February 24, 2018

“உங்களது பிரார்த்தனையை, மிக அவசியமாக வேண்டுகிறோம்” - பூமியின் நரகிலிருந்து ஒரு விதவைத் தாயின் குரல்


சிரியாவின் கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டு கிழக்கு கெளத்தா பிராந்தியத்தை, ‘பூமியில் உள்ள நரகம்’ என்று வர்ணித்திருக்கும் ஐ.நா பொதுச் செயலாளர், அங்கு உடன் மோதல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

“கிழக்கு கெளத்தாவில் இன்னும் காத்திருக்க முடியாது என்று நான் நினைக்கிறேன்” என்று பொதுச் செயலாளர் அன்டோனியோ குடரஸ் ஐ.நா பாதுகாப்பு சபையில்  குறிப்பிட்டார்.

இந்நிலையில் அங்கு 30 நாள் யுத்த நிறுத்தம் ஒன்றை கொண்டுவரும் தீர்மானம் ஒன்றுக்கு பாதுகாப்பு சபை திட்டமிட்டுள்ளது.

ரஷ்யாவின் வான் பலத்தின் உதவியோடு சிரிய அரச படை கிழக்கு கெளத்தா மீது உக்கிர தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த பிராந்தியமானது தலைநகர் டமஸ்கஸுக்கு அருகில் இருக்கும் கடைசி கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டு பகுதியாகும்.
எனினும் தீவிரவாதிகளிடம் இருந்து இந்த பகுதியை விடுவிக்க முயற்சிப்பதாக சிரிய இராணுவம் குறிப்பிட்டுள்ளது. எனினும் அந்த பிராந்தியத்தில் பொதுமக்கள் இலக்குகளே தாக்கப்பட்டு வருகதாக குற்றம்சாட்டப்படுகிறது.

“இது எமது கண்முன்னே நிகழும் மனிதப் பேரவலம். இந்த பயங்கரத்தை தொடருவதற்கு விட்டு வைக்க முடியாது என்று நான் நினைக்கிறேன்” என்று குடரஸ் குறிப்பிட்டுள்ளார்.

மோதல் நிறுத்தப்படுவது, அவசர சிகிச்சை தேவைப்படும் நூற்றுக்கணக்கான மக்களை அங்கிருந்து வெளியேற்ற அனுமதிக்கும் என்பதோடு மனிதாபிமான உதவிகள் பிராந்தியத்தை அடைவதற்கு உதவும் என்று அவர் குறிப்பிட்டார்.

பாதுகாப்பு சபையில் குவைட் மற்றும் சுவீடன் பரிந்துரைத்த நகல் தீர்மானத்தில், அவசர சிகிச்சைக்கு மக்களை வெளியெற்றுவது மற்றும் மனிதாபிமான உதவிகளை விநியோகிக்க கோரப்பட்டுள்ளது.

“காட்டுமிராண்டி அஸாத் அரசிடம் இருந்து” பொது மக்களை பாதுகாப்பற்கு உடன் நடவடிக்கை தேவைப்படுவதாக ஐ.நாவுக்கான அமெரிக்க தூதுவர் நிக்கி ஹாலி குறிப்பிட்டார்.
எனினும் இந்த தீர்மானத்தை நிறைவேற்ற விட்டோ அதிகாரம் கொண்ட ரஷ்யா அனுமதிக்காது என்று அவதானிகள் நம்புகின்றனர்.
நிலைமை குறித்து பேச்சுவார்த்தை நடத்த அவசர பாதுகாப்பு சபை கூட்டம் கூடப்பட வேண்டும் என்று ரஷ்யா குறிப்பிட்டபோதும், சிரிய இராணுவத்திற்கு தனது தாக்குதலை தொடர மேலும் கால அவகாசம் வழங்கும் திட்டமாகவே மேற்கத்தேய இராஜதந்திரிகள் இதனை கருதுகின்றனர்.

சிரிய அரசுக்கு ஆதரவு அளித்து வரும் ரஷ்யா, சிரிய கிளர்ச்சியாளர்களுடனான அமைதி பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததாக கடந்த புதன்கிழமை குறிப்பிட்டது.

எனினும் சிரிய அரசின் மற்றொரு நெருங்கிய நட்பு நாடான ஈரான், கிழக்கு கெளத்தாவில் நிலவும் பதற்றத்தை தணிக்க சிரியா, ரஷ்யா மற்றும் துருக்கியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக குறிப்பிட்டுள்ளது.

இந்த பிராந்தியத்தில் மோதலை முடிவுக்கு கொண்டுவரும் அழைப்பில், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயித் ராத் ஹுஸைனும் இணைந்துள்ளார்.

“இந்த பயங்கரத்தை முடிவுக்கு கொண்டுவர சர்வதேச சமூகத்தால் தீர்வொன்று காண இன்னும் எவ்வளவும் கொடூரங்கள் இடம்பெற வேண்டும?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

கிழக்கு கெளத்தா பிராந்தியத்தை கைப்பற்றும் முயற்சியாக சிரிய அரச படை கடந்த ஞாயிறு இரவு தொடக்கம் உக்கிர தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இந்த பிராந்தியத்தில் பணியாற்றும் மருத்துவர் ஒருவர் அங்கு நிலைமை ‘பேரழிவு’ கொண்டதென வர்ணித்துள்ளார். இங்கு வாழும் மக்களை சர்வதேச சமூகம் கைவிட்டதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
“அவர்கள் மருத்துவமனைகள், கடைகள், சந்தைகள், பள்ளிவாசல்கள் என்று எல்லாவற்றையும் இலக்கு வைக்கிறார்கள்” என்று பஸ்ஸாம் என்ற மருத்துவர் பி.பி.சி தொலைக்காட்சிக்கு குறிப்பிட்டுள்ளார்.

“ஒவ்வொரு நிமிடத்திலும் 10 அல்லது 20 வான் தாக்குதல்களை சந்திக்கிறோம். நான் சிகிச்சை அளித்த சிலர் ஒன்று அல்லது இரண்டு நாள் கழித்து மீண்டும் காயப்பட்டு வருகிறார்கள்.
எங்கே சர்வதேச சமூகம்? என்கே பாதுகாப்பு சபை?... அவர்கள் எம்மை கைவிட்டுவிட்டார்கள். எம்மை கொல்வதற்கு அவர்கள் விட்டுவிட்டார்கள்” என்று அந்த மருத்துவர் குறிப்பிட்டார்.

கடந்த மூன்று நாட்களில் கிழக்கு கெளத்தாவில் 13 மருத்துவமனைகள் தாக்கப்பட்டு அல்லது அழிக்கப்பட்டிருப்பதாக எல்லைகள் அற்ற மருத்துவர் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இதுவரை பெரும்பாலும் வான் தாக்குதல்களில் குறைந்தது 346 பேர் கொல்லப்பட்டு மேலும் 878 பேர் காயமடைந்திருப்பதாக ஐ.நா குறிப்பிட்டுள்ளது. எனினும் சரியான எண்ணிக்கையை கணிப்பது கடினமாக இருப்பதாக அது குறிப்பிடுகிறது.

கிழக்கு கெளத்தாவில் மருத்துவ செயற்பாடுகளை மேற்கொள்ளும் மருத்துவ பராமரிப்பு மற்றும் நிவாரண அமைப்பின் ஒன்றியம் வெளியிட்ட தகவலில் கடந்த புதன்கிழமை கெளத்தாவில் மேலும் 70 பேர் கொல்லப்பட்ட நிலையில் அங்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 366 ஆக அதிகாரித்திருப்பதாக தெரிவித்துள்ளது.

கடந்த ஞாயிறு தொடக்கம் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 310 என பிரிட்டனை தளமாகக் கொண்ட மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.

ஜிஸ்ரீன் மற்றும் க்பார் பட்னா சிறு நகர்களில் கடந்த புதன்கிழமை அரசு தாக்குதல்களை நடத்தியுள்ளது. முன்னதாக கடந்த செவ்வாயன்று அந்த பிராந்தியத்தில் 10 சிறு நகர்கள் மற்றும் கிராமங்களில் அரசு குண்டு மழை பொழிந்தது.
கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து கிழக்கு கெளத்தாவுக்கு மனிதாபிமான உதவிகளை விநியோகிக்க அரசு அனுமதிப்பதில்லை. இதனால் அங்கு உணவு மற்றும் மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது.

2013 ஆம் ஆண்டு தொடக்கம் அரச படையின் முற்றுகையில் இருக்கும் கிழக்கு கெளத்தா பிராந்தியத்தில் சுமார் 400,000 மக்கள் வாழ்கின்றனர்.

அசாத் அரசை கவிழ்க்க போராடும் கிளர்ச்சியாளர்கள் வசம் எஞ்சியிருக்கும் சிரியாவின் வடக்கு மற்றும் தென்மேற்கில் இத்லிப் மாகாணம் மற்றும் அலப்போ மாகாணத்தின் ஒரு பகுதியுடன் கிழக்கு கெளத்தாவும் ஒன்றாகும். எனினும் சிரியாவின் ஒவ்வொரு அங்குலத்தையும் விடுவிப்பதாக ஜனாதிபதி பஷர் அல் அஸாத் உறுதிபூண்டுள்ளார்.

இந்நிலையில் கிளர்ச்சியாளர்களை சரணடைய செய்வதற்காக அரச படை குடியிருப்பு கட்டுமானங்களை வேண்டுமென்று தாக்குதவதாக குடியிருப்பாளர்கள் மற்றும் அரச எதிர்ப்பாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

பல குடியிருப்பாளர்களும் தற்போது நிலவறைகளில் பாதுகாப்பு பெற்றுள்ளனர்.

“அரசு மற்றும் ரஷ்யா வெறும் சிவிலியன்களையே இலக்கு வைக்கின்றன. நாங்கள் சிவிலியன்கள், அவர்கள் ஏன் எம்மை இலக்கு வைக்கிறார்கள்?” என்று தூமா நகர குடியிருப்பாளரான காலித் ஷதீத் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார். தொலைபேசியில் அவர் பேட்டி அளிக்கும்போது பின்னணியில் குண்டு சத்தங்கள் கேட்டதாக ரோய்ட்டர்ஸ் குறிப்பிட்டுள்ளது.

தூமாவில் நிலவறையில் தனது ஐந்து குழந்தைகளுடன் இருக்கும் பசம் அப்துல்லாஹ் என்ற விதவைத் தாய், “நாம் உங்களது பிரார்த்தனையை மிக அவசியமாக வேண்டி நிற்கிறோம்” என்று தொலைபேசி அழைப்பு துண்டிக்கப்படும் முன்னர் கடைசியாக குறிப்பிட்டுள்ளார். 

0 கருத்துரைகள்:

Post a Comment