Header Ads



சுவிஸில் ஐஸ் கிரிக்கெட் - அப்ரிடி அணியிடம் வீழ்ந்த சேவாக் அணி (இலங்கை வீரர்களும் பங்கேற்பு)

உலகின் முன்னணி நட்சத்திர வீரர்கள் பங்கேற்கும் ஐஸ் கிரிக்கெட் போட்டியில் அப்ரிடி தலைமையிலான ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது. 

சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் பனிமலைத் தொடரில் அமைந்துள்ள அழகான பகுதி செயின்ட் மோரிட்ஸ் ரிசார்ட். கடல் மட்டத்தில் இருந்து 5910 அடி உயரத்தில் உள்ள இப்பகுதியில் வித்தியாசமான முயற்சியாக பனிக்கட்டி மைதானத்தில் கிரிக்கெட் போட்டி நடத்த திட்டமிடப்பட்டது. இதற்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும் (ஐசிசி) அனுமதி அளித்துள்ளது. அதன்படி இன்று நடைபெற்ற டி20 போட்டியில், சேவாக் தலைமையிலான டைமண்ட்ஸ் அணி, சாகித் அப்ரிடி தலைமையிலான ராயல்ஸ் அணியை எதிர்கொண்டது..

ராயல்ஸ் அணியில் ஸ்மித், மேட் பிரையர், கல்லிஸ், ஒவாயிஸ் ஷா, சாகித் அப்ரிடி (கேப்டன்), கிராண்ட் எலியட், அப்துல் ரசாக், டேனியல் வெட்டோரி, நாதன் மெக்கல்லம், சோயிப் அக்தர், ஏ.சி. ஆண்ட்ரூஸ் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம்பெற்றிருந்தனர்.

டைமண்ட்ஸ் அணியில் சேவாக் (கேப்டன்), ஆண்ட்ரூ சைமண்ட்ஸ், ஜாகீர் கான், அஜித் அகர்கர், ஜெயவர்தனே, தில்சன், மலிங்கா, மைக்கேல் ஹசி, முகமது கயிப், ரமேஷ் பொவார், ஜொகிந்தர் சர்மா உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம்பெற்றிருந்தனர்.

இதில் முதலில் டைமண்ட்ஸ் அணி பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான சேவாக் அதிரடியாக விளையாடினார். அவர் சந்தித்த முதல் பந்திலேயே பவுண்டரி அடித்தார். சேவாக் 31 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில் நான்கு பவுண்டரிகளும், ஐந்து சிக்ஸர்களும் அடங்கும். டைமண்ட்ஸ் அணியின் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் 31 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தார். டைமண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது. ராயல்ஸ் அணியின் பந்துவீச்சில் அப்துல் ரசாக் 4 விக்கெட்களும், சோயிப் அக்தர் 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.

அதைத்தொடர்ந்து 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராயல்ஸ் அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஸ்மித், மேட் பிரையர் ஆகியோர் களமிறங்கினர். பிரையர் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் கல்லிஸ் களமிறங்கினார். ஸ்மித் 23 ரன்களிலும், கல்லிஸ் 36 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதைத்தொடர்ந்து வந்த சாகித் அப்ரிடி டக் அவுட் ஆனார்.

அதன்பின் ஒவாயிஸ் ஷாவுடன், கிராண்ட் எலியட் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடியாக விளையாடி ரன் குவித்தனர். ஒவாயிஸ் ஷா அரைசதம் அடித்தார். ராயல்ஸ் அணி 15.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்து ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஒவாயிஸ் ஷா 74 ரன்கள் (34 பந்து), எலியட் 21 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தனர். ஒவாயிஸ் ஷா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். நாளை இரண்டாவது டி20 போட்டி நடைபெறுகிறது.




No comments

Powered by Blogger.