைவூட்டத்தக்கது

இந்த வரலாற்றுத் தொடரிலேயே NFGG யின் மீது இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன என்பது கவனிக்கப்பட்ட வேண்டிய ஒன்றாகும். 

இந்நிலையில் விசாரணைகள் நிறைவு பெறுவதற்கு முன்பாகவே தனது ஆதரவாளர்களுக்கு இதில் எவ்வித தொடர்பும் இல்லையென அவர் தெரிவித்திருப்பது நம்பக்கூடியதாக இல்லை.

பொலிஸாரின் விசாரணைகளை மேற்கோள் காட்டி பொய்யான அறிக்கைகளை அவசர அவசரமாக வெளியிடுவதற்கு ஏன் அவர் முயற்சிக்கிறார் என்பது பெரும் சந்தேகத்தை உருவாக்கியிருக்கிறது. மட்டுமின்றி தனது மனச்சாட்சியை உறுத்துகின்ற ஏதோ ஒரு உண்மை வெளிவந்து விடுமோ என அச்சம் கொண்டுள்ளதன் காரணமாகவே இவ்வாறு விசாரணைகளை திசை திருப்பும் அறிக்கைகளை அவர் வெளியிடுகிறாரா எனவும் சந்தேகிக்க வைக்கிறது.

எனவே, நீதியான விசாரணைகளை திசை திருப்பும் விஷமத்தனமான கருத்துக்களை பரப்புவதை நிறுத்திக் கொள்ளுமாறு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாவிடம் NFGG கேட்டுக் கொள்கிறது. அத்தோடு, சட்டத்தையும் ஒழுங்கையும் எப்போதும் மதித்து நடக்கின்ற கட்சி என்கின்ற வகையில் பொலிஸார் விசாரணைகளை துரிதப்படுத்தி குற்றவாளிகளைக் கண்டு பிடித்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் எனவும் மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது”

No comments

Powered by Blogger.